Published:Updated:

`தி நியூ நார்மல்'... மே 17-ம் தேதிக்குப் பிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

கொரோனா
கொரோனா

மார்ச் மாதத்தில் இந்திய அரசு, தேசம் முழுவதும் ஊரடங்கு என அறிவித்தபோது, பெரும்பாலானோருக்கு அதில் விருப்பமில்லை, ஊரடங்கில், வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதில், மனச்சிக்கல், உடல் சிக்கல், பணச்சிக்கல் இப்படி எண்ணற்ற சிக்கல்கள் இருந்தன.

#NewNormal - இணையம் கடந்த சில நாள்களாகக் காணும் இந்த ஹேஷ்டேக், இணையம் தாண்டியும் பரவலாக வேண்டிய தருணம் இது. கொரோனா, அனைத்தையும் மாற்றியிருக்கிறது. இந்தப் புதிய உலகை, புதிய வாழ்க்கையைத்தான் நியூ நார்மல் என்கிறார்கள். நியூ நார்மலைப் பார்க்கும் முன் நம் அன்றாடம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்துவிடுவோம்.

மோடியும் 'ஊரடங்கு 4.0 நீங்கள் இதுவரை பார்த்திராதது' எனச் சொல்லியிருக்கிறார். "கொரோனா சீனாவில் இருக்கும் போதெல்லாம் வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு, நம்ம ஊருக்கு வந்தபிறகு வெளியே வரச் சொல்கிறீர்களே" எனக் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். பெயருக்கு லாக்டௌன் என்பது என்னவோ இன்னமும் நடைமுறையில்தான் இருக்கிறது. ஆனால் தமிழகம் மெல்லப் பழைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. பெருநகரங்களில் சாலைகளில் சிக்னல் போடப்பட்டு, பக்கத்தில் நிற்கும் பைக்காரரிடம் "மாஸ்க் போட்டுக்கலையா?" எனக் கேட்கும் அளவுக்கு இருக்கிறது.

ஊரடங்கு
ஊரடங்கு

மார்ச் மாதத்தில் இந்திய அரசு, தேசம் முழுவதும் முடக்கம் என அறிவித்தபோது பெரும்பாலானோருக்கு அதில் விருப்பமில்லை, ஊரடங்கில், வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதில் எண்ணற்ற சிக்கல்கள் இருந்தன. மனச்சிக்கல், உடல் சிக்கல், பணச்சிக்கல் இப்படிப் பல பிரச்னைகள் மக்களை வாட்டி எடுத்தன. இப்போது லாக்டௌன் ஆரம்பித்து ஐம்பது நாள்களை (மே 13 - ஐம்பதாவது நாள்) கடந்துவிட்டோம். வீட்டில் இருப்பது பலருக்குப் பழகியிருக்கிறது. மீண்டும் வெளியே வர பலருக்குப் பயமிருக்கிறது. பலரது வேலை பறிபோயிருக்கிறது, அல்லது பறிபோகும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. சிலருக்குச் சம்பளம் குறைந்திருக்கிறது. இதுவரை பழகிய எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இனி உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, அந்த இயல்பே, நாம் அறிந்திராத, பழகாத, ஒரு புதிய வாழ்க்கைமுறையாக இருக்கும், அதைக் குறிப்பதே 'நியூ நார்மல்'. மே 17 ஆம் தேதிக்குப் பிறகு என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? இந்த லாக்டௌன் எல்லாம் முடிந்த பிறகு நம் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களுக்கு மக்களிடமும், பிறக்கட்சி அரசியல்வாதிகளிடமும் கலவையான விமர்சனங்கள் எழுகின்றன. மக்கள் நலனுக்கு எதிரானதாக இருக்கும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு உயர்நீதிமன்றம் தடை போடுகிறது. தமிழகத்தில் கூட அரசின் உத்தரவால் டாஸ்மாக் திறக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது. பிறகு, உச்சநீதிமண்றத்துக்கு மேல்முறையீட்டுக்குச் சென்று மீண்டும் கடைகள் திறக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில், ஏற்படும் இத்தகைய முரண்களை நீக்குவதற்கு மத்திய அரசு பல அதிகாரங்களை தன் கையில் எடுக்கும் சூழ்நிலை உருவாகக் கூடும்.

இதுவரை ஐந்து முறை மாநில முதல்வர்களைக் காணொலிக் காட்சி மூலம் சந்தித்த பிரதமர் 'மத்திய அரசு அதிக அதிகாரங்களைப் பெறும்' எனும் தொனியில் பேசியிருக்கிறார். குழப்பங்களற்ற, சரியாகத் திட்டமிடப்பட்ட படிப்படியான முறையில் இந்த லாக்டௌன் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு மத்திய மாநில அரசுகளிடையே நிறைய ஒத்துழைப்பும், வெளிப்படைத்தன்மையும் இருப்பது அவசியம். சுருக்கமாகச் சொல்வதானால், அதிகாரப் பங்கீட்டில் பெரும் அரசியல் மாற்றங்களைக் காணவிருக்கிறது இந்தியா. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரப் பகிர்வே நாம் காணவிருக்கும் 'நியூ நார்மலாக' இருக்கக் கூடும்.

பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்
பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்

மத்திய அரசு பொருளாதாரத்தைத் தொடர்ந்து நான்காவது முறையும் முடக்காது என்றே பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள். அரசு பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகளை அனுமதிக்க வாய்ப்பிருக்கிறது. கொரோனாவைத் தாண்டி, பருவ மழைக் காலத்தில் வரும் மற்ற நோய்த் தொற்றுகளைச் சமாளிக்க இந்தியா தயாராக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர். சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கே மக்கள் இன்று சிரமப்படும் வேளையில், உள்நாட்டுச் சுற்றுலா அதிகரிக்கும் எனப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருப்பது, இந்தியப் பொருளாதாரம் முழு வேகத்தில் திறக்கப்படும் எனப் பொருள்படுவதாகவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

`ரூ.20 லட்சம் கோடி நிவாரணம்; 9 புதிய திட்டங்கள் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

மத்திய அரசு, கொரோனாவைச் சமாளிக்க 20 லட்சம் கோடி நிதி ஒதுக்கி அறிவித்திருந்த போதும், அந்த நிதி எங்கிருந்து பெறப்படும் என்பது குறித்தோ, அதன் முழுப் பகிர்வு விவரமோ மக்களுக்குத் தெளிவாக விளக்கப்படவில்லை. ஆனால், தொடர்ந்து பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோர் தொழில் துறைக்கு, குறிப்பாகச் சிறு குறு தொழில் வளர்ச்சிக்குக் கணிசமான தொகை செலவிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். தேசிய சுயசார்பு கொள்கை வெகுவாகப் பின்பற்றப்படும் என்பதையே இது குறிக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளின் சர்வதேச அளவில் கிளை பரப்பிய உலகமயமாதல் எனும் கருத்து மாற்றம் காணும் நேரம் இது. ஆனால், கிருமியையே இறக்குமதி செய்யும் காலத்தில் நுகர்வுப் பொருள்களுக்கு இனி உள்நாடே ஒரே தீர்வு என்பதெல்லாம் எவ்வளவு பெரிய கனவு?

வேலைக்காக வெளிநாடு செல்வது மட்டுமல்லாமல், வெளிமாநிலம் செல்வது கூட வெகுவாகக் குறையும். வெளிமாநிலப் பணியாளர்களை அதிகம் பணியமர்த்தும் மாநிலங்களில் தொழிலாளர்களின் தேவை அதிகரிக்கும். ஆனால், பலர் வேலையிழப்பைச் சந்திக்கக் கூடும் என்பதால், குறைவான ஊதியத்துக்குப் பலர் பணியில் அமர்த்தப்படுவது நிகழலாம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் இயல்பாகவே இனி மக்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்குவார்கள் என்கிறது ஓர் அறிக்கை. ஷேர் ஆட்டோ முதல் விமானம் வரை மக்கள் பயணம் செய்யும் விதம் மாறலாம். மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க ஏதுவான வகையில்தான் அனைத்து சேவைகளும் வழங்கப்படும். பேருந்துகளில் இருக்கைகள் இடைவெளிவிட்டு அமரும் வகையில் மாற்றியமைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. இனி பெரும்பாலும், முன்பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் என்றொரு நிலை வரலாம். டாக்ஸி சேவைகளில் ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையே பிளாஸ்டிக் தடுப்புச் சுவர் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் குறையும். சூப்பர் மார்க்கெட்டுகள் இனி பழையபடி இயங்குவது கடினம். மால்களில் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் அனுமதிக்கப்படுவர். ஷாப்பிங் செய்வதற்கு முன்பதிவு செய்யவேண்டிய நிலை ஏற்படலாம்.

மக்கள் கூடும் நிகழ்வுகள் குறையும். திருமணம் உள்ளிட்ட விசேஷங்களின் வடிவமே மாறும். இந்தியாவில் இந்த முடக்கக் காலத்தில், குடும்ப வன்முறைகள் இருமடங்காக அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இதனால் பல மணமுறிவுப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. வீட்டுக்குள் அடைபட்டிருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தினால், உறவுச் சிக்கல்கள் அதிகரிக்கக் கூடும். அதைத் தவிர்க்கத் தனிப்பட்ட முறையில் மக்கள் சற்று நிதானித்துச் செயல்பட வேண்டும் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. எனவே, குடும்பம் என்ற அமைப்பின் அடிப்படையிலே சில மாற்றங்கள் வரக்கூடும்.

மக்கள் திரைப்படங்கள் பார்க்கும் அனுபவமும் மாறும். இருக்கைகளில் ஒருவர் விட்டு ஒருவர் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்கப்படக் கூடும் என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள். திரைப்படங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களில் எல்லாம் மீண்டும் வர்த்தகம் மேம்படக் குறைந்தது ஒருவருடக் காலமாவது ஆகும். அதன்பிறகும் மனதளவில் இவையெல்லாம் இல்லாமல் பழக்கப்பட்டிருக்கும் மக்கள் மீண்டும் பழையபடி இதற்குச் செலவிடத் தயங்குவர்.

திருமணம்
திருமணம்

மே 17 ஆம் தேதிக்குப் பிறகான ஊரடங்கு 4.0 - வில், நோய்ப் பரவல் அதிகம் இருக்கும் இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் பல சேவைகள் மக்களுக்கு மீண்டும் கிடைக்கப்பெறும். ஆனால் பெரும் மாற்றங்களோடு! மாற்றம் ஒன்றுதான் மாறாதது எனும் ஒரே புரிதலோடும், நம்பிக்கையுடனும் முன்னேறுவது மனித குலத்துக்கு ஒன்றும் புதிதான விஷயமல்ல. எனவேதான் கொரோனாவுடனும் வாழப் பழகிக் கொள்வர் எம் மக்கள். அதற்கான பாதையைச் சற்று எளிதாக்குவது மட்டுமே அரசாங்கத்தின் பணி.

பிழைத்திருப்பதற்கு முன் எவையுமே முக்கியமில்லை என்பதை மானுட குலமே இன்று புரிந்துகொண்டிருக்கிறது. தக்கன பிழைக்கும் என்பது மட்டுமே உண்மை. நம்மை 'தக்கன' ஒன்றாக ஆக்கிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

அடுத்த கட்டுரைக்கு