Published:Updated:

இந்தியாவில் கொரோனா சமூகப் பரவல் இருக்கிறதா, இல்லையா... கள நிலவரம் என்ன?

கொரோனா சமூகப் பரவல்
கொரோனா சமூகப் பரவல்

இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் சமூகப் பரவல் இருக்கிறதா, இல்லையா என்ற தர்க்கம் எழவேயில்லை.

இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பில் சமூகப் பரவல் என்ற மூன்றாம் நிலையை அடைந்துவிட்டதா என்ற வாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. களத்தில் நிற்கும் மருத்துவர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் எனப் பலரும், நாம் சமூகப் பரவலுக்குள் நுழைந்து பல நாள்களாகிவிட்டன என்று அடித்துக்கூறியும், மத்திய, மாநில அரசுகள் அதை இன்னும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

`சமூகப் பரவல் இல்லை. ஆனால், சமூகத்தில் பரவலாக நோய் பரவியிருக்கிறது. சமூகப் பரவலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமே தவிர இன்னும் முழுமையாகப் பரவல் ஏற்படவில்லை' என்றெல்லாம் அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

Community Transmission
Community Transmission

தமிழகத்தில் சமூகப் பரவல் உள்ளதா என்று அரசு அதிகாரிகளைக் கேட்டால், `நாங்கள் அதைச் சொல்ல முடியாது, அரசுதான் அறிவிக்க வேண்டும்' என்கிறார்கள். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, `அதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்' என்றார்.

மத்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்துவரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் ஜெனரல் மருத்துவர் பல்ராம் பார்கவா இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ``இந்தியா மிகப்பெரிய நாடு. அதன் அடிப்படையில் நோய்ப் பரவல் விகிதத்தை அணுகும்போது, சிறிய மாவட்டங்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது. நகர்ப்புறங்களில் ஒரு சதவிகிதத்துக்கும் சற்று அதிகமாக உள்ளது. நகர்ப்புறங்களிலும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இன்னும் சற்று அதிகமாக உள்ளது அவ்வளவுதான். இந்தியாவில் சமூகப்பரவல் நிலை இல்லை.

நோய்ப் பரவல் இருக்கும் இடங்களில் மிகவும் கவனம் செலுத்தாவிட்டால் பிற இடங்களுக்கும் அது மோசமாகப் பரவும் வாய்ப்புள்ளது.
தொற்றுநோய் மருத்துவர் டி.சுந்தரராமன்

இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைகள், நோயாளிகளின் தொடர்புகளைக் கண்டறிதல், க்வாரன்டீன், தொடர் சிகிச்சை, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை இனியும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 1.51 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இரண்டு லட்சம் பரிசோதனைகள்வரை செய்யும் வசதி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா பாதித்துள்ள 54 ஆப்பிரிக்க நாடுகளில் 26 நாடுகளில் சமூகப் பரவல் நிலை ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பொது சுகாதார கட்டமைப்புகள் மோசமாக இருக்கும் நாடுகளில் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவின் நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

சமூகப் பரவல் என்றால் என்ன, இந்தியாவில் அது ஏற்பட்டுள்ளதா இல்லையா என்ற கேள்விகளை தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் இயக்குநர் டி.சுந்தரராமனிடம் வைத்தோம்.

corona spread
corona spread
காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை... கல்லாகட்டத் தயாராகும்  தனியார் மருத்துவமனைகள்!

``இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும், சமூகப் பரவல் இருக்கிறதா, இல்லையா என்ற தர்க்கம் எழவேயில்லை. அதை அறிவிப்பதிலும் எந்த நாடும் தயக்கம் காட்டுவதில்லை. கொரோனா பாதித்த பல்வேறு நாடுகளில் சமூகப் பரவல் நிலை ஏற்பட்டுள்ளது. சமூகப் பரவல் ஏற்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில்தான் சிகிச்சையும் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகின்றன. அறிகுறிகள் இருக்கும் அனைவரும் பரிசோதித்துக்கொள்ளலாம் என்ற நிலையும் பல நாடுகளில் இருக்கிறது.

இன்றைய சூழலில் சமூகப் பரவல் என்பதற்குப் பல்வேறு அர்த்தங்களை மாற்றிக்கொண்டே போகிறார்கள். எளிய முறையில் சொல்ல வேண்டும் என்றால் எந்த நபரிடமிருந்து பரவியது என்பதைக் கண்டறிய முடியாத வகையில் நோய் பரவியிருக்கிறது என்றால் அதுதான் சமூகப் பரவல். இந்தியாவில் ரொம்ப நாள்களாகவே சமூகப் பரவல் உள்ளது. தற்போது மறுக்க முடியாத அளவில் பரவல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மறுத்துக்கொண்டேதான் இருக்கின்றனர்.

Dr.T.Sundararaman
Dr.T.Sundararaman

பல இடங்களில், பாதிப்புக்கு உள்ளானவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு எங்கிருந்து நோய் பரவியது என்பதையே கண்டறிய முடியவில்லை. சமூகப் பரவல் மூலம் ஏற்படும் விளைவு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். சமூகப் பரவல் இல்லை என்று மறுக்கும்பட்சத்தில், நோயாளிகளுடன் தொடர்பிலிருந்து அறிகுறிகள் காணப்படுபவர்களை மட்டும்தான் பரிசோதனை செய்வார்கள். ஆனால், சமூகப் பரவல் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் நாடு முழுவதும் அறிகுறிகள் உள்ள அனைவரையும் பரிசோதிக்கும் நிலை ஏற்படும்.

சமூகப் பரவல் இருக்கிறது என்று அறிவித்தால்தான் பரிசோதனைகளை அதிகரிக்க முடியும். இல்லையென்றால் பல்வேறு இடங்களில் நோய்ப் பரவல் அதிகரிக்கும். இது பெரும் ஆபத்தாக முடியும். தற்போது நோய்ப் பரவல் இருக்கும் இடங்களில் மிகவும் கவனம் செலுத்தாவிட்டால் பிற இடங்களுக்கும் அது மோசமாகப் பரவும் வாய்ப்புள்ளது.

corona virus
corona virus
சென்னையில் கொரோனா சோதனை மேற்கொண்டாலே 14 நாள்கள் தனிமை... இது குறித்து மக்கள் கருத்து? #VikatanPollResults

அறிகுறிகள் இருப்பவர்களைப் பரிசோதித்து, நோய்த்தொற்று இருப்பவர்களை அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும் ஆகிய விஷயங்கள் குடிமகனின் உரிமைகளாகப் பார்க்கப்பட வேண்டும். ஒருவருக்குக் கொரோனா அறிகுறி இருந்தால் நேரடியாக சரியான மருத்துவமனைக்கோ பரிசோதனைக்கோ செல்லும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அறிகுறி இருப்பவர் நான்கைந்து மருத்துவமனைகளுக்கு அலைந்து இறுதியாக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்றால், அதுவரை அவர் பல பேருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தியிருப்பார். எனவே, இப்போதுள்ள சூழ்நிலையில் ஒருவருக்கு எங்கிருந்து நோய் வந்திருக்கிறது என்று கண்டறிய முடியாவிட்டாலும் அறிகுறிகள் தோன்றிய பிறகு யாரோடெல்லாம் தொடர்பிலிருந்தார் என்பதைக் கண்டறிந்து, அவர்களைப் பரிசோதிக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் சமூகப் பரவல் நிலையைக் கையாள முடியும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு