Published:Updated:

`நூறிலிருந்து ஒரு லட்சம் கொரோனா பாதிப்பு...64 நாள்கள்!’- உலக நாடுகளும் இந்தியாவும்.. #Corona

கொரோனா
கொரோனா ( pixabay )

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

பெருந்தொற்று கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் மார்ச் 25ம் தேதி முதல் அமலில் இருந்து வரும் ஊரடங்கு, நான்காவது முறையாக மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், மத்திய சுகாதாரத் துறை தரவுகளின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-லிருந்து ஒரு லட்சத்தை எட்ட 64 நாள்கள் ஆகியிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில் ஊரடங்கு
இந்தியாவில் ஊரடங்கு
AP | Mahesh Kumar A

கொரோனாவால் கடுமையான பாதிப்பை அடைந்திருக்கும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-லிருந்து ஒரு லட்சத்தை எட்ட 25 நாள்கள் ஆகின. உலக அளவில் அதிகமான பாதிப்புகளைக் கொண்டிருக்கும் அந்த நாட்டில் இதுவரை 14 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒரு லட்சத்து 431 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருக்கிறது.

ஐரோப்பாவில் கொரோனா தொடர்பான இறப்புகள் அதிகம் கொண்ட இத்தாலியில் 100- 1 லட்சம் என்ற எண்ணிக்கை 36 நாள்களில் கடந்திருக்கிறது. தற்போது அங்கு, 2,24, 760 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. ஒரு லட்சம் பேரில் 372 பேர் என்ற அளவில் சராசரி இருக்கிறது.

அமெரிக்கா ஊரடங்கு
அமெரிக்கா ஊரடங்கு
AP

அதேபோல், ஒரு லட்சம் என்ற பாதிப்பு எண்ணிக்கையை இங்கிலாந்து 42 நாள்களில் கடந்தது. 2,40,165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டின் சராசரி ஒரு லட்சம் பேரில் 361 பேர் என்றிருக்கிறது. 1.40 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளைக் கொண்டிருக்கும் பிரான்ஸில் ஒரு லட்சம் என்ற பாதிப்பு எண்ணிக்கையை 39 நாள்களில் எட்டியது. அங்கு ஒரு லட்சம் பேரில் 209 பேருக்கு வைரஸ் பாதிப்பு என்ற சராசரி இருக்கிறது.

உலக நாடுகளின் தொடர் அழுத்தம்... முதல்முறையாக விசாரணைக்கு ஒப்புக்கொண்ட சீனா! #Corona

ஜெர்மனி 35 நாள்களில் ஒரு லட்சம் பாதிப்புகளைக் கடந்தது. அங்கு 1,74, 355 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், சராசரி ஒரு லட்சம் பேரில் 210 பேர் என்றிருக்கிறது. அதேநேரம், ஸ்பெயின் நூறிலிருந்து ஒரு லட்சம் பாதிப்புகளை 30 நாள்களில் கடந்தது. ஐரோப்பியக் கண்டத்தில் இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இது. அங்கு 2,30, 698 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், சராசரி என்பது ஒரு லட்சம் பேரில் 494 என்ற அளவில் இருக்கிறது.

இத்தாலி
இத்தாலி

உலக அளவில் இதுவரை 45 லட்சத்துக்கும் அதிகமானோருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், சராசரி ஒரு லட்சத்துக்கு 60 பேர் என்ற அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு