Published:Updated:

`மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு பாதிப்பு... தன்னால் குணமாகியிருக்கலாம்!'- ஐசிஎம்ஆர் #Corona

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

'நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் ஹாட்ஸ்பாட்டில் உள்ள மக்களுக்கு, இந்நேரம் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு அவர்கள் அதிலிருந்து மீண்டிருக்கக் கூடும்' என்று செரோ சர்வே தனது முடிவில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஐசிஎம்ஆர் அமைப்பின் வெளியிடப்படாத செரோ சர்வே (Sero survey) ஆய்வு முடிவு, அதிர்ச்சிகரமான தகவலை அளிக்கிறது. அதன்படி, 'இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகையினருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சரியாகியிருக்கக் கூடும்' என ஐசிஎம்ஆர் அமைப்பு தெரிவிக்கிறது. இது, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 15 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை ஆகும்.

கொரோனா - உலகம்
கொரோனா - உலகம்

நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் ஹாட்ஸ்பாட்டில் உள்ள மக்களுக்கு, இந்நேரம் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு அவர்கள் அதிலிருந்து மீண்டிருக்கக் கூடும் என்று செரோ சர்வே தனது முடிவில் தெரிவித்துள்ளது. இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படாத இந்த ஆய்வறிக்கை, மத்திய இணை அமைச்சகத்துக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வறிக்கையில் மும்பை, புனே, டெல்லி, அகமதாபாத், இந்தூர் ஆகிய நகரங்களில், தொற்று எண்ணிக்கை இதர ஹாட்ஸ்பாட் பகுதிகளைவிட 100 மடங்கு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, கொரோனா தொற்றால் அதிக பாதிப்பு ஏற்பட்ட இடங்களிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு மாதிரிகள், கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் மும்பை, தானே, புனே, அகமதாபாத், சூரத், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர், சென்னை ஆகிய இடங்களில் சேகரிக்கப்பட்டன. மொத்தம் 500 மாதிரிகள் இந்த ஹாட்ஸ்பாட் பகுதிகளின் வெவ்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்டன.

கொரோனா
கொரோனா

இந்த நகரங்கள்தான் இந்தியாவின் மொத்தக் கொரோனா தொற்று எண்ணிக்கையில் 70% பங்கு வகிக்கின்றன என்று ஐசிஎம்ஆர் அமைப்பு ஏற்கெனவே கூறியிருந்தது. இதோடு, கூடுதலாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களின் 60 மாவட்டங்களிலும் ஆய்வு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. கொரோனா தொற்றின் எதிர்ப்பொருள்கள் (Antibodies) ரத்தத்தில் இருக்கிறதா என்பதை அறிய பொதுமக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வை மேற்கொள்வதற்காக, எலிசாவை (ELISA - Enzyme linked immunosorbent assay) அடிப்படையாகக் கொண்ட ஆன்டிபாடி சோதனைகள் செய்யப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு