Published:Updated:

`கொரோனா சிகிச்சைக்கு என்ன கட்டணம்?' - அதிர்ச்சி கொடுத்த ஐ.எம்.ஏ தமிழகப் பிரிவின் பரிந்துரை

கொரோனா
கொரோனா

இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகப் பிரிவு, கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதுப்பற்றி அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது.

கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனைகள் பொதுமக்களிடம் அளவுக்கதிகமாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதற்கான மருத்துவமனை ரசீதுகள் ஆங்காங்கே வெளிவரத் தொடங்கியதை அடுத்து, அரசு இந்தக் கட்டணங்களை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குரலெழுப்ப ஆரம்பித்தார்கள்.

corona fees
corona fees

இதன் தொடர்ச்சியாக வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் என்பவர் பொது நல வழக்கொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``தனியார் மருத்துமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்’’ என்று அறிவித்தார்.

இந்தியன் மெடிக்கல் அசோசியனின் தமிழகப் பிரிவு கட்டணங்கள் தொடர்பான தனது பரிந்துரையை சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷூக்கு அனுப்பியது. அதில், ``லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாள்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 வசூலிக்கப் பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல், தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாள்கள் கட்டணமாக ரூ.4,31,411 வசூலித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டண விவரங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது.

கொரோனா
கொரோனா

இதுதொடர்பாக தமிழக மருத்துவ மற்றும் ஊரக நலப்பணித்துறை இயக்குநர் டாக்டர் குருநாதனிடம் பேசிய போது, ``மக்களின் கஷ்டம் எங்களுக்கு நன்றாகவே புரிகிறது. இதுதொடர்பாக இன்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர் பிரஸ் மீட்டில் பேசுவார். அப்போது கொரோனா கட்டண விஷயத்தில் மக்களுக்கு ஆதரவாக நிச்சயம் தகவல் இருக்கும்" என்று ஆற்றுப்படுத்துகிறார்.

சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் பேசுகையில், ``இந்தக் கட்டண விவரங்களைப் பார்த்தாலே பகீரென்று இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு, இதனால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தகுந்த ஆதாரங்களுடன் பொதுநல வழக்கொன்றைப் போடுவது மட்டுமே" என்கிறார்.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்குச் சிகிச்சை பெறலாம். இதற்காக பொதுமக்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

corona
corona

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கும் அதிகபட்ச கட்டண விவரத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளொறுக்கு அதிகபட்ச தொகுப்புக் கட்டணம் (Package) Grade A1 மற்றும் A2 மருத்துவமனைகளில் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறி உள்ளவர்கள் பொதுவார்டில் சிகிச்சை பெற ரூ.5,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற நாளொன்றுக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.10,000 முதல் 15,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Grade A3 மற்றும் A4 மருத்துவமனைகளில் பொதுவார்டு கட்டணம் நாளொன்று ரூ.5,000 எனவும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற நாளொன்றுக்குத் தொகுப்பு கட்டணமாக ரூ.9,000 முதல் 13,500 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

வெயில் காலத்தில் 20 அடி தூரத்துக்குப் பரவும் கொரோனா வைரஸ்... எப்படி தப்பிப்பது? #ExpertOpinion

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் பொதுமக்கள் புகார்களை 1800 425 3993 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொண்டு அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மொத்தப் படுக்கைகளில் 25 சதவிகிதப் படுக்கைகளை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க ஒதுக்கவும் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு