Published:Updated:

குமரி: மருத்துவமனைக்கு வராத சுகாதார பணியாளர்கள்; தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம்? -விளக்கும் அதிகாரி

தக்கலை அரசு மருத்துவமனை
தக்கலை அரசு மருத்துவமனை ( பைல் படம் )

``இன்றைய பட்டியலில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத் தயங்கியதால், நாளைய பட்டியலில் இருப்பவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அழைத்திருக்கிறோம்.’’

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும்விதமாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிவைத்தார். முதலில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் அருகேயுள்ள ஆசாரிபள்ளத்தில் அமைந்திருக்கும் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தக்கலையில் அமைந்துள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனை ஆகிய நான்கு மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் அரவிந்த் தொடங்கிவைத்தார். இந்தநிலையில், தக்கலையிலுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலையிலிருந்து மதியம் வரை ஒரு சுகாதாரப் பணியாளர்கூட தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வரவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு டாக்டர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் தயங்குவதாகத் தகவல் வெளியானது. ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், தக்கலை மருத்துவமனையில் தடுப்பூசி போட சுகாதாரப் பணியாளர்கள் தயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மதியத்துக்கு மேல் ஒருவர் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கும் காரணம் என்ன என்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் போஸ்கோ ராஜிடம் பேசினோம். ``கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு சென்டர்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்துவருகிறது. ஒவ்வொரு சென்டரிலும் நூறு பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போடுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இன்று நான்கு சென்டர்களிலும் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

சுகாதாரத்துறை துணை இயக்குநர் போஸ்கோராஜ்
சுகாதாரத்துறை துணை இயக்குநர் போஸ்கோராஜ்

தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத் தயங்குவதாகத் தகவல் வந்தது. இப்போது ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார். தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று அரசு அறிவிறுத்தியிருக்கிறது. அதனால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இன்றைய பட்டியலில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத் தயங்கியதால், நாளைய பட்டியலில் இருப்பவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அழைத்திருக்கிறோம். நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு