Published:Updated:

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதா, மனிதனால் உருவாக்கப்பட்டதா? - பகுதி 1 #CompleteAnalysis

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கோவிட் 19 பரவலை பொறுத்தவரையில் இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்பது நாம் அறிந்ததே. ஒன்று - அது இயற்கையாக உருவாகி விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவும் வைரஸ். இரண்டு - அது மனிதனால் பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டு அங்கிருந்து கசிந்ததினால் பரவும் வைரஸ். எது உண்மை?!

கொரோனா கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. உலகளவில் 30 லட்சம் மரணங்கள் எனும் அச்சத்திற்குரிய எண்ணிக்கையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மீளும் வழியறியாது தவித்துக் கொண்டிருக்கிறது இந்தியா. ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் அந்த வைரஸின் தொடக்கம் பற்றி மட்டும் நம்மால் அறிய முடியவில்லை. எந்த ஒரு தொற்றுநோய்க்கும், அந்த நோய் எங்கு ஆரம்பித்தது என்ற மூலம் அறிந்த பின்னர் தான் வெற்றிகரமான தீர்வு என்பது கிடைக்கும். ஆனால், கோவிட் 19 வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதா, இயற்கையாக உருவானதா என்ற அடிப்படை கேள்வி கூட இன்று வரை சர்ச்சைக்குள்ளாகி விவாதிக்கப்படுகிறது.

வூஹான் சந்தை
வூஹான் சந்தை

சீனாவின் வூஹான் நகரில் தான் முதன் முதலில் இந்த வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இதே கொரோனா வைரஸ் வகையான சார்ஸ் நோய் தொற்று அதே பகுதியில் உள்ள வௌவால்களால் பரவியது என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த வைரஸ் கூட அப்படி உருவாகியிருக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

வூஹானின் அரிய வகை உயிரினங்களின் மாமிச சந்தையில் இருந்த பலருக்கு மொத்தமாக இந்த வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டதால், இந்த சந்தையில் இருந்துதான் வைரஸ் உருவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் சீன அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு ஆய்வு செய்து அவ்விடத்தில் அதற்கான சான்றுகளே இல்லை என அறிவித்தது. வூஹான் நகரில் இருக்கும் வூஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைரஸ் -ன் பரிசோதனை கூடத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்திருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. அதே சிறப்பு குழு, அதே சான்றுகள் இல்லை என்ற காரணத்தை சொல்லி அந்த சாத்தியக்கூறுகளையும் நிராகரித்தது.

லி மெங் - ஜின்பிங்
லி மெங் - ஜின்பிங்

ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த வைராலஜிஸ்ட் டாக்டர் லீ-மெங் யான் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த வைரஸ் சீனாவின் PLA அரசால் பல மில்லியன்கள் செலவு செய்து பரிசோதனை கூடத்தில் தயாரிக்கப்பட்டது. சீனா ஒரு உயிரியல் போரை தொடங்கும் நோக்கத்தோடு இந்த வைரஸினை பரப்பியது என குற்றம் சாட்டினார். அவரது குற்றசாட்டுகள் புறந்தள்ளப்பட்டது.

சமீபத்தில் அமெரிக்கா ராணுவம் கையகப்படுத்திய சில முக்கிய ஃபைல்கள் வெளியாகின. அவை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவின் மிலிட்டரி விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை ஒரு பையோ ஆயுதமாக மாற்றும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தனர் என்ற தகவலை வெளிப்படுத்தின. அரசியல் காரணங்களுக்காக உண்மைகள் மறைக்கப்பட்டு திட்டமிட்ட ஒரு மாயத்திரை கொண்டு மக்களின் கண்கள் மறைக்கப்படுகிறது என்றும் பரவலான பேச்சுகள் எழுந்தன.

இந்த குழப்பங்களை எல்லாம் தீர்க்க ஒரே வழி அறிவியலை நம்புவது மட்டுமே. அது மட்டுமே சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தும். இம்முறை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு தேர்ந்த துப்பறியும் நிபுணருக்கு தடயங்கள் உதவுவது போல, நிறைய தரவுகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியான அறிவியல் தடையங்களைத்தான் ‘The Bulletin’ இதழில் அறிவியல் எழுத்தாளர் நிக்கோலஸ் வேட் எழுதியிருக்கிறார். அதன் சுருக்கம் உங்களுக்காக...

கொரோனா பரவலை பொறுத்தவரையில் இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்பது நாம் அறிந்ததே. ஒன்று... அது இயற்கையாக உருவாகி விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் வைரஸ்.

இரண்டு... அது மனிதனால் பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டு அங்கிருந்து கசிந்ததால் பரவும் வைரஸ்.

இயற்கையாக உருவான வைரஸா?

* கோவிட் 19 வைரஸின் அதிகாரப்பூர்வ அறிவியல் பெயர் SARS-COv-2. கொரோனா பீட்டா வைரஸ் வகையை சார்ந்தது. 2002-ம் ஆண்டு பரவிய சார்ஸ் வைரஸ் மற்றும் 2012-ம் ஆண்டு பரவிய மெர்ஸ் வைரஸ் இரண்டும் இதே வகையை சார்ந்த வைரஸ்கள் தான். சார்ஸ் வைரஸ் வௌவால்களில் இருந்து சிவெட் பூனை இனத்திற்கு பரவி அதிலிருந்து மனிதனுக்கு பரவியது. மெர்ஸ் வௌவால்களிடம் இருந்து ஒட்டகங்களுக்கு பரவி அதிலிருந்து மனிதர்களுக்குப் பரவியது. அப்படி கோவிட் வைரஸ் வௌவால்களிடம் இருந்து எந்த இடைப்பட்ட உயிரினத்திற்கும் பரவியதாக தரவுகள் இல்லை.

வௌவால்
வௌவால்

* கொரோனா வைரஸ்களை பரப்பும் வௌவால்கள் சீனாவின் யுனான் மாகாணத்தில் இருக்கும் குகைகளில் வசிப்பதாக கண்டறியப்பட்டது. ஆனால், கோவிட்-19 வைரஸ் நேரடியாக வூஹான் நகரில்தான் முதலில் தென்பட்டது. இரண்டு நகரங்களுக்கும் உள்ள தூரம் சுமார் 1800 கிலோமீட்டர். ஒருவேளை வௌவால்களில் இருந்து இடைப்பட்ட உயிரினம் எதுவும் இல்லாமல் நேரடியாக அது மனிதர்களுக்கு பரவியிருந்தாலும், தொற்று ஏற்பட்ட மனிதன் யுனான் மாகாணத்தில் இருந்து வூஹான் வரையில் உள்ள பயண தூரத்திலோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ தொற்று ஏற்படுத்தாமல் இருப்பது எப்படி சாத்தியம்? அந்த வௌவால்களும் ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவில் மட்டுமே பயணிக்கும் திறன் வாய்ந்தது. ஆகவே நேரடியாக வூஹானில் இருக்கும் ஒருவர் இந்த வௌவால்களால் பாதிப்படைய முடியாது. அதுமட்டுமின்றி தற்போது மனிதர்களில் பரவும் covid 19 வைரஸ் வௌவால்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, ஆகவே இது நேரடியாக வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கும் சாத்திய கூறுகள் மிகவும் குறைவு.

* சார்ஸ் மற்றும் மெர்ஸ் இரண்டு வகை வைரஸ்களும், பல்வேறு உருமாற்றங்களை சந்தித்து அதன்பிறகே மனிதர்களுக்கு தொற்று ஏற்படுத்தும் வைரஸாக மாறியிருக்கிறது. சார்ஸ் வைரஸ் வௌவால்களிடம் இருந்து இடை உயிரினமான சிவெட் பூனைக்கு பரவிய பிறகு 6 முறை உருமாறி இருக்கிறது. அதன் பிறகு அது மனிதர்களுக்கு தொற்றை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதர்களுள் 14 முறை உருமாற்றம் அடைந்த பிறகு தான், அது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வைரஸாக மாறியிருக்கிறது. அதன் பிறகு நான்கு முறை உருமாறிய பின்னர்தான் அது ஒரு எபிடெமிக் எனும் பரவலான தொற்று நோயாக மாறி இருக்கிறது. கோவிட் 19 வைரஸில் அப்படியான எந்த உருமாற்றங்களுக்கான வழித்தடமும் இல்லை. உருவாகும் போது இருந்த தன்மையில் இருந்து பெருந்தொற்றாக பரவிய காலம் வரை பெரிதாக உருமாற்றம் அடையவில்லை. சமீபகாலமாக தான் இந்த வைரஸ் உருமாற்றம் அடைகிறது.

சார்ஸ்
சார்ஸ்

* சார்ஸ் கொரோனா வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவி எந்த இடை உயிரினம் மூலம் பரவியது என 4 மாதங்களில் கண்டறியப்பட்டது. மெர்ஸ் வைரஸின் இடை உயிரினம் எது என 9 மாதங்களில் கண்டறியப்பட்டது. ஆனால், 15 மாதங்களுக்கு மேலாக உலகம் முழுக்க இருக்கும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தும் இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து இயற்கையாக மனிதனுக்கு எப்படி பரவியது என நிரூபிக்க ஒரு சிறு ஆதாரத்தைக் கூட இன்னும் கண்டறிய முடியவில்லை.

* இந்த வைரஸ் இயற்கையாக உருவானது என உலகம் நம்பியதற்கு காரணம் நோய் தொற்று ஏற்பட்ட தொடக்க காலத்தில் வெளியிடப்பட்ட விஞ்ஞானிகளின் அறிக்கை. முதல் அறிக்கை, "இந்த வைரஸ் இயற்கையாக உருவான வைரஸ் இல்லை என வெளிவரும் தகவல்கள் சூழ்ச்சி தகவல்களே. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என பல விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஒரு கடிதம் லான்செட் பத்திரிகையில் பிப்ரவரி 19, 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் இருக்கின்றன. முதலில் ஒரு வைரஸ் பற்றிய முழு ஆராய்ச்சி இல்லாமல், அதன் சாத்தியக்கூறுகளை அறியாமல், பிப்ரவரி மாதமே இப்படியான ஒரு கடிதம் வெளியிடப்பது ஏன்? இரண்டாவது, கொரோனா வைரஸ்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆப் வைராலஜியில் இருந்து இந்த வைரஸ் விபத்தாக வெளியேறி இருக்கலாம் என்ற சாத்திய கூறுகளை இந்த குழு அடியோடு நிராகரித்தது ஏன்? இந்த இரு கேள்விகளுக்கும் பதில் மூன்றாவது விஷயத்தில் இருக்கிறது. இந்த கடிதத்தை எழுதி, அனைத்து விஞ்ஞானிகளிடம் கையெழுத்து பெறும் ஒருங்கிணைப்பு வேலையை செய்தது பீட்டர் தசக் எனும் அமெரிக்க விஞ்ஞானி. எகோ ஹெல்த் அல்லையன்ஸ் ஆப் நியூயார்க் எனும் நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம் சீனாவின் வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நடத்தும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு நிதி அளித்து வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

* இரண்டாவது அறிக்கை, 2020 மார்ச் 17-ம் தேதி கிறிஸ்டியன் ஜி. ஆண்டர்சன் எனும் வைராலஜிஸ்ட் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு நேச்சர் மெடிசின் எனும் பத்திரிகையில் எழுதிய கட்டுரை. கட்டுரையின் தொடக்கத்தில் நிச்சயம் இந்த வைரஸ் பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டதல்ல எனத் தொடங்கி கட்டுரையின் பாதியில் இந்த வைரஸ் பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு என கூறியிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் எந்த கூற்றுக்கும் உறுதி செய்யும் முறையான தரவுகள் இல்லை என்பதே உண்மை.

வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி
வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி
asahi.com

* ஆண்டர்சன் குழுவின் அறிக்கையில் இரண்டு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதல் வாதம், ஒரு வைரஸ் மனிதனின் உடலில் தொற்று ஏற்படுத்த சிறந்த வழி எது என சில கணக்கீடுகள் விஞ்ஞானிகளுக்கு உறுதிப்படுத்துகின்றன. ஆனால், கோவிட் 19 அந்த கணக்கீடுகள் படி தொற்றை ஏற்படுத்தவில்லை. மனிதன் இந்த தொற்றை உருவாக்கியிருந்தால் அவன் நிரூபிக்கப்பட்ட சிறந்த வழியை தானே பயன்படுத்தியிருப்பான். ஆகவே இது இயற்கையாக உருவானது என்கிறார்கள். அதாவது ஒரு வீட்டிற்குள் வர இரண்டு வழிகள் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். ஒன்று எளிதான வழி, இரண்டாவது கடினமான வழி. கடினமான வழியின் மூலம் உள்ளே வந்து பொருட்கள் திருடப்பட்டிருக்கின்றன. அப்போது எளிதான வழி ஒருவனுக்கு தெரிந்திருந்தும் அதை அவன் பயன்படுத்தவில்லை... அதனால் அவன் திருடவில்லை என சொல்ல முடியாதல்லவா? அதைத்தான் இந்த விஞ்ஞானிகள் இங்கு ஆதாரமாக முன்வைக்கிறார்கள்.

* இரண்டாவது வாதம், ஒரு மனிதனின் உடலில் வைரஸ் தொற்றை பரப்ப RNA பயன்படுத்துவது கடினம். அதனால் விஞ்ஞானிகள் RNA மூலக்கூறை DNA வாக உருமாற்றம் செய்து அதில் ஆராய்ச்சி செய்து பின்னர் அதை RNA வாக மாற்றுவார்கள். இப்படி மாற்றப்படும் DNA Backbone மூலக்கூறுகள் என சில குறிப்பிட்ட வகைகள் இருக்கின்றன. இந்த வைரஸ் அப்படியே அறியப்பட்ட எந்த DNA Backbone மூலக்கூறுகளையும் கொண்டிருக்கவில்லை. ஆகையால் இது மனிதனால் உருவாக்கப்படவில்லை என்கிறார்கள். பதியப்படாத ஒரு DNA Backbone மூலக்கூறு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சாத்திய கூறுகளை இவர்கள் நிராகரிப்பதே இங்கு சிக்கல்.

file photo, an employee of SinoVac works in a lab at a factory producing its SARS-CoV-2 vaccine for COVID-19 named CoronaVac in Beijing.
file photo, an employee of SinoVac works in a lab at a factory producing its SARS-CoV-2 vaccine for COVID-19 named CoronaVac in Beijing.
AP Photo/Ng Han Guan

* அறிவியலாளர்கள் ஒருவரின் பணியை, ஆராய்ச்சியை இன்னொருவர் விமர்சித்து தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டியவர்கள். ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக உலகின் அறிவியலாளர்கள் மௌனித்து இருப்பதுதான் இங்கு பிரச்னை. அதனால் தான் இந்த இரண்டு கட்டுரைகளையும் யாரும் எதிர்க்கவில்லை. இன்று யாரை எதிர்த்து ஒரு விஞ்ஞானி ஒரு கருத்தை வெளியிடுகிறாரோ, நாளை தன்னுடைய ஆராய்ச்சிகளுக்காக அதே விஞ்ஞானியிடம் தான் நிதிக்கு ஒப்புதல் வாங்க நிற்கவேண்டும் என்ற அச்சமும் அதற்கு காரணம்.

நிக்கோலஸ் வேட் , கொரோனா வைரஸ் இயற்கையாக உருவாகி விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவும் வைரஸா என்ற கேள்விக்கு பதிலாக மேற்கண்ட தரவுகளை முன்வைக்கிறார். அதேபோல கொரோனா வைரஸ் மனிதனால் பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டு அங்கிருந்து கசிந்ததினால் பரவும் வைரஸா? என்ற கேள்விக்கு விடையாக அவர் முன்வைக்கும் தரவுகளை பற்றி கட்டுரையின் அடுத்த பாகத்தில் படிக்கலாம். அது விரைவில் vikatan.com-ல் வெளியாகும்.

அடுத்த கட்டுரைக்கு