Published:Updated:

கோவிட் 19 தடுப்பூசியால் உயிரிழந்த இந்தியாவின் முதல் நபர்; அதிகாரபூர்வமாக அறிவித்த அரசு!

COVID-19 vaccine delivery system in New Delhi
COVID-19 vaccine delivery system in New Delhi ( AP Photo/Altaf Qadri )

இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசிக்குப் பிறகு உயிரிழந்ததாகக் கூறப்பட்ட 31 பேரைப் பற்றிய ஆய்வில் இந்தக் குழு ஈடுபட்டது.

கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் அனபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனப்படும் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு இந்தியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்குப் பிறகான பாதக நிகழ்வுகளை ஆராயும் குழு (National AEFI Committee) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிட் தடுப்பூசிக்குப் பிறகு உயிரிழந்ததாகக் கூறப்பட்ட 31 பேரைப் பற்றிய ஆய்வில் இந்தக் குழு ஈடுபட்டது. அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak

இதுபற்றிப் பேசியுள்ள குழுவின் தலைவர் டாக்டர் என்.கே அரோரா, ``தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்த முதல் நிகழ்வு பதிவாகியுள்ளது. தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு 30 நிமிடங்கள் அங்கேயே கண்காணிப்பிலிருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது. பெரும்பாலான தீவிர ஒவ்வாமை நிகழ்வுகள் இந்த நேரத்தில்தான் ஏற்படும். தாமதிக்காமல் சரியான சிகிச்சையளிக்கும்போது உயிரிழப்பைத் தடுக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவின் அறிக்கையின்படி, 10 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டால், அதில் பல்வேறு காரணங்களால் சராசரியாக 2.7 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 4.8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தடுப்பூசிக்குப் பிறகான உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, அதற்கான காரணங்களை சரியான ஆய்வுகள் நடத்தி உறுதிசெய்ய வேண்டும். சரியான ஆய்வுகள்தான் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைத் தெளிவுபடுத்தும்.

India Covid Outbreak
India Covid Outbreak
AP Photo / Channi Anand
கோவிட் 19: தீவிர வயிற்றுப்போக்கு, காதுகேளாமை, அழுகிய புண்கள்; `டெல்டா' வேரியன்ட்டின் புது அறிகுறிகள்

ஆய்வு செய்யப்பட்ட 31 இறப்புகளில் 18 மரணங்கள் தடுப்பூசி போட்டதற்குப் பிறகு நடந்த தற்செயல் நிகழ்வுகள், அதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 7 இறப்புகள் தடுப்பூசியால் நிகழ்ந்தவையா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. 3 இறப்புகள் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பானது. ஓர் இறப்பு மனப்பதற்றம் தொடர்பான எதிர்வினையால் ஏற்பட்டுள்ளது. இரண்டு இறப்புகள் வகைப்படுத்த முடியாத பிரிவில் ஏற்பட்டுள்ளன.

தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான எதிர்வினையால் ஒவ்வாமை மற்றும் தீவிர ஒவ்வாமை உள்ளிட்டவை ஏற்படுகின்றன. தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு இதுபோன்ற எதிர்வினைகள் ஏற்படுவது எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகள் என்று நடப்பிலுள்ள அறிவியல் ஆதாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. தடுப்பூசியால் உயிரிழந்த நபரும் இந்த வகைக்குள்தான் வருகிறார். ஆனால் ஜனவரி 16 மற்றும் 19-ம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவருக்கு தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A woman receives the AstraZeneca vaccine
A woman receives the AstraZeneca vaccine
AP Photo / Aijaz Rahi
Covid Questions: வீட்டிலிருக்கும் தடுப்பூசி போடாத முதியவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது எப்படி?

மேலும், இதுபோன்ற மிகச்சிறிய ஆபத்துகளுக்கு எதிராக தடுப்பூசியினால் ஏற்படும் சாதகமான விளைவுகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக உள்ளன. எனினும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி செலுத்துவது கண்காணிக்கப்படுவதும் மறு ஆய்வு செய்யப்படுவதும் அவசியம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு