Published:Updated:

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதா, மனிதனால் உருவாக்கப்பட்டதா? - பகுதி 2 #CompleteAnalysis

sinovac employee ( AP Photo/Ng Han Guan )

Covid 19 நோய் தொற்று பற்றி இதுவரை கிடைத்த தரவுகளை கொண்டு ‘The Bulletin’ இதழில் அறிவியல் எழுத்தாளர் நிக்கோலஸ் வேட் இந்த நோயின் மூலத்தை பற்றி எழுதியிருக்கிறார். அறிவியல் உலகில் அவரது கருத்துக்கள் இன்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதா, மனிதனால் உருவாக்கப்பட்டதா? - பகுதி 2 #CompleteAnalysis

Covid 19 நோய் தொற்று பற்றி இதுவரை கிடைத்த தரவுகளை கொண்டு ‘The Bulletin’ இதழில் அறிவியல் எழுத்தாளர் நிக்கோலஸ் வேட் இந்த நோயின் மூலத்தை பற்றி எழுதியிருக்கிறார். அறிவியல் உலகில் அவரது கருத்துக்கள் இன்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

Published:Updated:
sinovac employee ( AP Photo/Ng Han Guan )

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்"

நோய் என்ன, நோய்க்கான காரணம் என்ன, நோய்த்தீர்க்கும் வழி என்ன... இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என வள்ளுவரின் குரல் சொல்கிறது. இருபத்தியோராம் நூற்றாண்டு அறிவியலும் அதையே தான் சொல்கிறது. ஆனால், பல லட்சம் உயிர்களை பலிவாங்கி, உலகையே உலுக்கி கொண்டிருக்கும் ஒரு பெருந்தொற்று நோயினை பற்றி நாம் இன்னும் முழுதாக அறியவில்லை. தினம் உருமாற்றம் அடையும் வைரஸ் தொடங்கி, கருப்பு பூஞ்சை வரை நோய் பற்றிய முழு புரிதலே இன்னும் கிட்டிய பாடில்லை. நோய்க்கான காரணம் ஒன்றரை வருடங்கள் தாண்டியும் கேள்விக்குறியாக இருக்கிறது. இன்னும் நோய்த்தீர்க்கும் வழியும் ஐயமின்றி தெளிவுபடுத்தப்படவில்லை.

Nicholas Wade
Nicholas Wade
thebulletin.org

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் Covid 19 நோய் தொற்று பற்றி இதுவரை கிடைத்த தரவுகளை கொண்டு ‘The Bulletin’ இதழில் அறிவியல் எழுத்தாளர் நிக்கோலஸ் வேட் இந்த நோயின் மூலத்தை பற்றி எழுதியிருக்கிறார். அறிவியல் உலகில் அவரது கருத்துக்கள் இன்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

நிக்கோலஸ் வேட் , Covid-19 வைரஸ் இயற்கையாக உருவாகி விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவும் வைரஸா என்ற கேள்விக்கு பதிலாக முன்வைத்த தரவுகளை இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் விரிவாக பார்த்தோம். அதேபோல Covid-19 வைரஸ் மனிதனால் பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டு அங்கிருந்து கசிந்ததினால் பரவும் வைரஸா? என்ற கேள்விக்கு விடை இந்த கட்டுரையில்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

Covid-19 மனிதனால் பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டு கசிந்த வைரஸா ?

* வைராலஜிஸ்ட்கள் ஒரு வைரஸினுடைய மரபணுவை மாற்றும் அறிவியலை கண்டறிந்ததில் இருந்தே அதை வைத்து பல ஆராய்ச்சிகளை தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஒரு வைரஸ் மனிதனுக்கு எவ்வகையில் தொற்று ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்து முன்னெச்சரிக்கையாக வருங்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வந்தனர். அதற்காக விலங்கிலிருந்து வைரஸ்களை மரபணு மாற்றம் செய்து மனிதனுக்கு தொற்று ஏற்படுத்தும் வைரஸாக உருமாற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

* குறிப்பாக கொரோனா வைரஸ்களை கொண்டு இந்த ஆராய்ச்சி செய்வதில் அறிவியலாளர்கள் ஆர்வம் காட்டினர். கொரோனா வைரஸின் புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள். உருண்டையான பந்துபோல ஒரு உருவம் அதை சுற்றி முள் முள்ளாக நீட்டிக் கொண்டிருப்பது போல தோற்றமளிக்கும் சிறு துணுக்குகள். இந்த நீட்டிக்கொண்டிருக்கும் பகுதிக்கு ஸ்பைக் புரோட்டீன் என்பது பெயர். இந்த ஸ்பைக் புரோட்டீன் தான் அந்த குறிப்பிட்ட கொரோனா வைரஸ் எந்த உயிரினத்தை தாக்கும் என தீர்மானிக்கும். அறிவியலாளர்கள் ஒருமுறை எலிகளில் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரஸை மரபணு மாற்றம் செய்து பூனைகளை மட்டும் தாக்குமாறு வடிவமைத்த அறிவியல் வரலாறு எல்லாம் உண்டு.

Dr.Shi Zhengh-Li
Dr.Shi Zhengh-Li
www.scmp.com

* சார்ஸ் மற்றும் மெர்ஸ் தொற்று நோய்கள் ஏற்பட்ட பிறகு ஆராய்ச்சியாளர்கள் வௌவால்களில் இருக்கும் கொரோனா வைரஸ்களை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர். வூஹான் நகரில் இருக்கும் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைரஸ் எனும் பரிசோதனைக் கூடத்தில் நூற்றுக்கணக்கான வௌவால் கொரோனா வைரஸ்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. சார்ஸ் மற்றும் மெர்ஸ் நோய்களின் மூலத்தை கண்டறிந்த சீனாவின் மிக முக்கியமான வைராலஜிஸ்ட் ஆன டாக்டர். ஷி செங்-லி எனும் அறிவியலாளரின் தலைமையில் இந்த ஆராய்ச்சிகள் நடைபெற்றது. அவருக்கு 'வௌவால் பெண்' (Bat Lady) என்ற புனைபெயர் உண்டு . சார்ஸ் மற்றும் மெர்ஸ் பரவிய சீனாவின் யுனான் மாகாண குகைகளில் இருந்து நூற்றுக்கணக்கான வௌவால்களை பிடித்து வந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் டாக்டர் ஷி செங்-லி.

* ஷி மற்றும் அமெரிக்கா விஞ்ஞானி ரால்ப் எஸ் பாரிக் இருவரும் இணைந்து இந்த வௌவால் கொரோனா வைரஸ்கள் மனிதர்களை எப்படி தாக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் சார்ஸ் வைரஸின் மரபணு மூலக்கூறை எடுத்து அதோடு வேறொரு வௌவால் வைரஸின் மரபணுவை சேர்த்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அந்த புதிய வைரஸிற்கு SHC014-CoV என்று பெயர். உருவாக்கப்பட்ட இந்த புதிய வைரஸ் செல்களை மனித செல்களின் மீது செலுத்தி ஆராய்ச்சி செய்யும் போது, அது மனிதனின் மூச்சு குழாயை பாதிக்கும் தன்மையோடு இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவேளை SARS2 என அழைக்கப்படும் கோவிட்-19 வைரஸ் டாக்டர் ஷி- இன் பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டிருந்தால் அதற்கு சரியான முன்மாதிரியாக இந்த SHC014-CoV வைரஸ் இருந்திருக்கும்.

மருத்துவ ஆராய்ச்சி
மருத்துவ ஆராய்ச்சி

* இந்த வகை வைரஸ் ஆராய்ச்சியில் இருக்கும் ஆபத்தையும் ஷி மற்றும் பாரிக் அறிந்திருந்தனர். அதனால் தான் அவர்களுடைய அறிக்கையில், 'இந்த ஆராய்ச்சியில், பரிசோதனை கூடத்தில் இருந்து ஒரு வைரஸ் கசியும் ஆபத்தும் உண்டு. மிகவும் ஒரு கொடிய வைரஸ் புதிதாக உருவாக்கப்படும் வாய்ப்பும் உண்டு. ஆனால் நாம் ரிஸ்க் எடுக்க வேண்டும். காரணம் வேகமாக முன்னேறும் உலகத்தில் நாளை என்ன மாதிரியான நோய் தாக்குதல்கள் ஏற்படலாம் என முன்கூட்டியே ஆராய்ந்து அதை சரியாக கையாள நாம் தயாராக வேண்டும்' என எழுதியிருந்தார்கள். 2015-ம் ஆண்டு எதை தடுக்க அவர்கள் ஆராய்ச்சியை தொடங்கினார்களோ அது துளி கூட பயன்படவில்லை, உலகம் ஒரு பெருந்தொற்றோடு இன்று போராடிக் கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை இந்த கோவிட்-19 தொற்று பரிசோதனை கூடத்தில் உருவாகியிருந்தால் அவர்கள் எடுத்த ரிஸ்க் ஒரு பேரழிவை உருவாகியிருக்கிறது எனலாம்.

* வௌவால் கொரோனா வைரஸ்களின் மரபணு மாற்றம் செய்து அது பிற உயிரினங்களை தாக்குமாறு வடிவமைக்க கண்டறிந்தவர் பாரிக். அவரிடம் அதை பயின்றவர் ஷி. தற்போது அவர் ஆராய்ச்சியில் ஈடுபடும் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைரஸ் அமெரிக்க நிறுவனத்தின் நிதியில் தான் செயல்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் பீட்டர் தசாக் எனும் விஞ்ஞானியோடு ஆராய்ச்சி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பீட்டர் தசாக் அதை இணை ஒப்பந்தம் மூலம் டாக்டர் ஷி -க்கு அளித்திருக்கிறார். இந்த நிதி பெறுவதற்காக சமர்ப்பித்த தரவுகள் டாக்டர் ஷி மேற்கொண்ட ஆராய்ச்சியினை பற்றி விளக்குகிறது.

* டாக்டர் ஷி மேற்கொண்ட ஆராய்ச்சியின் சுருக்கம் : மனிதர்களை தாக்குவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் கொண்ட ஒரு கொரோனா வைரஸ் உருவாக்குவதே லட்சியம். இதற்காக மனித செல்களோடு பொருந்திப்போகும் ஸ்பைக் புரோட்டீன்களை கண்டறிந்து அதனை வெவ்வேறு வைரஸ் மரபணுக்களோடு செலுத்தி பல புதிய வைரஸ்களை உருவாக்குதல். அதை மனித செல்கள் மற்றும் பரிசோதனை எலிகள் (மரபணு மாற்றம் மூலம் மனித செல்கள் செலுத்தப்பட்ட எலிகள்) மீது செலுத்தி அதன் விளைவுகளை ஆராய்தல். இந்த ஆராய்ச்சியின் மூலம் ஒரு வௌவால் கொரோனா வைரஸ் மனிதர்களை எவ்வாறு தாக்குகிறது என்பதை கண்டறியலாம்.

bats
bats

* இந்த வகையில்தான் கோவிட்-19 வைரஸ் தயாரிக்கப்பட்டது எனவும் உறுதிப்பட சொல்வதற்கில்லை. அதற்கான சாத்தியம் இருப்பதாக மட்டுமே இங்கு அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது. இதுகுறித்து உறுதியாக சொல்ல முடியாத காரணம் டாக்டர் ஷி -யின் ஆராய்ச்சிக்குறிப்புகள் வெளியுலக பார்வையில் இருந்து விலக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஆவணமாக இருக்கின்றது என்பதே. ஆனால், கோவிட்-19 போலவே உள்ள ஒரு வைரஸினை உருவாக்கி ஆராய்ச்சி செய்யும் பணி தான் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் (WIV) நடைபெற்றது என்பது உறுதியான தகவல் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

* WIV - இல் நடைபெற்று வந்த பணிகள் பற்றி, அதற்கு நிதி அளித்து வந்த விஞ்ஞானி பீட்டர் தசாக் டிசம்பர் 9 , 2019-ம் ஆண்டு ஒரு பேட்டியில் "WIV -ல் ஒரு கொரோனா வைரஸின் ஸ்பைக் புரோட்டீனை மாற்றியமைத்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட வைரஸ்கள் உருவாக்கப்பட்டு ஆரய்ச்சிகள் நடக்கின்றன. பல ஆண்டுகளின் முயற்சியால் 100க்கும் மேற்பட்ட சார்ஸ் போன்ற கொரோனா வைரஸ்களை கண்டறிந்திருக்கிறோம். அவற்றில் சில மனித செல்களை பாதிக்கின்றன. சில பரிசோதனை எலிகளில் தொற்று ஏற்படுத்துகின்றன. இவற்றில் சிலவற்றுக்கு மருந்தோ, தடுப்பூசியோ கூட தீர்வாகாது எனத் தெரிகிறது. ஆகவே இவை ஆபத்தானது என உறுதிப்பட தெரிகிறது. இந்த ஆராய்ச்சியின் மூலம் வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு சக்திவாய்ந்த தடுப்பூசியை கண்டுபிடிக்க முடியும்" என கூறியிருந்தார். அப்போது Covid -19 ஒரு பெருந் தொற்றாக மாறாத காலம். ஒருவேளை வூஹானில் இதேபோல ஒரு வைரஸ் பரவி வருவதை உணர்ந்திருந்தால் பீட்டர் தசாக் இப்படி ஒரு பேட்டியை அளித்திருக்கமாட்டார்.

* சரி, இந்த வைரஸ் வூஹான் பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டது என வைத்துக்கொள்வோம். இவ்வளவு முக்கியமான பணியை பாதுகாப்பு இல்லாமலா செய்திருப்பார்கள். அது எப்படி தவறுதலாக வைரஸ் பரவும் என சந்தேகம் எழலாம். அதற்கும் விடை இருக்கிறது. எந்த ஒரு பரிசோதனை கூடமும் BSL1 முதல் BSL4 வரை நான்கு பாதுகாப்பு வகைகளாக பிரிக்கப்படுகிறது. BSL4 அதிகபட்ச பாதுகாப்பை குறிக்கும். 2018-ம் ஆண்டு வூஹான் WIV பரிசோதனை கூடத்தில் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்த சீன அதிகாரிகள் அங்கு BSL4 பாதுகாப்பு அம்சங்கள் போதுமானதாக இல்லை என சீன அரசிடம் தெரிவித்திருந்தார்கள்.

* மேலும் பொதுவாகவே சார்ஸ் மற்றும் மெர்ஸ் வௌவால் கொரோனா வைரஸ்கள் ஆராய்ச்சிக்கு BSL3 பாதுகாப்பு அவசியம் எனவும், மற்ற வௌவால் கொரோனா வைரஸ்களுக்கு BSL2 பாதுகாப்பு போதும் என்று தான் சீன வைராலஜிஸ்ட்களின் விதிமுறைகள் சொல்கிறது. அதன்படி புதிய வைரஸ்கள் உருவாக்கத்தில் WIV இல் பெரும்பாலும் BSL2 வின் குறைவான பாதுகாப்பு அம்சங்களே கடைபிடிக்கப்பட்டிருக்கும். ஆனால், சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்களை விட அதிக ஆபத்தான ஒரு வைரஸ் அங்கு உருவாக வாய்ப்பு உண்டு. அந்த வைரஸ் அங்கு பணிபுரிபவர்களை எளிதாக தாக்கக்கூடும்.

Coronavirus
Coronavirus
Unsplash

* 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் அறிக்கையில், " 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் பணிபுரிந்த பலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாக நம்பப்படுகிறது. அவர்களுக்கு COVID 19 மற்றும் பொதுவான பருவநிலை சார்ந்த சளி ஆகியவற்றின் அறிகுறிகள் தென்பட்டது" என சொல்லியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த கோவிட்-19 வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது தான் என்ற சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் அடுத்த தரவு 'ஃபியூரின் கிளீவேஜ் சைட்' (Furin Cleavage site).

இது சற்று அதீத மரபணு அறிவியல் சார்ந்த விளக்கம். அதை இயன்றவரை எளிதாக்கி பகிர்கிறேன்.

ஸ்பைக் புரோட்டீன் குறித்து முன்னர் பார்த்தோம் அல்லவா? மனிதர்க்கு தொற்றைப் பரப்ப மனித செல்களோடு ஒட்டிக்கொள்ளும் இந்த பகுதி இரண்டு பாகங்களைக் கொண்டது. முதல் பகுதி S1 தொற்று ஏற்படுத்த வேண்டிய உயிரினத்தை அடையாளம் காணும். இரண்டாவது பகுதி S2 தொற்றை பரப்பும். இந்த இரு பகுதிகளும் பிரிவுற்றால் தான் தொற்று பரவும். அந்த பிரியும் பகுதிக்கு தான் 'ஃபியூரின் கிளீவேஜ் சைட்'. இது வௌவால்களிடம் இருக்கும் பீட்டா கொரோனா வைரஸ்களில் கிடையாது. இது மனித செல்களில் காணப்படும் ஒரு பகுதி. இயற்கையில் உருவான சார்ஸ் வைரஸில் இந்த 'ஃபியூரின் கிளீவேஜ் சைட்' வெவ்வேறு இடங்களில் இருக்கின்றது. ஆனால் கோவிட் 19 வைரஸில் இது மனித செல்களில் எங்கு இருக்குமோ அந்த சரியான இடத்தில காணப்படுகிறது. ஒரு வைரஸின் தொற்று ஏற்படுத்தும் திறனை அதிகரிக்க பரிசோதனை கூடங்களில் இந்த 'ஃபியூரின் கிளீவேஜ் சைட்' சரியான இடத்தில் உருவாக்கப்படும் என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது. இருப்பினும், இது வௌவால்களிடம் இருந்து பரவி மனிதர்களின் உடம்பில் உருமாறியிருக்கலாம் அல்லது இந்த 'ஃபியூரின் கிளீவேஜ் சைட்' இருக்கும் கண்டறியப்படாத புதிய வகை பீட்டா கொரோனா வைரஸாக இருக்கலாம் என்று அனுமானங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் எதை நம்புவது என்பது நம்முடைய சாய்ஸ். இவைமட்டுமல்ல இன்னும் இதுபோல சில கூடுதல் அறிவியல் விளக்கங்களும் முன்வைக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

எல்லாம் சொல்லியாயிற்று, இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். அதுவே முக்கியமானது. இந்த கோவிட் - 19 கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்ற கேள்விக்கான விடை இதுதான். இரண்டு சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டியிருக்கிறது. மேலே குறிப்பிட்டதுபோல நிறைய சிறு சிறு தரவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி கிடக்கின்றன. ஆனால் உறுதிபட எதுவுமே இன்று வரை நிரூபிக்கப்படவில்லை.

வூஹான் வைரஸ் பரிசோதனை நிறுவனமோ, சீன அரசோ, உலக வைரஸ் ஆராய்ச்சியாளர்களோ, ஆராய்ச்சிக்கு நிதி அளித்த அமெரிக்கா நிறுவனமோ எவ்வித அரசியல் காரணங்களையும் புறந்தள்ளிவிட்டு, அவர்களிடம் இருக்கும் தரவுகளை பகிர்ந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு காண முடியும். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனலாம்.

பரிசோதனை கூட ஆராய்ச்சியின் விளைவாகவோ அல்லது கண்டறியப்படாத இயற்கை மூலமாகவோ இந்நோய் பரவியிருக்கலாம். இரண்டும் அறிவியல் பிழைகள் தாம். 'Science is a costly affair' என்பார்கள். இம்முறை இந்த அறிவியல் பணத்தை அல்ல மனித உயிர்களை தட்சணையாக்கிக் கொண்டிருக்கிறது. மீள்வதற்கு, அரசு இயந்திரங்களும், இயற்கையும் இரக்கம் காட்டட்டும்.