Published:Updated:

இந்தியா 75: சராசரி ஆயுள்காலம் முதல் காப்பீடு வரை - சிறப்பான மருத்துவத்துறை சாதனைகள் #IndependenceDay

மருத்துவம்

சுதந்திரத்தின்போது 32 வயதாக இருந்த இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம், சிறந்த மருத்துவ சேவையின் பயனாக தற்போது 70 ஆக உயர்ந்துள்ளது. இந்த 75 வருடங்களில் நாம் சுகாதாரத் துறையில் செய்துள்ள சாதனைகளும் கொண்டுவந்துள்ள ஆக்கபூர்வமான மாற்றங்களும் மிகச் சிறப்பானவை.

இந்தியா 75: சராசரி ஆயுள்காலம் முதல் காப்பீடு வரை - சிறப்பான மருத்துவத்துறை சாதனைகள் #IndependenceDay

சுதந்திரத்தின்போது 32 வயதாக இருந்த இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம், சிறந்த மருத்துவ சேவையின் பயனாக தற்போது 70 ஆக உயர்ந்துள்ளது. இந்த 75 வருடங்களில் நாம் சுகாதாரத் துறையில் செய்துள்ள சாதனைகளும் கொண்டுவந்துள்ள ஆக்கபூர்வமான மாற்றங்களும் மிகச் சிறப்பானவை.

Published:Updated:
மருத்துவம்

நம் இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75 வருடங்களைப் பூர்த்தி செய்கிறது. இந்த 75 வருடங்களில் நாம் சுகாதாரத் துறையில் செய்துள்ள சாதனைகளும் கொண்டுவந்துள்ள ஆக்கபூர்வமான மாற்றங்களும் மிகச் சிறப்பானவை. அதன் தொகுப்பை இங்கே பார்ப்போம்.

பிரசவம்
பிரசவம்

1947-ம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றபோது, கர்ப்பகாலத்திலும் பிரசவத்தின்போதும் ஒரு லட்சம் குழந்தை பிறப்புக்கு 2,000 தாய்மார்கள் மரணமடைந்து வந்தனர்.

அப்போது குழந்தையைப் பாதுகாப்பாக பிரசவிக்க மருத்துவமனைகள் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை. வீட்டுக்கே சென்று பிரசவம் பார்க்கும் பெண்கள் மட்டுமே இருந்து வந்தனர். கர்ப்பகாலத்திலும் முறையான கவனிப்பின்றி பல பெண்கள் மாண்டு வந்தனர்.

ஆனால், தற்போது கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின்போது தாய் இறப்பு என்பது, ஒரு லட்சம் குழந்தை பிறப்புக்கு 103 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆம்... தற்போது நாட்டில் நிகழும் 88.6% பிரசவங்கள் மருத்துவமனைகளில் மருத்துவ கண்காணிப்பில் நிகழ்கின்றன. கூடவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரத்யேகமாகத் தாய் சேய் நலப்பிரிவு இயங்கி வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் காரணமாக இந்தியாவில் ஒரு தாய் இலவசமாக எந்த பணச் செலவும் இல்லாமல் குழந்தையைப் பாதுகாப்பாக பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் ஏற்பட்டுள்ளது.

பிறந்த குழந்தை இறப்பு விகிதமும் 1947-ம் ஆண்டு ஆயிரம் பிறப்புக்கு 150 என்று இருந்த நிலையில் தற்போது அது 27 ஆகக் குறைந்துள்ளது.

குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு , தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றின் பலனாக சிசு மரணங்களும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணங்களும் கட்டுக்குள் வந்துள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையம்
ஆரம்ப சுகாதார நிலையம்

இந்தியாவில் சுகாதாரத்துறையைப் பொறுத்தமட்டில் மூன்றடுக்கு முறை நாட்டின் சுதந்திரம் தொட்டே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கிராமங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், தாலுகாவுக்கு ஒரு பொது மருத்துவமனை, சில மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற நிலை இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சுகாதார செவிலியர் மற்றும் ஆஷா பணியாளர்கள் மக்களின் ஆரோக்கியத்தைத் துல்லியமாக சுகாதாரத்துறைக்கு எடுத்துரைக்கும் சேவகர்களாக செயல் படுகின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளித்து, அந்தந்தப் பகுதிகளில் தொற்றும் நோய்கள் பரவாமல் கண்காணிக் கின்றனர். அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் உள்நோயாளி பிரிவுகள் சிறப்பாக இயங்குகின்றன.

மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு மற்றும் மேல் சிகிச்சைகள் நடக்கின்றன. இந்தியாவில் அனைத்து அரசு மருத்துவமனை களிலும் ஆரம்பகட்ட சிகிச்சை முதல் அறுவைசிகிச்சை வரை அனைத்தும் இலவசம் என்பதால், ஏழை எளிய மக்கள் தங்கள் கையில் இருந்து பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இத்தகைய சிறந்த மருத்துவ சேவையின் பயனாக இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் சுதந்திரத்தின் போது 32 வயதில் இருந்து தற்போது 70 ஆக ஏற்றம் பெற்றுள்ளது.

சுதந்திரம் பெற்ற காலத்தில் பெரும் அச்சுறுத்தலாய் இருந்த மலேரியா, தொழு நோய் போன்ற, பல லட்சம் மக்களை வருடந்தோறும் கொன்றொழித்து வந்த தொற்று நோய்களை அதற்குரிய திட்டங்களை வகுத்து சிறப்பாகச் செயல்படுத்தி இந்த நோய்களின் தாக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி இயக்கம் 1970-களில் வீரியம் பெற்று 1979-ல் பெரியம்மை நோயை வெற்றி கண்டோம்.

போலியோ எனும் இளம்பிள்ளை வாதம் 1990 வரை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளை முடமாக்கி வந்தது. 1995 -ல் இருந்து தேசிய போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து முகாம்கள் வருடந்தோறும் நடத்தப்பட்டு அதன் பலனாய் 2014 -ல் போலியோ ஒழிக்கப்பட்டது. இந்தியாவில் 2011-ல் இருந்து போலியோ தொற்றாளர் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதயநோய், புற்றுநோய் போன்றவற்றை விரைவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொற்றா நோய்களுக்கான அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவம்
மருத்துவம்

ஏழை மக்களின் சுகாதாரம் சார்ந்த செலவினத்தைக் குறைக்க பிரதம மந்திரி (AB PM JAY) காப்பீட்டுத் திட்டத்தில் இந்தியா முழுவதும் பயனாளிகள் பலனடைந்து வருகிறார்கள். மேற்சொன்ன திட்டத்துடன் இணைந்து, தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு உயிர்க்கொல்லி தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் அனைத்தும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது . மேலும், கொரோனா பெருந்தொற்று காலமான தற்போது கூட பூஸ்டர் டோஸ் உட்பட கொரோனா தடுப்பூசிகள் அனைவருக்கும் இலவசம் என்ற நிலை இருப்பது சிறப்பானது.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

பன்னோக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இதய அறுவைசிகிச்சைகளில் இருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வரை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறாக கடந்த 75 வருடங்களில் சுகாதாரத்துறையில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வியத்தகு சாதனைகளை இந்தியா செய்து வருகிறது. உலக அரங்கில், மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பை பலமாக்குவது என்ற சவாலான சாதனை... தொடரவிருக்கிறது.