Published:Updated:

`தமிழகத்தில் 64 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!’ -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 5 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை முதல் தவணை தடுப்பூசி 64 சதவிகிதம் போடப்பட்டுள்ளது என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்திக் கலனை தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது மூன்றாவது அலை வரும் எனக் கூறப்படும் நிலையில் தமிழக முதல்வர் மத்திய அரசுக்குக் கொடுத்த அழுத்தத்தின் பேரில் தமிழகத்தில் இதுவரை 222 ஆக்சிஜன் உற்பத்திக் கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் கலன் மூலம் தினந்தோறும் 2 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.

தடுப்பூசி
தடுப்பூசி

கொரோனா காலத்தில் தற்காலிகப் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வேலை பார்த்திருந்தாலும், அவர்களை வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை தொடர்ந்து பணியில் அமர்த்தும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அவர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியம் உடனடியாக வழங்கப்படும்.

WHO அங்கீகரித்த உலகின் முதல் மலேரியா தடுப்பூசி; ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு எந்தளவு பயனளிக்கும்?

கடந்த ஆட்சியில் தாரளாமாக தடுப்பூசி கிடைத்தபோதும் 63 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் நான்கரை மாதங்களில் 5.3 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்காக தமிழகத்தில் ஐந்து மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 66 முதல் 67 சதவிகிதம் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 64 சதவிகிதம் போடப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள 331 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து டெங்கு முன்னெச்சரிக்கைப் பணிகளான அபேட் மருந்து தெளித்தல், புகை மருந்து உள்ளிட்ட பல்வேறு தடுப்புப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து செய்துவருகிறது” என்றார்.

இந்த நிகழ்வின்போது தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பழனி எம்.எல்.ஏ ஐ.செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு