குழந்தைகளிடம் தடுப்பூசி ஆய்வு நடத்த அனுமதி கோரும் பாரத் பயோடெக்... இது நிச்சயம் தேவைதானா?

குழந்தைகளிடையே செய்யப்படும் ஆய்வுக்கு அதீத கவனமும் அக்கறையும் தேவை. நாம் செய்யும் ஆய்வின் மூலம் குழந்தைகளுக்கு துன்பமும் பலவீனமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே முதல் கொள்கையாக இருக்க வேண்டும்.
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இயங்கி வரும் பாரத் பயோடெக் தடுப்பூசி உற்பத்தி நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும், தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசி, வெற்றிகரமாக தனது முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை முடித்தது. தற்போது அவசரகால முன் அனுமதி பெற்று முன்களப் பணியாளர்களிடையே மூன்றாம் கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
ஜனவரி 16, 2021 முதல் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டு திறன் (Immunogenecity) மற்றும் பாதுகாப்பு (Safety) ஆகிய இரண்டு அம்சங்களும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்ட பின்பே, இந்தத் தடுப்பூசிக்கு அவசர கால முன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

22,500 தன்னார்வலர்களிடையே நடத்தப்பட்டு வரும் இந்த கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள், பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த ஆய்வு முடிவுகளில் இந்த தடுப்பூசி எவ்வளவு செயல்திறனுடன் கோவிட் நோயை தடுக்கும் (Efficacy) என்பது தெரியவரும்.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் 2 வயது முதல் 18 வயதினருக்கு இந்தத் தடுப்பூசியை செலுத்தி ஆராய்ச்சி செய்ய சுகாதாரத்துறையின் அனுமதியை கோரியுள்ளது.
மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளிடையே ஆய்வு செய்ய அவசரம் காட்டுவது தேவைதானா என்று அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்களின் கருத்துக்கு வலிமை சேர்ப்பதுபோல, இந்தியாவில் கோவிட் நோயின் தாக்கம் குறித்த புள்ளியியல் முடிவுகள் உள்ளன.
இந்தியாவில் கோவிட் நோய் தாக்கத்துக்கு உள்ளானவர்களில் 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் சதவிகிதம் வெறும் 0.5% மட்டுமே. அதிலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை உள்ளடக்கிய ஆய்வுகளில் 5 முதல் 17 வயதுடைய பிள்ளைகளிடையே 0.05% மட்டுமே கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பெரும்பான்மை மரணங்கள் 40 முதல் 59 வயதுடையோர் மத்தியிலேயே நிகழ்ந்துள்ளன.
உலகம் முழுவதிலும் இருந்து வரும் கோவிட் சார்ந்த புள்ளியியல் கணக்குகளும் இதே முடிவுகளையே எடுத்தியம்புகின்றன. குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரிடையே 1 முதல் 5% நோயாளிகள் மட்டுமே கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியரிடத்தே செய்யப்பட இருக்கும் இந்த ஆய்வின் தேவைக்கு வலுசேர்க்கும் விதமாக, சமீபத்தில் தேசிய அளவில் செய்யப்பட்ட மூன்றாம் கட்ட தேசிய அளவிலான கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கண்டறியும் கள ஆய்வு முடிவுகளில் 10 முதல் 17 வயதினரிடையே யாரும் இதுவரை எதிர்பார்க்காத அளவில் ஆய்வில் பங்குபெற்றவர்களுள் 25% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பள்ளி செல்லும் வயதினரிடையே தடுப்பூசிக்கான ஆராய்ச்சி செலுத்துவதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ், சுவாசப்பாதை செல்களை அபகரிக்கவும் நங்கூரம் போட்டு ஊடுருவவும் தேவையான ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் ரிசப்ட்டார்கள் (ACE receptors) குழந்தைகளுக்கு முழுமையாக வளர்ச்சி அடைந்திருப்பதில்லை. இதுவே குழந்தைகளிடையே பெரிய அளவில் கொரோனா தாக்கம் இல்லாமல் இருப்பதற்குக் காரணமாக முன்வைக்கப்படுகின்றது.
எனினும், கோவிட் தாக்கிய குழந்தைகளுக்கு மிகவும் அரிதாக MIS-C (Mulit Organ Inflammatory syndrome in children) எனும் நோய் நிலை உண்டாகிறது. இதில் குழந்தைகளின் சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன. எனினும் இந்த நோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் சிறப்பான முன்னேற்றத்தையும் காண முடிகின்றது.
கோவாக்சின் என்பது செயலிழக்கப்பட்ட கொரோனோ வைரஸ்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டு (Inactivated vaccine) இருப்பதால் குழந்தைகளிடையே பாதுகாப்பானதாக இருக்கும் என்றே நம்பப்படுகின்றது.
இதே வகை செயலிழக்கப்பட்ட வைரஸ் தொழில்நுட்பத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முக்கிய தடுப்பூசி IPV எனப்படும் (Inactivated Polio Vaccine). இந்தத் தடுப்பூசி, குழந்தைகள் பிறந்த 6 மற்றும் 14-வது வாரத்தில் வழங்கப்படுகிறது.
பாரத் பயோடெக் நிறுவனம் 2 முதல் 18 வயதினரிடையே செய்யும் இந்த ஆய்வை நாக்பூர் நகரில் உள்ள மருத்துவமனையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
மருத்துவ அறிவியல் சார்ந்த ஆய்வுகளுக்கு தரக்கட்டுப்பாடுகளையும், நெறிமுறைகளையும், தன்னார்வலர்களின் உரிமைகளைப் பேணுவது குறித்த கொள்கைகளை வகுக்கும் `ஹெல்சின்கி உடன்படிக்கை'யைத்தான் உலகெங்கும் உள்ள ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

அதிலும் குழந்தைகளிடையே செய்யப்படும் ஆய்வுக்கு அதீத கவனமும் அக்கறையும் தேவை. நாம் செய்யும் ஆய்வின் மூலம் குழந்தைகளுக்கு துன்பமும் பலவீனமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே முதல் கொள்கையாக இருக்க வேண்டும்.
நாம் செய்யும் ஆய்வின் மூலம் குழந்தைகளுக்கு நன்மை கிடைப்பதாக (Benefit should outweigh Risk) இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே நன்மை, தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து இந்திய சுகாதாரத்துறை இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்க வேண்டும்.