Published:Updated:

`87% பேர் பாதிக்கப்படலாம்; சமூகப் பரவலை நோக்கி நகர்கிறதா பஞ்சாப்?’-அமரீந்தர் சிங் அச்சம்

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

முதல்நிலையில் பயண வரலாறு உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வைரஸ் தொற்று இருக்கும். இரண்டாவது நிலையில் பயண வரலாறு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும். மூன்றாவது நிலையில்தான் சமூகப் பரவல் ஏற்படும்.

கொரோனா வைரஸால் உலக நாடுகள் பலவும் தங்களது இயல்பு நிலையை இழந்து திணறி வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் இதுவரை இந்த வைரஸால் 6,412 பேர் பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸுக்கு 199 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நாளுக்குநாள் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங், மாநிலத்தில் சமூகப் பரவல் தொடங்கியுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

முதல்நிலையில் பயண வரலாறு உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வைரஸ் தொற்று இருக்கும். இரண்டாவது நிலையில் உள்ளூர் அளவில் இந்த வைரஸ் தொற்று ஏற்படும். மூன்றாவது நிலையில்தான் சமூகப் பரவல் ஏற்படும் அதாவது மேற்சொன்ன இரண்டும் இல்லாத நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருக்கும். நான்காவது நிலையில் இது மிகப்பெரிய அளவில் வெடிப்பாகப் பரவும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சமூகப் பரவல் இல்லை என்றே சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது பஞ்சாப் முதல்வர் கூறியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல்... நெரிசலில் வாழ்வோர், மலைப் பிரதேசவாசிகளுக்கான பாதுகாப்பு  ஆலோசனைகள்!VikatanPhotoCards

அமரீந்தர் சிங் இதுதொடர்பாகப் பேசுகையில், ``பயண வரலாறு இல்லாத 27 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் இரண்டாம் நிலையில் உள்ளவர்கள். இதை சமூகப் பரவல் என்றும் கூறலாம். இதுதான் சமூகப் பரவலுக்கான அறிகுறி. எனவே, சமூகப் பரவல் நிலையை நோக்கி மாநிலம் நகர்கிறது. கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ``பஞ்சாப்பில் 132 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்துள்ளனர். தற்போது ஒரு நோயாளி மட்டுமே வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு பேர் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இவர்களுக்கு ஆக்சிஜன் உதவி மட்டுமே தற்போது தேவைப்படுகிறது. எங்களிடம் 76 வென்டிலேட்டர்கள் அரசு மருத்துவமனைகளிலும் 358 வென்டிலேட்டர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 2,877 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நிஜாமுதீன் மாநாட்டில் பஞ்சாப்பைச் சேர்ந்த 651 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 636 பேரைக் கண்டறிந்துள்ளோம். 15 பேரைத் தேடி வருகிறோம். மேலும், 11 பேர் இந்த வைரஸுக்குப் பலியாகியுள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா
கொரோனா

தொடர்ந்து அவர் பேசுகையில், ``மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் எனக் கூறியுள்ளனர். இந்தியாவில் 58% பேர் இந்த வைரஸால் பாதிப்படைவார்கள். பஞ்சாப்பில் உள்ள மக்களில் 87% பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாவார்கள். எனவே, தொற்று நோய்ப் பரவலை முறையாகக் கவனிக்க வேண்டும். அதற்கேற்றவாறு மாநில அரசுகள் திட்டங்களை வகுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமூக பரவல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், ``இந்தியாவில் இதுவரை சமூக பரவல் என்பது இல்லை. எனவே, அச்சப்படத் தேவையில்லை. ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்.

`150 பேருக்கு வைரஸ் பாசிடிவ்; தனித் தீவில் மன்னர்!' -சவுதி அரசக்குடும்பத்தைச் சுற்றும் கொரோனா?
அடுத்த கட்டுரைக்கு