Published:Updated:

கொரோனாவை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனவா மத்திய மாநில அரசுகள்? #CoronaVirus

கொரோனா
கொரோனா

சீனாவுக்கு அடுத்து உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. சீனா தனது முதல் கொரோனா மரணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த சில தினங்களிலேயே அண்டை நாடான இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருந்தது. ஆனால்...

உலக அளவில் 3,497 பேரை பலிகொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இதில் சீனாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 3,070 பேர். புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைக் குறைந்திருப்பதாக கடந்து மூன்று தினங்களுக்கு முன்பு சீன அரசு அறிவித்தாலும் மக்கள் நெருக்கடிக்குப் பெயர் போன பீஜீங் நகரத்துச் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பள்ளிகளுக்கு மிக நீண்டகால விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் படித்து வருகிறார்கள். ஆப்பிள், மைக்ரோசாப்ட், சாம்சங் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்களது சீனத் தொழிற்சாலைகளைத் தேதி அறிவிப்பின்றி தற்காலிகமாக மூடியுள்ளன. `மேட் இன் சைனா’ என்ற பொறிக்கப்பட்டுத் தயாராகும் பொருள்களின் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா
கொரோனா
AP

கொரோனாவின் தாக்கத்தால் பல துறைகளில் தங்களைச் சுருக்கிக் கொண்டிருக்கும் சீனா நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தாலும் அந்தப் பெருஞ்சுவர் தேசம், பழைய நிலைக்குத் திரும்பப் பலகாலம் எடுக்கும். கொரோனா சீனாவில் ஏற்படுத்திய இந்தப் பாதிப்பை அடுத்துதான் உலக சுகாதார மையமும் அதைச் சர்வதேச அச்சுறுத்தலாக அறிவித்தது. சீனாவுக்கு அடுத்து உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. சீனா தனது முதல் கொரோனா மரணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த சில தினங்களிலேயே அண்டை நாடான இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள தொடங்கியிருந்தது.

ஆனால், கடந்த சில தினங்களில் 39 கொரோனா கேஸ்கள் இந்தியாவில் உறுதிசெய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கொரோனா குறித்த எச்சரிக்கைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. சில அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனைக்காக நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் 24 மணிநேரமும் தயார் நிலையிலேயே இருக்கின்றன. இதுவரை ஆறு லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக விமான நிலையங்களின் டேட்டாக்கள் பகிர்கின்றன.

கொரோனா மாஸ்க்
கொரோனா மாஸ்க்
கொரோனா சந்தேகங்களும் உலக சுகாதார நிறுவனத்தின் விளக்கங்களும்! #VikatanPhotoCards

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களைப் பரிசோதனை செய்வதற்காக சிறப்பு ஸ்க்ரீனிங் மையங்களை அந்தந்த நாடுகளிலேயே கட்டமைப்பதற்கும் இந்தியா திட்டமிட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். மாநில மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி அறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இவை தவிர மாநில அரசுகள் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் இதற்கான சிறப்பு பயிற்சியும் அளித்து வருகின்றன. கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள உபயோகிக்கப்படும் மாஸ்குகளை ஏற்றுமதி செய்வதையும் இந்தியா தனது தேவையைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்திக்கொண்டுள்ளது.

கொரோனா விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறைகள் மிகச் சிறப்பாகவே பணியாற்றி வந்தாலும் உண்மையாகவே கொரோனாவை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறதா இந்தியா..?

எய்ம்ஸ் மற்றும் மாநில அரசுகள் நிர்வகிக்கும் ஆகச்சிறந்த மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் இருந்தாலும், 2011 மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி 17.7 லட்சம் வீடற்றவர்கள் வாழும் தேசத்தில் சுகாதாரம் என்பது கேள்விக்குறி. தமிழகத்தில் வீடற்றவர்கள் எண்ணிக்கை சரிவரத் தெரியவில்லை என்றாலும் கடைசியாகக் கிடைத்த அரசின் புள்ளிவிவரப்படி 12,371 பேர் இங்கே வீடற்றவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Homeless in India
Homeless in India

நோய் பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளச் சீனாவில் பெரும்பாலானவர்கள் வீட்டிலேயேதான் அடைந்து கிடைக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் 17.7 லட்சம் மக்கள் கொரோனாவிலிருந்து தப்பிக்க எங்கே தஞ்சம் புக முடியும்? பெரும்பாலும் சாக்கடைகள், சாலையோரம், பாலங்களின் அடியில் வசிக்கும் அவர்களுக்கான பரிசோதனைகளை அரசு எப்படி மேற்கொள்ளும்?

"30 அல்லது 40 பேருக்கான சிகிச்சை என்றால் அதைச் செய்வதற்கு நம்மிடம் மருத்துவ வசதிகள் இருக்கின்றன. அதுவே ஒரே நேரத்தில் 1,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்குச் சிகிச்சை செய்ய நம்மிடம் எவ்வித வசதிகளும் இல்லை" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

அவர் கூறுகையில், "வருடம் முழுவதும் ஏற்படும் சாதாரன தொற்றுநோய்களுக்குச் சிகிச்சை அளிக்க நமது நாட்டில் வசதிகள் இருக்கின்றன. அதுவே, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருக்குமா எனத் தெரியவில்லை. கொரோனா ஒரு அசாதாரண நிலை. இதுபோன்ற பேண்டமிக் வியாதிகள் பெருமளவில் பரவினால் எந்த அரசாலும் போதிய அளவில் சிகிச்சை அளிக்க முடியாது. இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளே தவிப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

மருத்துவர் அமலோற்பவநாதன்
மருத்துவர் அமலோற்பவநாதன்
முகக்கவசம் யெஸ்... ஹேண்ட் சானிட்டைசர் நோ... சென்னை கொரோனா அப்டேட்ஸ்!

ஆகவே, இந்த நோய் பரவாமல் தடுப்பதே ஒரே வழி. அதில் அரசு மட்டுமல்லாமல் பொதுமக்கள் பங்கும் அதிகமாக உள்ளது. வதந்திகளை நம்பாமல் உலக சுகாதார மையம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி நடக்க வேண்டும்...” என்கிறார்.

வீடற்றவர்களின் சுகாதாரத்தை இந்தச் சமயத்தில் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். அதுதொடர்பாக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதை அறிய சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷைத் தொடர்புகொண்டோம்.

"இந்த நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மட்டுமே பரவுவதால் விமானநிலையங்களில் மட்டுமே பரிசோதனைகள் நடக்கின்றன" என்றார்.

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

ஆனால், கொரோனாவைப் பொறுத்தவரை வைரஸ் உடலில் புகுந்த 15 நாள் முதல் 24 நாள்களில்தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். அதனால் ஸ்க்ரீனிங்கில் நெகட்டிவ் எனக் கூறப்பட்டவர்களுக்குப் நோய்த்தாக்கம் பாசிட்டிவ்வாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள். இவை அத்தனையும் கடந்த ஒரு மிகப்பெரிய சவாலையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது கொரோனா தொடர்பான தவறான தகவல்களைத் தடுத்து நிறுத்துதல். தவறான தகவல்கள் பரவுவதை 'இன்ஃபோடெமிக்ஸ்' என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர். தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது பொதுச் சுகாதாரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தாலே ஒழிய அதைக் கட்டுப்படுத்த முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். சுகாதாரத்துறை இவற்றையும் கவனத்தில் கொள்ளட்டும்.

அடுத்த கட்டுரைக்கு