Published:Updated:

`ஜூன் இறுதிக்குள் 1 லட்சம் பேர்; குழப்பும் அரசுச் செயலி!’ - கவலையளிக்கும் டெல்லிக் கொரோனா நிலவரம்

மருத்துவமனை
மருத்துவமனை ( AP (மாதிரிப் புகைப்படம்) )

`` படுக்கைகள் இருக்கும்போதுகூட நோயாளிகளைத் திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.”

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,971 பேர் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இதனால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களில் 287 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். தற்போது, பல மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டு வரும் தளர்வுகள் வைரஸ் பரவலை இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது. எனினும், இந்த மாநிலங்களிலும் தளர்வுகள் அதிகளவில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி
டெல்லி

டெல்லியில் தற்போது, 26,000-க்கும் மேற்பட்டவர்கள் வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். அவர்களில் 15,311 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அங்கு கொரோனாவால் பாதிப்படைந்து 708 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தடுக்கும் வழிமுறைகளைக் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு அளித்துள்ள தகவலின்படி ஜூன் மாத இறுதிக்குள் டெல்லியில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிப்படையக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த மருத்துவக் குழுவின் தலைவர் மகேஷ் வர்மா பேசுகையில், ``அகமதாபாத், மும்பை மற்றும் சென்னை போன்ற பிற நகரங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். எங்களுடைய ஆய்வின் படி இந்த மாத இறுதிக்குள் 1 லட்சம் பேர் டெல்லியில் பாதிப்படைவார்கள் “ என்று கூறியுள்ளார்.

`இந்தியா, சீனாவில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டால்..?' -அதிபர் ட்ரம்ப் சொல்லும் `கொரோனா கணக்கு'

தொடர்ந்து பேசிய அவர், ``பாதிப்பு அதிகமாகும் என்பதால் கூடுதலாக 15,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு நாங்கள் பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம். எந்தவொரு நோயாளியும் கஷ்டங்களை அனுபவிக்க நாங்கள் விரும்பவில்லை. வைரஸை எதிர்த்துப் போராடத் தயாராகி வருகிறோம். படுக்கை வசதிகளை ஹோட்டல்களில் ஏற்படுத்தலாம். தற்காலிக சிகிச்சை மையங்களை உருவாக்கலாம். ஆனால், ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்டவை சரியான முறையில் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். கூடுதலாகப் படுக்கை வசதிகளை ஏற்படுத்தக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள பிரபல மருத்துவமனைகளில் ஏற்கெனவே படுக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், டெல்லி அரசு உருவாக்கிய செயலி ஒன்றில் அதிகளவில் மருத்துவப் படுக்கைகள் காலியாக உள்ளதாகக் குறிப்பிடப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் அரசின் மீது எழுந்துள்ளன.

மருத்துவமனை
மருத்துவமனை
AP

மேக்ஸ் , ஃபோர்டிஸ் மற்றும் ஹோலி ஃபேமிலி உள்ளிட்ட டெல்லியின் பிரபல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. `டெல்லிக் கொரோனா’ செயலியில் உள்ள தகவல்களின் அடிப்படையில் என்டிடிவி ஊடகமானது சில மருத்துவமனைகளை அழைத்துப் படுக்கை வசதிகள் குறித்து தகவல்களைக் கேட்டுள்ளது. அதற்குப் பதிலளித்த மருத்துவமனை நிர்வாகம், ``எங்களிடம் காலியான படுக்கைகள் எதுவும் இல்லை. ஆனால், நோயாளிகள் பற்றிய விவரங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டால், அதற்கான வசதிகளை ஏற்படுத்துவோம். தீவிர சிகிச்சைப் பிரிவில்கூட காலிப் படுக்கைகள் இல்லை” எனக் கூறியுள்ளனர். ஆனால், அரசின் செயலியில் அனைத்து மருத்துவமனைகளிலும் சுமார் 200 படுக்கைகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ``செயலி இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை” என அதிகாரி ஒருவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசின் செயலியில் உள்ள தகவல்களும் மருத்துவமனைகளில் இருக்கும் யதார்த்தமும் டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ள நோயாளிகளின் குடும்பத்தை இன்னும் கவலைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னையை ஒப்புக்கொண்ட ஆம் ஆத்மியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சாதா, ``இந்தச் செயலி ஒருவகையான முயற்சி மட்டுமே. தகவல்களை வெளிப்படையாக வெளியிடும் ஒரே அரசு நாங்கள்தான். இந்தச் செயலி சில நாள்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது. விரைவில் இதிலுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

படுக்கை வசதிகள் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சனிக்கிழமை பேசுகையில், ``டெல்லியில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குப் படுக்கை வசதிகள் பற்றாக்குறை இல்லை. வைரஸ் தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்களை திருப்பி அனுப்பக்கூடாது. சில மருத்துவமனைகள் நோயாளிகளை திருப்பி அனுப்பவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள். படுக்கைகள் இருக்கும்போதுகூட நோயாளிகளை திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

`சம்பளம் கொடுக்கக்கூட நிதியில்லை..!’ - மத்திய அரசின் உதவிகோரும் டெல்லி அரசு
அடுத்த கட்டுரைக்கு