Published:Updated:

வசதியில்லா இரான்; ரெடிமேட் லேப்; வைரஸ் சோதனை - இந்தியர்களை மீட்ட சுகாதாரத்துறையின் சூப்பர் நடவடிக்கை

இரானில் உள்ளவர்கள் மீட்பு
இரானில் உள்ளவர்கள் மீட்பு

இரானில் சிக்கிய இந்தியர்களைப் பல கட்டமாக மீட்டுள்ளது மத்திய அரசு. இதுவரை 389 பேர் மீட்கப்பட்டு ராஜஸ்தான் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இத்தாலியும் மூன்றாவதாக இரானும் உள்ளது. இத்தாலியில் இதுவரை 24,747 பாதிக்கப்பட்டு 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இரானில் 13,938 பேர் பாதிக்கப்பட்டு 724 உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால் முதலில் பாதிக்கப்பட்ட சீனா தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், இந்த வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவி அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் முதல் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை வரை என அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் அதிகம் பாதித்த நாடான இரான் ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில், அங்கு கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு அந்நாட்டு மக்களின் நிலையை இன்னும் மோசமுடைய வைத்துள்ளது. மக்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமலும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமலும் அந்நாட்டு அரசு திணறி வருகிறது, இதற்காக இந்தியா, சீனா போன்ற பல நாடுகளின் உதவியை நாடியுள்ளது இரான்.

`1 கிலோ கோழி ரூ.10 ; உயிருடன் புதைக்கப்பட்ட 6000 கோழிகள்!’ -வியாபாரிகளை உறையவைத்த கொரோனா வதந்தி

இதற்கிடையில், இரானில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களைத் தாயகம் அழைத்துச் செல்லும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று இரானில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாகக் கடந்த செவ்வாய்க் கிழமை 58 பேரும் இரண்டாவது கட்டமாக வெள்ளிக்கிழமை 44 இந்தியர்களும் தாயகம் அழைத்து வரப்பட்டனர். அப்படி மீட்கப்படுபவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரானில் சிக்கியுள்ள இந்தியர்கள்
இரானில் சிக்கியுள்ள இந்தியர்கள்

14 நாள்கள் கண்காணிப்பு முடிவில் அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானதும் விடுவிக்கப்படுவார்கள். மூன்றாவது கட்டமாகக் கடந்த சனிக்கிழமை 230 பேரும் நான்காவது கட்டமாக இன்று 52 மாணவர்களும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இரானிலிருந்து மொத்தமாக இதுவரை 389 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இரானில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க வேண்டும் என்று தங்கள் கோரிக்கையை முதலில் இந்திய அரசு அந்நாட்டிடம் தெரிவித்தது. ஆனால், இரானில் கொரோனா வைரஸை சோதனை செய்யும் லேப் வசதி இல்லாததால் அங்குள்ளவர்களைப் பரிசோதிக்காமல் அனுப்பமுடியாது எனத் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து இந்திய அரசு இங்கிருந்து ஒரு லேப் மற்றும் சில ஆராய்ச்சியாளர்களை அனுப்பிவைக்க முடிவு செய்தது.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்; மறைத்த அரசு? - ஈரானின் நிலையும் சாட்டிலைட் புகைப்பட சர்ச்சையும் #Corona

இது பற்றி நாடாளுமன்றத்தில் பேசியிருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ``இரானில் சிக்கியுள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய விரும்புகிறோம், அதனால் பல டன்கள் எடை மற்றும் அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட லேப், இந்தியா சார்பாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் வைரஸ் தொற்று இல்லாதவர்கள் மட்டும் அழைத்து வரப்படவுள்ளனர். இந்த அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து இந்தியர்கள் மீட்கப்பட்ட பிறகு அந்த சோதனை லேப்பை இரானுக்கே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

ரெடிமேட் லேப்
ரெடிமேட் லேப்

முன்னதாக மத்திய அரசு கூறியபடியே அனைத்து வசதிகளையும் கொண்ட ரெடிமேட் லேப் உருவாக்கப்பட்டு அது இந்திய விமானப்படையின் சி -17 குளோப்மாஸ்டர் III கனரக ராணுவ விமானம் மூலம் இரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டது. அதனுடன் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்தைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்களும் இந்திய மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்களும் உடன் அனுப்பப்பட்டனர். இரானில் சிக்கியுள்ளவர்களுக்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்ட பிறகே அவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மூடப்படும் சிறப்பு மருத்துவமனைகள்?; அதிபரின் வுகான் பயணப் பின்னணி! -  மீண்டுவிட்டதா சீனா? #Corona

இரானில் சிக்கியவர்களை மீட்க, துரிதமாகச் செயல்பட்டு ரெடிமேட் லேப் உருவாக்கி அவர்களை இந்தியா அழைத்து வந்த மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அதிலும் அந்த லேப்பை இரானுக்கே வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. லேப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

பத்து நாள்களுக்குள் இந்த லேப் நடவடிக்கைகள், சோதனைக்குத் தேவையான உபகரணங்கள் என அனைத்தும் வேகமாகத் தயார் செய்து இந்தியர்களை மீட்டும் வந்துவிட்டது மத்திய அரசு. அனைத்து நாடுகளிலிருந்தும் இதுவரை 1,444 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் செய்தி.

ஈரான் சென்ற விமானம்
ஈரான் சென்ற விமானம்

இதுமட்டுமல்லாது 15 டன் எடைகொண்ட மருத்துவ உபகரணங்கள், மாக்ஸ், கிளவுஸ் போன்ற பிற பொருள்களைச் சீனாவுக்கு அனுப்பிவைத்துள்ளது இந்தியா. மேலும் பூட்டான், மாலத்தீவு, இரான், இத்தாலி போன்ற நாடுகளும் இந்தியாவின் உதவியை நாடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு