Published:Updated:

`21 நாள் ஊரடங்கு ஏன்?; கொரோனாவை எதிர்க்கும் ஆயுதம்!’ - பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( DD National )

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இரண்டாவது முறையாக உரையாற்றினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
DD National

அவர் பேசுகையில், ``கடந்த 22-ம் தேதி சுய ஊரடங்கைக் கடைப்பிடிப்பதாக நாம் உறுதிபூண்டோம். அதன் வெற்றிக்காக ஒவ்வொரு இந்தியரும் உழைத்தனர். கொரோனாவால் உலக அளவில் என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறீர்கள். பெரிய நாடுகள் பலவும் இந்த அச்சுறுத்தலால் நிலைகுலைந்து போயிருக்கின்றன. அந்த நாடுகள் கடினமாக முயற்சி செய்தும், வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவை எதிர்த்துப் போரிடக் கூடிய முக்கியமான ஆயுதம் சமூகத்தில் இருந்து தனித்து இருத்தலே.

பால் டு சிலிண்டர்... வீடு தேடி வரும் கொரோனா... தவிர்க்க 9 வழிகள்! StayInsideStaySafe

வைரஸ் பரவுவதைத் தடுக்க வேறு வழியில்லை. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் என சிலர் இதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தனிமைப்படுத்தல் என்பது அனைவருக்குமானதுதான்; பிரதமரையும் சேர்த்துதான். சிலரது பொறுப்பற்ற தன்மை உங்களையும் கடுமையாகப் பாதிக்கும். உங்கள் குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள், உங்கள் நண்பர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசமும் இதனால் பாதிக்கப்படும். அப்படி நடக்கும் சம்பவங்களுக்கு இந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும். கடந்த 2 நாள்களாக பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநில அரசுகள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு செயலாற்றி வருகின்றது.

இன்று இந்தியா மிக முக்கியமான முடிவை எடுக்கிறது. இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இன்று நள்ளிரவுக்குப் பின்னர் நீங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு கிராமத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
DD National

நாட்டின் ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டியது நமது பொறுப்பு. இது நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரது பொறுப்பு. இந்த ஊரடங்கு உத்தரவு அடுத்த 21 நாள்களுக்கு அமலில் இருக்கும். வல்லுநர்கள் கருத்துப்படி கொரோனா பரவலைத் தடுக்க 21 நாள்கள் முக்கியமானவை. அடுத்த 21 நாள்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமான நாள்கள். இந்த 21 நாள்கள் நம்மால் தாக்குப்பிடிக்க முடியாவிட்டால், நாம் 21 வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டி இருக்கும். 21 நாள்கள் மிகவும் நீண்ட காலகட்டம்தான். ஆனால், உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக இதை நாம் செய்தே ஆக வேண்டும். இதை ஒரு பிரதமராக நான் சொல்லவில்லை. உங்கள் குடும்ப உறுப்பினராகச் சொல்கிறேன். 21 நாள்கள் வீடுகளுக்குள்ளே தங்கியிருங்கள்.

``பஹ்ரைனில் கொரோனா கட்டுக்குள் இருக்க என்ன காரணம்?" களநிலவரம் பகிரும் தமிழர்

உலக அளவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்ட 67 நாள்கள் பிடித்தது. ஆனால், அடுத்த ஒருலட்சம் என்ற எண்ணிக்கை 11 நாள்களில் எட்டியது. அதேபோல், 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக 4 நாள்களே ஆனது. கொரோனா எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதை இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ஒருமுறை பரவத் தொடங்கிவிட்டால் அதைத் தடுப்பது கடினம். இதனால்தான் சீனா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, இரான் போன்ற நாடுகளால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா
கொரோனா

கொரோனாவுக்கு எதிரான போரில் அந்த நாட்டு மக்களின் செயல்பாடுகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தின. அவர்கள் அரசின் உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றினர். அதனால், கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வருகிறார்கள். நாமும் அதைப் பின்பற்ற வேண்டும். நாம் நமது வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது. வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டும். இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகளே பாதிப்பின் தீவிரத்தைத் தீர்மானிக்கும். இந்த நேரத்தில் நாம் மிகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டும். இந்தக் கடினமாக காலங்களில் தங்களின் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் மக்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு