தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கிறதா? - ஓர் அலசல்!

ஒரு குழந்தை பிறந்த பிறகு, அடுத்தடுத்த காலகட்டங்களில் போட வேண்டிய தடுப்பூசி பெருமளவு குறைகிறது.
இந்தியாவில் ஐந்தில் இரண்டு குழந்தைகளுக்கு முழுமையான தடுப்பூசிகள் போய்ச் சேரவில்லை எனத் தேசிய கணக்கெடுப்பு ஆணையம் கூறியுள்ளது கவலையளிக்கிறது. 2017-2018 நிதியாண்டில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து தேசிய கணக்கெடுப்பு ஆணையம் வெளியிட்ட `ஹெல்த் இன் இந்தியா' அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
1985-ம் ஆண்டு ஆண்டு முதல் தீவிர தடுப்பூசி திட்டத்தை இந்தியா அமல்படுத்தினாலும் அது அனைத்துக் குழந்தைகளையும் முழுமையாகச் சென்றடையவில்லை. தேசிய அளவில் 59.5 சதவிகிதம் குழந்தைகளுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசிகள் சென்றடைந்துள்ளன. முழுமையான தடுப்பூசி என்பது குழந்தை பிறந்த முதல் ஆண்டில் அதற்கு எட்டு முறை கொடுக்கப்படும் பல்வேறு தடுப்பூசிகள்.
இதில் பெரும்பாலும் போடப்படும் முதல் போலியோ சொட்டு மருந்து மற்றும் பிசிஜி (காசநோய்) தடுப்பூசி ஆகியவை சுமார் 97 சதவிகிதம் குழந்தைகளைச் சென்றடைந்துவிடுகின்றன. பெரும்பாலும் குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறப்பதும், வீட்டில் பிறந்தாலும் தாய் சேய் கவனம் பொது சுகாதாரத் துறையால் அதிகம் கவனிக்கப்படுவதுமே இந்தத் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறுவதற்கான காரணங்கள்.

இந்தியளவில் மாநிலங்களுக்கு இடையே இதில் வேறுபாடுகள் உள்ளன. அதைப் புரிந்துகொள்வதிலும் சற்று குழப்பம் இருக்கிறது. ஏனெனில், நாம் நினைக்கும் காரணிகள் அப்படியே இதில் பிரதிபலிப்பதில்லை. ஆகவே, தடுப்பூசிகளைக் கொண்டு செல்வதில் பல்வேறு சமூக பொருளாதார காரணிகள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
தேசிய அளவில் பார்த்தால் அதிகமாக
மணிப்பூர் (75%),
ஆந்திரா (73.6%),
மிஸோரம் (73.4%) ஆகிய மாநிலங்களில் தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடையும் விகிதம் அதிகமாக உள்ளது.
புதுச்சேரி (34%) மற்றும் திரிபுராவில் (39.6%) குறைவாக உள்ளது.
பொதுவாக இந்திய அளவில் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அஸ்ஸாமில் சராசரியாகத் தடுப்பூசி ஏற்பு குறைவாக உள்ளது. மக்கள்தொகை அதிகமுள்ள இந்த மாநிலங்களில் தடுப்பூசி கொடுக்கும் விகிதம் குறைவாக உள்ளதால் ஒட்டுமொத்த இந்தியாவின் விகிதம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் மிக அரிதானவை மற்றும் சொற்பமானவை.மருத்துவர் திலீபன் செல்வராஜன்
காரணிகள் என்ன?
புள்ளிவிவரங்களின்படி ஒரு குழந்தை பிறந்த பிறகு, அடுத்தடுத்த காலகட்டங்களில் போட வேண்டிய தடுப்பூசி பெருமளவு குறைகிறது. இது குழந்தையின் உடல்நலத்தில் பெற்றோர் காட்டும் அலட்சியத்தைக் குறிக்கிறது. மேலும், நகரமயமாக்கல் மட்டுமே தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் வெகுவாகக் கொண்டு சேர்க்கும் என்ற எண்ணமும் தவறானது. உதாரணத்துக்கு புதுச்சேரியும் டெல்லியும் இந்த விஷயத்தில் மோசமாகவே உள்ளன.
தடுப்பூசியின் மீதான தவறான புரிந்துணர்வு மற்றும் பயம் ஆகியவைதான் இந்தப் பிரச்னையில் பெரும்பங்கு வகிக்கின்றன. மக்களில் 45 சதவிகிதம் பேருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், 24 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசியினால் பக்க விளைவுகள் ஏற்படும் என்ற பயத்தின் காரணமாகவும், 11 சதவிகிதம் பேர் தடுப்பூசி வேண்டாம் என்றும் நினைக்கின்றனர் என ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

குழந்தையை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு இடம் மாற்றுவதும் முக்கிய காரணி. தடுப்பூசி குறைவாகப் பெறும் மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதும் இன்னொரு காரணமாகும்.
தமிழகத்தின் நிலை?
இந்தப் புள்ளி விவரத்தின்படி, தமிழகத்தில் தடுப்பூசிகள் சென்றடையும் விகிதம் 50 - 60 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால், உண்மையில் இந்த விகிதம் சற்று அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இந்தத் தடுப்பூசி திட்டத்தைச் சிறப்பாகக் குழந்தைகளுக்குக் கொண்டு சேர்க்கின்றனர்.
டாக்டர் முத்துலட்சுமி பிரசவ கால சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது. அதில் கடைசித் தவணை, முதல் தடுப்பூசி போட்டபின்தான் வழங்கப்படுகிறது. இதனால் ஆரம்பகால தடுப்பூசிகளை அதிக குழந்தைகள் பெறுகின்றனர். இந்தத் திட்டத்தை நீட்டித்து குழந்தை பிறந்து ஓராண்டு ஆகும் வரை நிதியைக் கொடுத்தால் அனைத்துத் தடுப்பூசிகளும் சென்றடைந்துவிடும்.

பிரச்னைக்குத் தீர்வு!
குழந்தைகளுக்கு அட்டவணைப்படி அனைத்துத் தடுப்பூசிகளையும் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் புரியவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் மிக அரிதானவை மற்றும் சொற்பமானவை என விளக்க வேண்டும். தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் தவறான செய்திகளைப் பரப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
போதுமான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளையும் மருத்துவப் பணியாளர்களையும் அமர்த்த வேண்டும். அனைத்துக்கும் மேலாக மாநில அரசுகளுக்கு தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு ஸ்திரமான அரசியல் நிலைப்பாடு அவசியம்.