Published:Updated:

உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் 110 கோடி தடுப்பூசிகள்... இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படுமா?

COVID-19 vaccine at the Serum Institute of India
COVID-19 vaccine at the Serum Institute of India ( AP Photo/Rafiq Maqbool )

புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்திடம், 110 கோடி கொரோனா தடுப்பூசிக் குப்பிகள் வாங்க ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெஃப் ஆகிய இரண்டும் ஒப்பந்தம் செய்துள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருந்த காலத்தில் எப்படியாவது இதற்கு தடுப்பூசி கண்டறிந்து, நோயை விரட்டிவிட முடியாதா என்று உலக நாடுகள் அனைத்தும் ஏங்கிக்கொண்டிருந்தன. தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா எனப் பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளைக் கண்டறிந்துவிட்டன என்பது மகிழ்ச்சிதான் என்றாலும், விநியோகம் எல்லா நாடுகளுக்கும் சீராக இருக்குமா, குறைந்த விலையில் தடுப்பூசி கிடைக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

COVID-19 vaccine trial
COVID-19 vaccine trial
AP Photo / Ted S. Warren

இந்நிலையில், புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்திடம், 110 கோடி கொரோனா தடுப்பூசிக் குப்பிகள் வாங்க ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெஃப் ஆகிய இரண்டும் ஒப்பந்தம் செய்துள்ளன. 110 கோடி மருந்துகள் 100 நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனிக்கா ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பில் கண்டறியப்பட்ட தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

பிற நாடுகளுக்கும் குறைந்த செலவில் தடுப்பூசியை வழங்க சீரம் நிறுவனம் நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, ஒரு தடுப்பூசிக் குப்பி 3 அமெரிக்க டாலர் என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.225 ஆகும். இந்தப் பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிக்கான தேவை அனைத்து நாடுகளுக்கும் உள்ளது. இந்நிலையில் சொந்த நாட்டை விட்டுவிட்டு பிற நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்குவது சரியான முடிவா, இதனால் இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று மருத்துவரும் அரசியல் விமர்சகருமான சுமந்த் சி ராமனிடம் கேட்டோம்...

COVID-19 Vaccines
COVID-19 Vaccines
AP Illustration/Peter Hamlin
`முதல் டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?!' - மருத்துவ விளக்கம்

``தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பில் இந்தியாவுக்கு பெரிய அனுபவமில்லை. ஆனால், உற்பத்தியில் மிகப்பெரிய அனுபவம் கொண்ட நாடு இந்தியா. ஏற்கெனவே சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்கள் பல்வேறு உலகநாடுகளுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகின்றன. ரோட்டா வைரஸ், போலியோ, எம்.எம்.ஆர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

அதனால்தான் கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலேயே பிரிட்டனின் ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனத்துடன் சீரம் நிறுவனம் தடுப்பூசிக்காக ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசிகளைப் உற்பத்தி செய்து வருகிறது.

பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசியை மட்டுமே உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பணக்கார நாடுகள் தடுப்பூசியை ஆர்டர் செய்துவாங்கிவிட்டால் வளரும் நாடுகள், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும். இதனால் பணம் படைத்த நாட்டினர் மட்டுமே நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Rafiq Maqbool
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமா, கூடாதா? தொடரும் குழப்பம்

தடுப்பூசி என்பது எல்லா மனித உயிர்களுக்கும் ஒன்றுதான். அனைத்து நாட்டு மக்களுக்கும் இதைப் பகிர்ந்துகொடுக்க வேண்டும் என்ற நோக்கில் உலக சுகாதார நிறுவனம் மருந்து நிறுவனங்கள், பல நாட்டு அரசுகள் ஆகியோரை இணைத்து கோவேக்ஸ் (COVAX) என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

அந்த அமைப்பு, உறுப்பினர்களாக இருக்கும் மற்ற நாடுகளுக்கு குறைந்த செலவில் தடுப்பூசி தயாரித்துக் கொடுக்க முனைந்தது. குறைந்த செலவில் தயாரிக்க வேண்டும் என்றால் முதலில் நினைவுக்கு வருவது இந்தியாதான். அதனால்தான் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்ட்டியூட்டுடன் இணைந்து குறைந்த செலவில் தடுப்பூசி தயாரித்து கோவேக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. வேறு நாடுகளுக்கு அனுப்பினாலும் கோவிஷீல்டு என்ற பெயரில்தான் மருந்துகள் உற்பத்தி செய்யப்படும்.

பாகிஸ்தானுக்கும் தடுப்பூசி!

சுமந்த் சி ராமன்
சுமந்த் சி ராமன்

இந்தத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்குத் தேவையான தடுப்பூசிகளையும் இந்தியாதான் தயாரிக்க உள்ளது. பாகிஸ்தானுக்கு நேரடியாக இந்தியா தடுப்பூசிகளை அனுப்பியது கிடையாது. இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் பாகிஸ்தானுக்கும் அனுப்பப்படும். இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஏற்கெனவே நேரடியாகத் தடுப்பூசி அனுப்பப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படுமா?

சீரம் இன்ஸ்டிடியூட் என்பது ஒரு தனியார் நிறுவனம். அதை இந்தியாவுக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இருப்பினும் அந்நிறுவனம் இந்தியாவுக்குத்தான் 5 கோடி மருந்துகளைக் கொடுப்போம் என்று முதலிலேயே தெரிவித்தது.

Covishield
Covishield
COVID19: `தடுப்பூசி செலுத்துவதில் உலகிலேயே வேகமான நாடு இந்தியா!' - மத்திய சுகாதாரத்துறை

உண்மை நிலவரம் என்னவென்றால், இந்தியாவில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குப் போடப்பட்டது. அதற்கே எதிர்பார்த்த எண்ணிக்கையில் நபர்கள் செல்லவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியிலேயே தயக்கம் காணப்படுகிறது. எதிர்பார்த்த எண்ணிக்கையில் 30-40 சதவிகிதம் பேர்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 25 நாள்களில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேருக்குதான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களுக்கு முழுவீச்சில் தடுப்பூசி போடத் தொங்கிய பிறகுதான் பற்றாக்குறை இருக்கிறதா என்பது தெரியவரும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு