Published:Updated:

புதுச்சேரி: `மாஸ்க் தொழிற்சாலையின் அலட்சியம்?’ -ஒரே கிராமத்தில் 30 பேருக்கு கொரோனா

தனியார் மாஸ்க் தொழிற்சாலை
தனியார் மாஸ்க் தொழிற்சாலை

புதுச்சேரியில் மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரியில் 402 பேருக்கு கொரோனா:

புதுச்சேரியில் தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று மக்களை பீதியடைய வைத்திருக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் ஊரடங்கு உத்தரவின்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த தொற்றின் எண்ணிக்கை இன்றைய தினம் 402 ஆக உயர்ந்திருக்கிறது. 165 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பலனளிக்காமல் இதுவரை 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட கூனிச்சம்பட்டு கிராமம்
பாதிக்கப்பட்ட கூனிச்சம்பட்டு கிராமம்

தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்று முதல் மருந்தகங்கள் தவிர அனைத்துக் கடைகளும், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மாஸ்க் எனப்படும் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

43 தொழிலாளர்களுக்கு கொரோனா:

மேட்டுப்பாளையத்தில் இருக்கும் அரசு தொழிற்பேட்டையில் தனியார் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் கிராமப் பகுதிகளான திருக்கனூர், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, செல்லிப்பட்டு மற்றும் காட்டேரிக்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அதன் உரிமையாளருக்கும் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு பணிபுரிந்த மற்றவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டில் கூனிச்சம்ப்பட்டு கிராமம்
காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டில் கூனிச்சம்ப்பட்டு கிராமம்

உடனே அவர்கள் அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதே கிராமத்தில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 80-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், அந்தக் கிராமம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்தக் கிராமம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு வெளிநபர்கள் உள்ளே நுழையாமலும், கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற முடியாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக் ஒருவரை ஏ.சி-க்களை சரி செய்வதற்காக அழைத்து வந்திருக்கிறது தொழிற்சாலை நிர்வாகம். அங்கு சில தினங்கள் தங்கி ஏ.சி-க்களை சரிசெய்துவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் மூலமாகத்தான் மற்ற தொழிலாளர்களுக்கும் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது சுகாதாரத்துறை.

`ஒரே பகுதியைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா..’ -விழுப்புரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 42  தெருக்கள்

பேரிடர் காலத்தில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தொழிற்சாலைகளுக்கு விதிமுறைகளுடன் விலக்குகள் அளித்திருக்கிறது அரசு. ஆனால், அலட்சியமாக செயல்படும் சில தொழிற்சாலைகளால் தொழிலாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடுகிறது.

அடுத்த கட்டுரைக்கு