Published:Updated:

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் கொரோனா... முதல்வர் சொல்வது உண்மைதானா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மாவட்டங்களில், கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நோயாளிகளும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்களும் சுதந்திரமாக வெளியில் சுற்றிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

''தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கிறது. அதாவது 0.80%. அதனால் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கொரோனா பரவலைத் தடுக்கவே தமிழகத்தில் தினமும் அதிகப்படியான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன."
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நேற்று, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் இவை.

மேலும், பேசிய அவர், ''கொரோனா தடுப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் தமிழக அரசின் நடவடிக்கைகள் காரணமாக கொரோனா முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது'' என்றும் தெரிவித்தார்.

கொரோனா
கொரோனா

இந்தநிலையில், ''முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வது உண்மைக்குப் புறம்பான ஒரு கருத்து. மற்ற மாவட்டங்களில் பரிசோதனைகள் செய்தால்தானே பாதிப்புகள் எவ்வளவு எனத் தெரியவரும். எந்தவித நடவடிக்கைகளுமே எடுக்காமல், கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று தற்பெருமை பேசுவது வீண்'' எனும் அதிர்ச்சி குண்டைத் தூக்கிப்போடுகிறார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

"தமிழகத்தில் சென்னை உட்பட ஒருசில மாவட்டங்கள் தவிர எங்கேயும் பரிசோதனைகளே நடைபெறவில்லை. உதாரணமாக, கடலூர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், வெளியிலிருந்து வருபவர்களை மட்டுமே பரிசோதனை செய்கிறார்கள். அவர்களையும் பரிசோதனை செய்துவிட்டு, முடிவுகள் வருவதற்கு முன்பே வெளியில் விட்டுவிடுகிறார்கள். தனிமைப்படுத்தி வைப்பதில்லை. ரிசல்ட்டில் கொரோனா பாசிட்டிவ் என வந்துவிட்டால் மட்டுமே, மீண்டும் அவர்களை அழைத்து வந்து தனிமைப்படுத்துகிறார்கள். அதுவரை, அந்த நபர் யாரிடம், பேசினாலும் பழகினாலும் அவர்களுக்கும் பரவியிருக்கும். இவர்களின் இந்தப் பரிசோதனை முறையே தவறு.

கோயம்பேட்டிலிருந்து கடலூருக்கு 500-க்கும் மேற்பட்டோர் வந்தார்கள். அவர்களை ஒரு டெஸ்ட் மட்டுமே எடுத்துவிட்டுப் போகச் சொல்லிவிடுகிறார்கள். 14 நாள் கண்டிப்பாகத் தனிமைப்படுத்தி, இரண்டு முறை பரிசோதனை செய்ய வேண்டும். அதைச் செய்யவில்லை. கண்டிப்பாக, மற்ற மாவட்டங்களிலும் பரவல் அதிகமாகவே இருக்கும். எண்ணிக்கையை வெளியில் சொல்லாமல் மறைக்கிறார்கள். காய்ச்சல், சளி என்று மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். ஒவ்வொரு கிராம, நகரங்களிலும் சுகாதார ஊழியர்களை வைத்து வீடு வீடாகப் போய் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சல் வந்த சமயத்தில் நாங்கள் அப்படித்தான் பணிகளை மேற்கொண்டோம். தற்போதுவரை, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கிறதே தவிர, இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்கிறார் பன்னீர்செல்வம்.

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. பேருந்துகளும் இயங்க ஆரம்பித்துவிட்டன. இனிமேல்தான் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அனைவருக்கும் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் முதியவர்களுக்கு, குழந்தைகளுக்காக வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தமிழகத்தில் நாள்தோறும் 13 ஆயிரம் நபர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான், அதிக அளவில் சோதனை செய்துவருகிறோம். மாநிலத்தில் தற்போது வரை 23,495 பேருக்குப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 56% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது, 13,170 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

"மாவட்ட வாரியாக நடைபெறும் பரிசோதனைகள் குறித்து வெளிப்படைத்தன்மையே இல்லை. ஒட்டுமொத்தமாகத்தான் பரிசோதனைகளின் எண்ணிக்கையைச் சொல்கிறார்கள். அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேருக்குப் பரிசோதனை செய்தார்கள், அதில் எவ்வளவு பேருக்கு பாசிட்டிவ் வந்திருக்கிறது எனத் தெரிவிக்காமல் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என எப்படிச் சொல்லமுடியும்?" என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர், மருத்துவர் சாந்தி.

"கொரோனா தடுப்பில், முதல் நடவடிக்கையே பரிசோதனைகள்தான். அதையே செய்யாமல் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. அரசு மருத்துமனைகளுக்கு வழங்கும் டெஸ்ட் கிட்களையும் நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டே வருகிறார்கள். 400 கிட்கள் கொடுத்த இடத்தில் 40 கிட்கள் மட்டுமே தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதே நிலைதான் தமிழகம் முழுவதும் நீடிக்கிறது. சமூகப் பரவல் இருக்கிறதா என்கிற பரிசோதனை மற்ற மாவட்டங்களில் நடைபெறவே இல்லை. ரேபிட் கிட் டெஸ்ட் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, எலைசா டெஸ்டாவது செய்யவேண்டும் என்கிற ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டலையாவது பின்பற்றி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மருத்துவர் சாந்தி
மருத்துவர் சாந்தி

மாவட்டங்களில், கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நோயாளிகளும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்களும் சுதந்திரமாக வெளியில் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. தவிர, கோயம்பேடு, மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களும் மற்ற மாவட்டங்களில் சுதந்திரமாக வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. மாவட்டங்களில் பல்வேறு விதமான தளர்வுகள் இப்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பாதிப்புகள் இன்னும் 14 நாள்களில் தெரியவரும். அதற்குள் அரசு விழித்துக்கொள்வது நல்லது'' என்கிறார் மருத்துவர் சாந்தி.

தமிழகத்தில் 15.45 லட்சம் பி.சி.ஆர் கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 11.51 லட்சம் கிட்டுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியதையும் சேர்த்து, 12.50 லட்சம் பி.சி.ஆர் கிட்டுகள் பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் 4,51,800 பி.சி.ஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை ஏன் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக தொடர்கிறது?

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, மருத்துவரும், தென்சென்னை தொகுதி முன்னாள் எம்.பியுமான ஜெயவர்தனிடம் பேசினோம்,

'' தமிழகத்தில் நம்மிடம் எத்தனை டெஸ்ட் கிட்கள் இருக்கின்றன என்பதை முதல்வர் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். தமிழகம் முழுவதும் அத்தனை சென்டர்களுக்கும் டெஸ்ட் கிட்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இந்தியாவிலேயே, தமிழகத்தின்தான் அதிகளவில் பரிசோதனைகளும் நடந்துவருகின்றன. இவ்வளவுதான் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்கிற இலக்கு வைத்து நாம் டெஸ்ட் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அறிகுறி இருப்பவர்கள் உட்பட தேவைப்படுபவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் டெஸ்ட் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஒருநாளைக்கு எவ்வளவு டெஸ்ட்கள் எடுக்கிறோம் என்பதையும் தெரிவித்து வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு டெஸ்ட் எடுக்கிறோம் என்பதை தெரிவிக்கவேண்டிய அவசியம் ஏதும் ஏற்படவில்லை.

ஜெயவர்தன்
ஜெயவர்தன்

ஊரகப் பகுதிகளில் யாருக்குக் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருக்கிறது என்பது அந்தந்த ஊரில் உள்ள சுகாதார ஊழியர்கள் கண்காணித்துதான் வருகிறார்கள். தேவைப்படுபவர்களுக்கு டெஸ்ட் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். கிட்ஸ்கள் குறைவாகக் கொடுக்கிறோம், பரிசோதனைகள் செய்ய கருவிகள் இல்லை என்பது முற்றிலும் தவறான தகவல்.

தனிமைப்படுத்தி வைத்திருப்பவர்கள் வெளியில் சுற்றுகிறார்கள் என்றால், மக்கள்தான் முழுமையான ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும். அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துதான் வருகிறது. எந்தப் பகுதியில் அப்படி நடக்கிறது என்பது அரசுக்குத் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்கிறார் ஜெயவர்தன்.

முதல்வர் அறிவித்தது போல, நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் கொரோனா கட்டுக்குள் இருந்தால் நல்ல விஷயம்தான். அதேநேரம், ஒட்டுமொத்த பரிசோதனைகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்பதையும் வெளிப்படையாக அறிவித்தால், மக்கள் பயமில்லாமல் இருப்பார்கள். அதனால், அரசு அதைச் செய்யமுன்வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு