Published:Updated:

கோவிஷீல்டு: இந்தியாவுக்கு ரூ.600, அமெரிக்காவுக்கு ரூ.300 - ஓரே தடுப்பூசி வெவ்வேறு விலைகளா?!

கோவிஷீல்டு
கோவிஷீல்டு

``இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்து, இந்தியாவுக்கு அதிக விலையிலும், மற்ற நாடுகளுக்குக் குறைந்த விலையிலும் விற்கப்படுவது நியாயமா?''

கடந்த வாரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தின் விலையை உயர்த்தியது `சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா' நிறுவனம். மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் அறிவித்திருந்தது.

தடுப்பூசி
தடுப்பூசி
Greg Lovett /The Palm Beach Post via AP
கொரோனா: செய்வதறியாது தவிக்கிறதா மஹாராஷ்டிரா? - கதிகலக்கும் கள நிலவரம்!

இந்தநிலையில், மாநில அரசுகளுக்கு ஒரு விலையும் மத்திய அரசுக்கு ஒரு விலையும் நிர்ணயிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனாவாலா (Adar Poonawalla), ``மத்திய அரசு ஏற்கெனவே ஆர்டர் செய்திருந்த தடுப்பூசிகளுக்கு மட்டுமே 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இனி புதிதாக மத்திய அரசு தடுப்பூசிகள் ஆர்டர் செய்தால், அவற்றுக்கு 400 ரூபாய் வழங்க வேண்டியிருக்கும்'' என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில், ``மத்திய அரசு, மாநில அரசுகளுக்குத் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்'' என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துத் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ``மருந்து நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு பெறும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளின் கொள்முதல் விலையும் ரூ.150-ஆக நீடிக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து, மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

தடுப்பூசி
தடுப்பூசி

ஹர்ஷ் வர்தனின் இந்த ட்வீட் குறித்து, ``சீரம் நிறுவனம் கூறியிருப்பதும் (மத்திய அரசுக்கும் 400 ரூபாய்தான் என்று கூறியிருப்பது) மத்திய அமைச்சர் கூறுவதும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதில் எது உண்மை? இது குறித்து சீரம் நிறுவனமும் மத்திய அரசும் இணைந்து அறிக்கை வெளியிட்டுத் தெளிவுபடுத்த வேண்டும்'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ். சீரம் நிறுவனம் இதுவரையிலும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருப்பது பற்றி எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

 ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

லாபம் இருந்தும் விலை உயர்வு?

இந்த மாத தொடக்கத்தில் சீரம் நிறுவன உரிமையாளர் பூனாவாலா அளித்த பேட்டியில், ``150 ரூபாய்க்கு கோவிஷீல்டு விற்பனை செய்வதிலேயே எங்களுக்கு லாபம் கிடைக்கிறது'' என்று தெரிவித்திருக்கிறார். அப்படியிருக்கையில் `இப்போது ஏன் விலையை உயர்த்த வேண்டும்?' என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இதே கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்குக் குறைந்த விலையிலேயே விற்கப்பட்டிருக்கிறது. ``இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்து, இந்தியாவுக்கு அதிக விலையிலும், மற்ற நாடுகளுக்குக் குறைந்த விலையிலும் விற்கப்படுவது நியாயமா?'' என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

மற்ற நாடுகளில் என்ன விலை?

ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து, மற்ற நாடுகளில் சுமார் எவ்வளவு ரூபாய்க்கு ( இந்திய மதிப்பில்) விற்கப்படுகிறது என்பதற்கான பட்டியல் பின்வருமாறு:

ஐரோப்பிய நாடுகள் - ரூ.160 முதல் ரூ. 260.
இங்கிலாந்து - ரூ. 225
அமெரிக்கா, வங்கதேசம் - ரூ.300
சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா - ரூ. 392
பிரேசில் - ரூ.235

இந்தநிலையில், `இந்தியாவுக்கு மட்டும் 600 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்ய என்ன காரணம்?' என்கிற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியிருக்கின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில், ``கோவிஷீல்டு தடுப்பூசி விலையில் இந்தியாவோடு மற்ற நாடுகளை ஒப்பிடுவது சரியல்ல'' என்று சீரம் நிறுவனத் தலைவர் பூனாவாலா தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்களுக்குச் சுமையா?

தடுப்பூசி விலை உயர்வால், பொதுமக்கள் இனி கட்டணம் செலுத்தி தடுப்பூசி பெற வேண்டிய நிலை ஏற்படுமா என்கிற சந்தேகம் அனைவரிடமும் எழுந்திருக்கிறது.

மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாகச் செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், கேரளா, கோவா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், டெல்லி, அஸ்ஸாம், சிக்கிம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன.

தடுப்பூசி
தடுப்பூசி
கோவிட் 19: கொரோனா தடுப்பூசி குறித்த சில சந்தேகங்களும், தெளிவான விளக்கங்களும்!

மற்ற மாநிலங்களில், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அரசு மானியம் வழங்கும் என்பதால் குறைந்த விலைக்குத் தடுப்பூசிகள் கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், ரூ. 600 அல்லது அதற்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறித்த விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், நேற்று முன் தினம் கோவாக்ஸின் தடுப்பூசி மருந்தின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், `விலை உயர்வு மூலம் இரண்டு தடுப்பூசி நிறுவனங்களும் மிகப்பெரிய லாபம் சம்பாதிக்க நினைக்கின்றன. இதற்கு மத்திய அரசும் துணை நிற்கிறது' என்கிற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே, இந்தத் தடுப்பூசி விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு