Published:Updated:

இரு டாக்டர்களுக்கு கொரோனா; தப்பாத ஆட்சியர் அலுவலகம்! -அதிர்ச்சிகொடுத்த நெல்லை நிலவரம்

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

கொரோனா நோய்த் தொற்று பரவல், மாவட்டம் முழுவதும் வேகம் அடைந்திருக்கும் நிலையில், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் தன்மை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. அதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

குறிப்பாக, மகாராஷ்டிரா மற்றும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. அதனால், அவர்கள் மூலம் நோய் பரவும் தன்மை வேகம் எடுத்துள்ளது.

`மொத்தமே நான்கு ஆம்புலன்ஸ்தான்... பரவும் கொரோனா!' -கலங்கவைக்கும் நெல்லை, தென்காசி நிலவரம்

நெல்லை மாவட்டம் முழுவதும் இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 287 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் பலர் குணமடைந்துள்ள நிலையில், சிலர் மட்டும் இன்னும் சிகிச்சைபெற்றுவருகிறார்கள்.

சோதனைச் சாவடி
சோதனைச் சாவடி

இந்த நிலையில், நேற்று (17-ம் தேதி) ஒரே நாளில் மட்டும் 183 பேர் மும்பையிலிருந்து நெல்லை வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். மும்பையிலிருந்து வந்தவர்கள் அனைவரும் தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகரப் பகுதியில் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. பேட்டை, மகாராஜ நகர், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவது பொதுமக்களை அச்சம் அடைய வைத்திருக்கிறது.

சோதனைச் சாவடி
சோதனைச் சாவடி

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற இரு மருத்துவர்கள், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலப்பாளையம் பகுதியில் உள்ள வங்கி ஊழியர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லையில், தனியார் வங்கி மேலாளர் ஒருவர் இன்று கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். நெல்லை கோடீஸ்வரன் தெருவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

நெல்லை ஆட்சியர் அலுவலகம்
நெல்லை ஆட்சியர் அலுவலகம்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கருவூலத்துறைக்கான கட்டுமானப் பணி நடைபெற்றுவருகிறது. அங்கு, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்துவருகிறார்கள். அவர்களில் ஒருவருக்கு நேற்று கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா நோய் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரக்கூடிய பலர், போலியான இ-பாஸ் மூலமாக வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன், சோதனைச் சாவடிக்குச் செல்லாமல் கிராமங்கள் வழியாகச் சிலர் வாகனங்களில் வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

வெளியூர்களில் இருந்து அணிவகுத்து வரும் வாகனங்கள்
வெளியூர்களில் இருந்து அணிவகுத்து வரும் வாகனங்கள்

சோதனைச் சாவடிக்குச் செல்லாமல் வரும் வாகனங்கள் குறித்து 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு நெல்லை மாநகர காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இருப்பினும், சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீஸாரையும் வருவாய்த் துறையினரையும் நியமித்து சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு