Published:Updated:

கொரோனா: தமிழகத்தில் சமூகப் பரவலை ஒப்புக்கொண்டால் என்ன நடக்கும்? #ExpertExplains

சமூகப் பரவல்
சமூகப் பரவல்

கொரோனா: சமூகப் பரவல் என்பது நமது வீட்டில் நெருங்கி இருப்பவர்கள் மூலம் அல்லது நாம் சமூகத்தில் புழங்கும்போது ஏற்படும் தொற்று ஆகும்.

இந்தியாவில் சமூகப் பரவல் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு பதில் தெரியும் முன்னர் கொரோனாவே கோபித்துக்கொண்டு நடையைக் கட்டிவிடும்போல. எடுத்த எடுப்பிலேயே சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தில் சமூகப் பரவல் வந்துவிட்டது. ஆனால், தொடர்ந்து இதை மத்திய அரசும் மாநில அரசும் மறுத்துக்கொண்டே வருகின்றன.

Community Transmission
Community Transmission

சமூகப் பரவலுக்கான வரையறையைத் தவறாக அரசுகள் உரைக்கின்றன. இவர்கள் சொல்லும் வரையறையைப் பார்த்தால், எத்தனை தொற்றுகள் வந்தாலும் சமூகப் பரவல் இந்தியாவில் வராது. பூனை கண்களை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிட்டதாக நினைத்துக்கொள்ளும் என்பதுபோல இருக்கிறது அரசுகளின் செயல்பாடு.

குழப்பும் அரசுகள்

மத்திய, மாநில அரசுகளின் வரையறையின்படி புதிதாக ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எங்கிருந்து, யாரிடமிருந்து தொற்று பரவியது என்று தெரிந்துவிட்டால் அது சமூகத் தொற்று இல்லை என்கிறார்கள். அதாவது, புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டவர் எந்த மளிகைக் கடைக்குச் சென்றார், எந்த அலுவலகத்துக்குச் சென்றார், அங்கு யாருக்காவது தொற்று இருந்தது என்றால் அது சமூகப் பரவல் இல்லை. ஒருவருடன் ஒருவர் தொடர்பினால் ஏற்பட்டது என்கின்றன அரசுகள்.

Dr.Dhileepan Selvarajan
Dr.Dhileepan Selvarajan

அப்படிப் பார்த்தால் எல்லோருடைய தொடர்பையும் கண்டுபிடித்துவிடலாம். அதற்காக சமூகப்பரவலே இல்லை என்று கூறிவிட முடியுமா? தினமும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பலருக்கு தொடர்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவை அனைத்தும் சமூகப் பரவல் என்று எடுத்துக்கொள்ளலாமா? சமூகப் பரவல் இல்லையென்றால் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் கொரோனா எப்படி வந்தது?

சமூகப் பரவல் என்றால் என்ன?

சமூகப் பரவல் என்பது நமது வீட்டில் நெருங்கி இருப்பவர்கள் மூலம் அல்லது நாம் சமூகத்தில் புழங்கும்போது ஏற்படும் தொற்று ஆகும். அது மக்கள்தொகை/ நெருக்கம்/ அடர்த்தி அதிகமுள்ள சென்னை போன்ற நகரங்களில் வருவது இயல்புதான். இருந்தாலும், மத்திய அரசும் இந்திய மருத்துவ ஆணையமும் தமிழக அரசும் தொடர்ந்து மறுத்து வருகின்றன.

முழுமையான ஊரடங்கு என்றில்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
இதயநோய் மருத்துவர் திலீபன் செல்வராஜன்

சமூகப் பரவல் உள்ளது அரசுகளுக்கு நன்றாகவே தெரியும். இதை மறுப்பதற்கான காரணம் மக்கள் மத்தியில் பீதியைக் குறைப்பதற்காக இருக்கலாம். மேலும் உலக நாடுகள் மத்தியில் நாம் ஏதோ மிகச் சிறப்பாகக் கொரோனாவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறோம் என்ற பிம்பத்தை உருவாக்கி வருகிறோம்.

இந்நிலையில் இந்தியாவைப்போல மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் சமூகப் பரவல் என்றால் பிற நாடுகள் மத்தியில் மதிப்பை இறக்கிவிடும் என்ற எண்ணமும் காரணம். ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலத்தைவிட சிறப்பாகச் செயல்படுவதாகக் காட்டிக்கொள்ளவே அவ்வாறு செயல்படுகின்றன.

சமீபத்தில் காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று தெரியவந்துள்ளது. அப்படியென்றால் இன்னமும் நாம் சமூகப் பரவல் இல்லையென்று சொல்லிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம்.

covid-19 testing
covid-19 testing

ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?

சமூகப் பரவல் இருப்பதை அங்கீகரிக்கும்போது கொரோனாவை எதிர்கொள்ள கடைப்பிடிக்கும் கொள்கைகளில் உத்திகளில் மாற்றம் ஏற்படும். பொதுமக்களும் அதிக விழிப்புணர்வுடன் இருப்பார்கள். சமூகப்பரவல் இருக்கிறது என்றால், ஆங்காங்கே இருக்கும் பொதுமக்களுக்கும் (Random Testing) பரிசோதனை செய்ய வேண்டும். அந்த அளவுக்கு நம்மிடம் போதிய பரிசோதனை வசதிகள் இல்லை.

நோய்க்கு எதிரான எதிர்ப்புப்பொருள் (ஆன்டிபாடி) உடலில் உருவாகியுள்ளதா என்று சமூகத்தில் ஆன்டிபாடி பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் எந்த அளவுக்குச் சமூகப்பரவல் உள்ளது, எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். 'குழு பரிசோதனை' முறையில் இருந்து நகர்ந்து 'ரேண்டம் பரிசோதனை'களைச் செய்ய வேண்டும். முழுமையான ஊரடங்கு என்றில்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

சமூகப் பரவல் என்றால் உடனே அச்சப்படத் தேவையில்லை. கொரோனா போதுமான அச்சத்தை ஏற்கெனவே தந்துவிட்டது. அதனால் மேலும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் வளர வேண்டும்.

corona infection
corona infection
அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கும் கொரோனா... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையின்படி, அதிக நோயாளிகளுக்கு யாரிடமிருந்து தொற்று பரவியது என்று கண்டறிய முடியாவிட்டாலோ பரிசோதனை மையங்களில் அதிக எண்ணிக்கையானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டாலோ அது சமூகப் பரவல் ஆகும்.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒருநாளைக்கு 300 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டபோதே சமூகப் பரவல் என்று ஒப்புக்கொண்டார்கள். தினமும் தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 4,000-த்தைத் தாண்டும்போதும் சமூகப் பரவல் இல்லையென்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.

இவையெல்லாம், அரசுகள் கொரோனாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று காட்டிக்கொள்வதற்காக மட்டுமே. பெருந்தொற்று பரவும் நேரத்தில் நோயைத் திறம்பட கட்டுப்படுத்துவத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு