`கோவிட்-19 பரிசோதனைக் கட்டணத்தைக் குறைக்கலாம்..!' - மாநிலங்களுக்கு பரிந்துரைத்த ஐ.சி.எம்.ஆர்

மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள தனியார் ஆய்வகங்களுடன் கலந்து ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வரலாம்.
இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றைக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR), தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு கொரோனா பரிசோதனைக் கட்டணமாக ரூபாய் 4,500 நிர்ணயம் செய்திருந்தது.

இந்த அதிகமான விலைதான் மக்கள் அதிக எண்ணிக்கையில் பரிசோதனை மேற்கொள்ள முடியாததற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இப்போது பரிசோதனைக் கருவிகள் தேவைக்கு ஈடுகொடுக்கும் எண்ணிக்கையில் இருப்பதால், தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகள் பிசிஆர் பரிசோதனை விலையைக் குறைக்கலாம் என்று அறிவித்துள்ளது ஐசிஎம்ஆர்.
ஐசிஎம்ஆரின் நிர்வாக இயக்குநர் பலராம் பார்கவா அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 'இப்போது இந்தியாவில் பிசிஆர் பரிசோதனைக் கருவிகள் தேவையான எண்ணிக்கையில் இருப்பதால், அதற்கான கட்டணம் குறைக்கப்படலாம்' என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் அவர், 'இது குறித்து அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள தனியார் ஆய்வகங்களுடன் கலந்து ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வரலாம்' என்றும் கூறியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, பரிசோதனைக்கான கருவிகள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அதனால்தான் பரிசோதனையின் விலை அதிகமாக இருந்தது. இது ஒருபுறம் இருக்க, 182 தனியார் ஆய்வகங்கள் பிசிஆர் பரிசோதனையை இலவசமாகச் செய்துகொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பல பொதுநல ஆர்வலர்கள், பிசிஆர் பரிசோதனைக்கு ஐ.சி.எம்.ஆர் நிர்ணயித்திருந்த ரூ. 4,500 கட்டணம் அதிகம் என்றும், அதற்கான சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுப்பியபடி இருந்தனர். இதற்கிடையில் கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் பரிசோதனைக்கான தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளின் விலை ரூ. 4,500-ஐவிட குறைவாக இருந்தது. என்றாலும், குடும்பத்தில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டிய சூழலில், அந்த விலை நிர்ணயமும் அதிகமாகவே இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இப்போது ஐசிஎம்ஆர் அறிவித்துள்ள இந்தக் கட்டணக் குறைப்பு, அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.