Published:Updated:

`14 நாடுகளின் மக்கள் தொகை; பாதிப்பு எண்ணிக்கை; 7வது இடம்!’- சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம்

லாவ் அகர்வால்
லாவ் அகர்வால்

``உலகளவில் உள்ள நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியாவின் இறப்பு விகிதம் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது. மேலும், குணமடைபவர்களின் விகிதம் 48.07 சதவிகிதமாக உள்ளது”

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 1,98,706 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 95,000-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. இந்தியாவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை கொரோனா உருவான நாடாகக் கருதப்படும் சீனாவை சில வாரங்களுக்கு முன்பு முந்தியது. இறப்பு எண்ணிக்கையிலும் சீனாவை, இந்தியா விஞ்சியுள்ளது.

கொரோனா
கொரோனா

வைரஸால் ஆரம்பகட்டம் முதல் அதிகம் பாதிப்படைந்த நாடுகளை ஒப்பிடுகையில் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா பின்தங்கி இருந்தது. ஆனால், சில நாள்களுக்கு முன்பு இரான், பிரான்ஸ், ஜெர்மனி எனக் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா ஏழாவது இடத்துக்கு வந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மரணங்களைச் சந்தித்த இத்தாலிக்கு அடுத்த நிலையில் இந்தியா தற்போது உள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ளதால், வைரஸ் பரவல் இன்னும் அதிகமாகும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

தன்னிச்சையான விசாரணை; WHO-வுக்கு 62 நாடுகள் கோரிக்கை! -கொரோனா விஷயத்தில் முதல்முறையாக இந்தியா

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் பேசுகையில், ``இந்தியாவைப் போல அதிக மக்கள் தொகைக் கொண்ட சுமார் 14 நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்த நாடுகளில் 22.5 மடங்கு அதிகமாக பாதிப்பு எண்ணிக்கையும் 55.2 மடங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஆனால், நமது நாட்டில் இறப்பு விகிதம் என்பது 2.82 சதவிகிதமாக உள்ளது. உலகளவில் உள்ள நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியாவின் இறப்பு விகிதம் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது. மேலும், குணமடைபவர்களின் விகிதம் 48.07 சதவிகிதமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்தியா - கொரோனா
இந்தியா - கொரோனா

தொடர்ந்து அவர் பேசும்போது, ``இந்தியாவில் நிகழும் கொரோனா தொடர்பான இறப்புகளில் இரண்டில் ஒன்று வயதானவர்களாக இருக்கின்றனர். நமது மக்கள் தொகையில் அவர்கள் 10 சதவிகிதம் உள்ளனர். நாட்டில் வைரஸ் தொற்றால் இறப்பவர்களில் 73 சதவிகிதம் பேர் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்னைகளால் ஏற்கெனவே பாதிப்படைந்தவர்கள். தொடக்கத்திலேயே பாதிப்படைந்தவர்களை அடையாளம் காணுதல், மருத்துவ மேலாண்மை, கான்டாக்ட் டிரேசிங் ஆகிய நடவடிக்கைகளின் மூலமாக இறப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, எண்ணிக்கையில் அடிப்படையில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது என்று மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவது தவறானது” என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,171 பேருக்குப் புதிதாக வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் உள்ள மொத்தப் பாதிப்பு எண்ணிக்கையும் இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 204 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

`ஒரே வாரத்தில் 50,000 பாசிடிவ்; உலகளவில் 7-வது இடம்!’ - ஜெர்மனி, பிரான்ஸை முந்தியது இந்தியா #Corona
அடுத்த கட்டுரைக்கு