Published:Updated:

சொல்லும் காலம் - 3: கொரோனா காலத்திலும் ஆயுதம் வாங்கும் அரசுகள்!

A man walks past graffiti in Kochi, Kerala
A man walks past graffiti in Kochi, Kerala ( AP Photo/R S Iyer )

2020ம் ஆண்டுக்கான அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. இதன்படி உலகிலேயே ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடு அமெரிக்கா. இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. மூன்றாவது இடம் இந்தியாவுக்கு!

உலகையே கொரோனா என்கிற கொடும் நோய்த்தொற்று அச்சுறுத்தும்போது நீங்கள் மருந்துகளுக்கும் தடுப்பூசிகளுக்கும் மருத்துவக் கட்டமைப்புக்கும் செலவு செய்வீர்களா? அல்லது ஆயுதம் வாங்கி ராணுவத்தை பலமாக மாற்றுவது பற்றி யோசிப்பீர்களா?

உலகம் பெரும்பாலும் இரண்டாவது வழியையே தேர்வு செய்திருக்கிறது என்பதுதான் வேதனை.

கொரோனா எங்கெங்கும் மருத்துவப் பேரழிவை ஏற்படுத்தியதுடன் நிற்காமல், உலகம் முழுக்க பெரும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியது. ஜெர்மனி, ஜப்பான், சீனா, அமெரிக்கா என பொருளாதார வல்லமை மிகுந்த தேசங்களும் நிறைய இழப்பைச் சந்தித்தன. உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியே 4.4 சதவிகிதம் சுருங்கியது. இந்த சூழலிலும் உலகின் ராணுவச் செலவு கடந்த 2019-ம் ஆண்டைவிட 2020-ம் ஆண்டில் 2.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Indians, most of them, wearing face masks as a precautionary measure against the coronavirus crowd a Sunday market in Jammu
Indians, most of them, wearing face masks as a precautionary measure against the coronavirus crowd a Sunday market in Jammu
AP Photo/Channi Anand

ஸ்வீடன் நாட்டில் இருக்கும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிலையம் என்ற அமைப்பு, உலக நாடுகள் செய்யும் ராணுவச் செலவுகள் பற்றி ஆண்டுதோறும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. புதிய ஆயுதங்கள் வாங்குவது, ராணுவத்தினருக்கான சம்பளம், பென்ஷன், தளவாடச் செலவுகள் என எல்லாவற்றையும் பரிசீலித்து இந்த அறிக்கை வெளியிடப்படும்.

2020ம் ஆண்டுக்கான அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. இதன்படி உலகிலேயே ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடு அமெரிக்கா. இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. மூன்றாவது இடம் இந்தியாவுக்கு. ரஷ்யாவும் பிரிட்டனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலக ராணுவச் செலவில் இந்த ஐந்து நாடுகளின் பங்கு மட்டுமே 62 சதவிகிதம். மற்ற எல்லா நாடுகளும் சேர்த்து மீதி 38 சதவிகிதம் செலவழிக்கின்றன.

அமெரிக்காவின் ராணுவச் செலவு 58 லட்சம் கோடி ரூபாய். 2019ம் ஆண்டைவிட இது 4.4 சதவிகிதம் அதிகம். சீனாவின் ராணுவச் செலவு 18 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய். 2019ம் ஆண்டைவிட இது 1.9 சதவிகிதம் அதிகம். இந்தியாவின் ராணுவச் செலவு 5 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய். 2019ம் ஆண்டைவிட இது 2.1 சதவிகிதம் அதிகம்.
Indian Army
Indian Army

இந்தியா அதிகம் செலவு செய்வதற்குக் காரணம், எல்லையில் சீனா முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மோதல் போக்கில் ஈடுபடுவது. இதனால் எல்லையில் படைகளைக் குவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் பாகிஸ்தானுடன் நிலவும் நிரந்தரப் பகை, அந்த எல்லையிலும் அதிக கண்காணிப்பு தேவையுள்ள சூழலை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் அதிகரித்து வரும் பதற்றமும் அங்கு ராணுவத்தின் தேவையை அதிகரித்துள்ளது. இதைத் தாண்டி ராணுவத்தை நவீனப்படுத்தவும் இந்தியா நிறைய செலவு செய்ய வேண்டிய சூழலில் உள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுக்க மாபெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அதனால் அந்த ஆண்டு ராணுவச் செலவு கணிசமாகக் குறைந்தது. அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் ராணுவச் செலவும் உயர்ந்துகொண்டே வந்தது. 2020-ம் ஆண்டில் கொரோனா மற்றும் பொருளாதார பாதிப்புகள் காரணமாக இது குறையும் என நிபுணர்கள் நினைத்தார்கள். ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகபட்சமாக செலவு உயர்ந்திருக்கிறது என்பதுதான் வேதனை.

2020-ம் ஆண்டில் உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ராணுவத்துக்காகச் செலவிட்டது 148 லட்சம் கோடி ரூபாய்.

இதில் வழக்கமான செலவுகள் போக புதிய ஆயுதங்கள் வாங்குவதற்காக செலவிட்ட பணத்தை வைத்து, இந்த உலகம் முழுக்க எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகக் கொடுத்திருக்கலாம். ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லாமல் செய்திருக்கலாம்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
'பாதுகாப்பு' என்பதை எல்லையில் ராணுவ வீரர்கள் செய்யும் கடமையாக மட்டுமே ஆள்பவர்கள் நினைக்கிறார்கள். எல்லையைத் தாண்டி உள்ளே இருக்கும் அத்தனை மக்களை நோயின் அச்சத்திலிருந்து மீட்பதும் 'பாதுகாப்பு' செலவுதான்.

ஆயுதங்களுக்காகச் செலவிடும் அரசுகளுக்கு, மருந்துகளுக்காகச் செலவிட மனம் இருப்பதில்லை என்பதுதான் துயரம்!

அடுத்த கட்டுரைக்கு