Published:Updated:

கோவிட் 19: சீனாவிடம் கற்றுக்கொள்ளத் தவறிய இந்தியா; அமெரிக்க மாடலையாவது அமல்படுத்துமா?

மோடி
மோடி

இந்தியாவால் `கிழக்காசிய மாதிரி'யைக் கைக்கொள்ள முடியவில்லை. காலம் கடந்துவிட்டது. ஆனால் `அமெரிக்க மாதிரி'யைப் பின்பற்ற முடியும்.

மே மாதம் 21-ம் தேதி முதற்கொண்டு சீனாவின் குவாங்ஜாங் நகரமும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. குவாங்ஜாங், சீனாவின் தென் பகுதியில் ஹாங்காங்குக்கு அருகே அமைந்திருக்கும் தொழில் நகரம். சென்னையைப் போல் இரண்டு மடங்கு மக்கள் தொகையுள்ள பெரிய நகரம். அங்காடிகள், சந்தைகள், பள்ளிகள், உணவகங்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. நகரத்தைவிட்டு யாரும் சுலபமாக வெளியேறிவிட முடியாது. வீடு வீடாகப் போய் கொரோனா பரிசோதனை செய்கிறார்கள். இதுவரை எத்தனை தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள்? ஜூன் மாதம் 8-ம் தேதி வரை 115. ஆம், 115. பின் ஏன் இத்தனை களேபரம்?

இதற்கு நாம் `கிழக்காசிய மாதிரி'யைப் புரிந்துகொள்ள வேண்டும். 2002-ல் சார்ஸ் எனும் தொற்று நோய் கிழக்காசிய நாடுகளைப் பற்றிப் படர்ந்தபோது பின்பற்றப்பட்ட வழிமுறை இது என்பதால், நாம் இதைக் `கிழக்காசிய மாதிரி' என்றழைக்கலாம். இந்த மாதிரியில் இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது ஊரடங்கு, இரண்டாவது 3-T.

China Outbreak (Representational Image)
China Outbreak (Representational Image)
AP

தீவிர ஊரடங்கை தீர்வாக முன்னெடுத்த சீனா!

`கிழக்காசிய மாதிரி'யில் ஊரடங்கு யாதொரு சமரசமுமின்றி அமல்படுத்தப்படும். ஜனவரி 2020-ல் கொரோனா வைரஸின் நதி மூலமான வுகான் நகரத்தையும், இதைத் தலைநகராகக் கொண்ட ஹூபை மாநிலத்தின் ஏழு கோடி மக்கள் திரள் அடங்கிய பெரும் பகுதியையும் தனிமைப்படுத்தியது சீனா. யாரும் வெளியேற முடியாது. மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே வெளியிலிருந்து அனுமதிக்கப்பட்டார்கள். ஊரடங்குக் காலத்தில் மக்களின் தேவைகளை நகராட்சி கவனித்துக் கொண்டது.

ஊரடங்கில் சீனா என்ன செய்தது?!

எத்துணை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊரடங்கு என்பது தீர்வாகாது. முன்னறிவிப்பன்றி வந்த பெருந்தொற்றின் பரவலை மட்டுப்படுத்தவும், அந்த ஊரடங்குக் காலத்தில் பிற்பாடு பரவ இருக்கிற தொற்றின் வீச்சையும் வீரியத்தையும் கணித்து, அதற்கு ஏற்றவாறு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ளவும் ஊரடங்கைப் பயன்படுத்த வேண்டும். சீனா அதைச் செய்தது. பிப்ரவரி 2020-ல் 10 நாள்களில் வுகானில் இரண்டு பெரிய தற்காலிக மருத்துவமனைகளைக் கட்டி முடித்தது. பல கல்வி நிலையங்களும் சமூக நலக் கூடங்களும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன.

வுகானில் வெற்றி பெற்ற இந்த வழிமுறையைத்தான் இப்போது குவாங்ஜாங்கில் பயன்படுத்துகிறது சீனா. தமிழக அரசு இப்போது மேற்கொண்டுவரும் பல நடவடிக்கைகள் இந்த முன்னுதாரணங்களை ஒத்திருப்பதைக் கவனிக்கலாம்.

corona virus
corona virus
Pixabay

நோய் சமூகப் பரவலாக மாறாமல் தடுக்க... 3-T டெக்னிக்!

`கிழக்காசிய மாதிரி'யில், அடுத்து வருவது, 3-T. தடயங்களை அறிதல் (track), அதன் சுவடுகளைப் பின் தொடர்தல் (trace), அப்படிக் கண்டறியப்பட்ட தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்தல் (treat) என்பவைதான் அந்த 3-T. இந்த அடிப்படையில்தான் குவாங்ஜாங்கில் இவ்வாண்டு மே 21 அன்று ஒரு 75 வயது மூதாட்டியிடம் தொற்று கண்டறியப்பட்டு, அவர் உணவருந்திய சிற்றுண்டிச் சாலை, அங்கு பணிபுரிந்த ஊழியர்கள், அவர்களது உறவினர்கள் என்று சுவடுகள் தொடரப்பட்டு, ஜூன் 8-ம் தேதி வரை 115 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இப்போது இந்தியாவின் இரண்டாம் பேரலைக்குக் காரணமான டெல்டா மாற்றுருதான் குவாங்ஜாங்கிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது. தொற்றாளர்ளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், குவாஜாங் நகரில் இதுகாறும் பல லட்சக்கணக்கான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இந்த நடவடிக்கைகள், நோய் சமூகப் பரவலாக மாறாமல் தடுத்துவிடும்.

நோய்ப் பரவலைக் கட்டுக்குள் வைத்து சிகிச்சை அளிக்கும் இந்தக் `கிழக்காசிய மாதிரி'யைச் சீனா உட்படப் பல கிழக்காசிய நாடுகளும், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் பின்பற்றின; தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தின. ஆனால், இந்தியாவில் அப்படி நடக்கவில்லை.

இந்திய சறுக்கியது எங்கே..?

கடந்த ஆண்டு மார்ச் 25 அன்று இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது நமது நிர்வாக அமைப்புகள் அதை முன் தயாரிப்புக்கான காலமாகக் கருதிச் செயல்படவில்லை. மாறாக ஊரடங்கு கறாராக அமலாக்கப்பட்டால் கொரோனா ஓடிவிடும் என்கிற தவறான கருத்து பலரிடமும் நிலவியது.

COVID-19 screening in Mumbai
COVID-19 screening in Mumbai
AP Photo/Rajanish kakade

மேலும் முகக் கவசம், தனிமனித இடைவெளி, தூய்மை முதலான தற்காப்பு நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது நோய் பரவியது. வைரஸ் மாற்றுருவைத் தரித்தது. அதற்கு `டெல்டா' என்று பெயரிடப்பட்டது. இரண்டாவது அலை உயர்ந்தது. இந்தச் சூழலை நேரிடுவதற்குப் போதுமான மருந்துகளும், பிராண வாயுவும், படுக்கைகளும், தீவிர சிகிச்சை வசதிகளும் நம்மிடம் இல்லை.

இப்போது இந்தியாவில் நோய் பரவிவிட்டது. தொற்றாளர்கள் கடந்து வந்த தடத்தைப் பின்னோக்கிப் பயணித்து, அடையாளப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்த இரண்டாம் அலையில் இப்போதைய ஊரடங்கு, நோய்ப் பரவலைக் குறைக்கும். முன்னேற்பாட்டுக்கான அவகாசம் வழங்கும். ஆனால் `கிழக்காசிய மாதிரி'யைப் போல் நம்மால் நோய்ப் பரவலை பெருமளவில் தடுத்துவிட முடியாது. அதற்கு நாம் `அமெரிக்க மாதிரி'யைப் பின்பற்றலாம்.

ஊரடங்கில் நம்பிக்கை வைக்காத அமெரிக்கா மாறாகச் செய்தது இதைத்தான்!

அமெரிக்கா, ஊரடங்கை முறையாகக் கைக்கொள்ளவில்லை. முகக் கவசம், தனிமனித இடைவெளி, கை சுத்தம் முதலான தற்காப்பு நடவடிக்கைகளையும் முறையாகப் பின்பற்றவில்லை. எனினும் நோயின் பிடியிலிருந்து விரைவில் விடுபட இருக்கிறது அமெரிக்கா. எப்படி?

அமெரிக்கா தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பிலும் உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் அக்கறை செலுத்தியது. தடுப்பூசி ஆய்வுக்கு ஏராளமாகச் செலவிட்டது. ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் முதலான தடுப்பூசிகளை உருவாக்கியது அமெரிக்கா. இப்போது அவற்றை வெற்றிகரமாக மக்களுக்குச் செலுத்தியும் வருகிறது. இந்த இடத்தில் நாம் குறித்துக்கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு.

அமெரிக்கா
அமெரிக்கா
AP
Covid Questions: கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் என்பது உண்மையா?

உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ நாடு அமெரிக்கா. எனினும், தடுப்பூசியை வாங்கும் பொறுப்பை அது தனியார் நிறுவனங்களின் கைகளிலோ மாநிலங்களின் கைகளிலோ விட்டுவிடவில்லை. எல்லாக் குடிமக்களுக்கும் ஒன்றிய அரசுதான் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்கிறது. இத்தனைக்கும் ஐரோப்பாவைப் போலப் பொது மருத்துவமனைகள் அமெரிக்காவில் இல்லை. எல்லாம் தனியார் மருத்துவமனைகள். மேலும் இந்தியாவைப் போல பெரும்பாலான அதிகாரங்கள் ஒன்றிய அரசின் கைகளிலும் இல்லை. மாநிலங்களுக்குத்தான் அதிக அதிகாரங்கள். எனினும் அமெரிக்காவில் ஒன்றிய அரசுதான் எல்லா மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

உலகின் பல நாடுகளும் அதையேதான் செய்கின்றன. இதன் மூலம் கொள்முதல் விலை கட்டுக்குள் இருக்கிறது. எல்லா மாநிலங்களுக்கும் அவற்றின் தேவைக்கேற்பச் சீராக வழங்க முடிகிறது. மாநிலங்களின் நிதிச்சுமை குறைகிறது. இதனால் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் சரி பாதிப் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் போட்டு முடித்துவிட்டது அமெரிக்கா. மொத்த மக்கள் தொகைக்கான தடுப்பூசிகளையும் ஏற்கெனவே வாங்கி வைத்தும்விட்டது.

தடுப்பூசிகளின் விலை பொதுமக்களை பாதிப்பதில்லை!

இந்த `அமெரிக்க மாதிரி'யில் நாம் கவனிக்க வேண்டிய வேறொரு செய்தியும் இருக்கிறது. தடுப்பூசிகளின் விலைகளில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அமெரிக்கச் சந்தையில் புழங்கும் தடுப்பூசிகளில் விலை கூடியது மாடர்னா, ஒரு டோஸ் ரூ. 2400. விலை குறைந்தது ஆஸ்ட்ராஜெனிகா, ரூ. 225. ஆயினும் அமெரிக்காவின் ஒன்றிய அரசே எல்லா மருந்துகளையும் வாங்கி மக்களுக்கு விலையின்றி வழங்குவதால் பொதுமக்களை இந்த விலை வித்தியாசம் பாதிப்பதில்லை.

இந்தியாவில் தடுப்பூசி விலை... மத்திய அரசு செய்தது சரியா?

நம் பிரதமர் ஜூன் மாதம் 7-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களில் 75% பேருக்கு ஒன்றிய அரசே தடுப்பூசிகளை வழங்கும் என்று அறிவித்திருக்கிறார். பலரும் அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்கள். மீதமுள்ள 25% மக்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பு தனியாரிடம் தரப்பட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளே குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும்போது, நாம் அதில் வேற்றுமை பாராட்டுவது முறையாகாது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
இப்படித்தான் மறைக்கப்படுகின்றனவா கொரோனா மரணங்கள்? - அதிர்ச்சி நிலவரம்; அரசின் பதில் என்ன?

இந்தியா, அமெரிக்க மாதிரியைப் பின்பற்றுமா?

இந்தியாவால் `கிழக்காசிய மாதிரி'யைக் கைக்கொள்ள முடியவில்லை. காலம் கடந்துவிட்டது. ஆனால் `அமெரிக்க மாதிரி'யைப் பின்பற்ற முடியும். `கிழக்காசிய மாதிரி'யை வெற்றிகரமாக அமல்படுத்திய நாடுகளும்கூடத் தடுப்பூசியை தங்கள் மக்களுக்குச் செலுத்தியே ஆக வேண்டும், அதுவே தீர்வாக அமையும். ஆனால், `கிழக்காசிய மாதிரி'யைப் பின்பற்றியதன் மூலம் அவர்களால் நோயைக் கட்டுப்படுத்த முடிந்தது, உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைக்க முடிந்தது, தடுப்பூசியைச் செலுத்துவதற்கு கால அவகாசம் எடுத்துக் கொள்ள முடிகிறது. நாம் இந்த வாய்ப்புகளை இழந்துவிட்டோம். ஆகவே விரைவாகத் தடுப்பூசிகளைச் செலுத்தியாக வேண்டும்.

இந்த இரண்டாம் அலைக் கொரோனாவில் நோய்ப் பரவலும் உயிர்ப் பலியும் அதிகரித்திருக்கிறது. குறைந்தபட்சம் 70% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே திரள் எதிர்ப்புசக்தி உருவாகும் என்கிறார்கள் வல்லுநர்கள். 70% மக்கள் என்றால், அதில் செல்வந்தர்களும் இருப்பார்கள், வறியவர்களும் இருப்பார்கள். நகரவாசிகளும் இருப்பார்கள், கிராமத்தினரும் இருப்பார்கள், அசாமியர்களும் இருப்பார்கள், ஆந்திரர்களும் இருப்பார்கள். எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் ஓர் நிறை. எல்லோரும் இந்நாட்டு மக்கள். எல்லோருக்கும் தடுப்பூசி போட வேண்டும். அதை ஒன்றிய அரசால் மட்டுமே முன்கை எடுத்துச் செய்ய முடியும். பிரதமர் மோடி மிக தாமதமாக இந்த வழியையே தற்போது தேர்ந்தெடுத்திருக்கிறார். இனியும் இதில் சிக்கல்கள் ஏதும் ஏற்படாமல், தேவைப்படும் அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி சென்று சேருவதை அவர் உறுதிசெய்தால் மட்டுமே இந்தியாவில் விரைவில் இயல்புநிலை திரும்பும்.

அடுத்த கட்டுரைக்கு