Published:Updated:

கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வெளிநாடு செல்வதில் சிக்கலா? - உண்மை என்ன?

 Vaccine
Vaccine ( AP Photo / Mahesh Kumar A )

கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆகையால், அதைப் போட்டுக்கொண்டவர்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

வெளிநாடுகளில் படிப்பதற்காகப் பதிவு செய்திருந்த மாணவர்கள் பலரும் கோவாக்சின் தடுப்பூசி போட்டதால், அங்கு செல்வதற்கான விசா கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதாகச் சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.

கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆகையால், அதைப் போட்டுக்கொண்டவர்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் பணிபுரிவோர், மேற்படிப்புக்காகச் செல்ல முயன்றோர் என்று பலரின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை நிராகரித்துள்ளது என்று தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

Corona Vaccine | கொரோனா தடுப்பூசி
Corona Vaccine | கொரோனா தடுப்பூசி
via AP

இதனால், ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற பலரும், இப்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் எதைப் போட்டுக்கொள்வது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.

இந்தியாவில் கோவிட் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகளின் பயன்பாட்டிற்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், இவற்றில் கோவிஷீல்டு மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழுள்ள பட்டியலில் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து, முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. இதுவரை 16.7 கோடி மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியையும் 1.9 கோடி மக்கள் கோவாக்சின் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கோவாக்சின் பயன்பாட்டுக்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும்கூட, அதற்கு சர்வதேச அளவில் பல நாடுகள் அனுமதி வழங்கவில்லை. இதுவரை, இந்தியா, கயானா, மெக்சிகோ, ஈரான், நேபாள், பிலிப்பைன்ஸ், ஜிம்பாப்வே, மொரீஷியஸ், பாராகுவே ஆகிய 9 நாடுகளில்தான் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளில் கோவாக்சினுக்கு அனுமதி இல்லாததால், இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவே விரும்புகின்றனர்.

இதேநேரம், பள்ளிப் படிப்பை சமீபத்தில் முடித்த மாணவர்கள் பலரும் இப்போது குழப்பத்தில் இருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தேர்வுகளை எழுதுவதற்காக பல மாணவர்கள் கோவாக்சின் போட்டுக்கொண்டனர். ஆனால், அதற்குப் பின்னர், அவர்கள் வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காகச் செல்வதில் கோவாக்சின் தடையாக இருக்குமோ என்று அஞ்சுகின்றனர். இது பல மாணவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கியுள்ளது.

உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள்
உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள்

இதுகுறித்துப் பேசிய மத்திய அரசின் புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், ``இவையனைத்துமே பொய். முதலில், எந்த நாடுமே இந்தத் தடுப்பூசியைப் போட்டால்தான் அனுமதிப்பேன் என்று இதுவரை சொல்லவில்லை. பல மூன்றாம் உலக நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் கிடையாது. அதனால், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம்தான் தடுப்பூசியை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறது. உலகளவில் 17 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் எதை வாங்குவது என்ற கேள்வி வரும்போது, அதற்கென ஒரு கமிட்டி அமைத்து எந்தெந்த தடுப்பூசிகளை வாங்கலாம் என்று தீர்மானிக்கிறது. அதில், பரிசோதனைக் கட்டங்கள் முடிந்து முழுமையான ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளை மட்டுமே அவர்கள் வாங்குவதற்குத் தீர்மானிக்கிறார்கள். அதில் கோவாக்சின் இல்லை.

கோவாக்ஸ் என்ற அந்தத் திட்டத்தின்கீழ், ஃபைசர், அஸ்ட்ராஸெனகா, சீரம், ஜான்சன், மாடர்னா ஆகியவற்றின் தடுப்பூசிகளை மட்டுமே வாங்குவதற்குத் தீர்மானித்துள்ளார்கள். சமீபத்தில் சீனாவின் கொரோனாவாக் என்ற ஒரு தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆனால், இதற்கும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால்தான் எங்கள் நாட்டிற்குள் வர முடியும் என்று எந்த நாடும் சொல்லவில்லை. தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் கோவாக்ஸ் திட்டத்தில் பட்டியலிட்டுள்ள தடுப்பூசிகள்
உலக சுகாதார நிறுவனம் கோவாக்ஸ் திட்டத்தில் பட்டியலிட்டுள்ள தடுப்பூசிகள்
Covid Questions: தடுப்பூசி போட்ட பின் அறிகுறிகள் இல்லையெனில் மருந்து வேலை செய்யவில்லை என அர்த்தமா?

கோவாக்சின் போட்டால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என்பது உண்மையில்லை. அமெரிக்காவில் பி1, பி2 விசாக்களுக்கு இப்போது அனுமதி கிடையாது. ஒரு சில நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்வதற்கு இப்போது அனுமதி கிடையாது. அந்தப் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. இங்கிருந்து பி1, பி2 விசாக்களில் யாரும் அமெரிக்கா செல்ல முடியாது. அதாவது, இந்தியாவிலிருந்து செல்ல முடியாது. ஓர் இந்தியர் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா செல்வதற்கு அனுமதியுண்டு. ஆனால், இந்தியாவிலிருந்து செல்வதற்கு அனுமதி கிடையாது. இதுதான் நிலைமையே தவிர இதற்கும் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தற்போது, ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளைக் கொண்டு வர வேண்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகளோடு கல்வி போன்ற காரணங்களுக்கு விலக்கு அளித்துள்ளனர்" என்று கூறினார்.

மேலும், வாக்சின் பாஸ்போர்ட் என்ற முறையை உலக நாடுகள் தற்போது பின்பற்றி வருவதாகவும் வதந்திகள் கிளம்பி வருகின்றன. அதோடு சேர்த்து, அந்தந்த நாடுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளைப் போட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு குறிப்பிட்ட அந்த நாட்டுக்குச் செல்வதற்கான அனுமதி கிடைக்கிறது என்ற சர்ச்சையும் கிளம்புகிறது. இதுகுறித்துப் பேசியவர், ``கொரோனா பிரச்னை தொடங்கியபோது, ஆன்டிபாடி பாஸ்போர்ட் என்று சொல்லப்பட்டது. கோவிட் தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர்களுடைய உடலில் ஆன்டிபாடி இருப்பது தெரிந்தால் அவர்களால் நோயைப் பரப்ப முடியாது என்றுகூறி அவர்கள் பயணிக்க அனுமதியளிப்பதாகச் சொல்லப்பட்டது. அதைப்போலத்தான் இதுவும்.

வாக்சின் பாஸ்போர்ட் என்ற யோசனையைப் பலரும் முன்வைத்தார்கள். ஆனால், அது பாகுபாட்டை உருவாக்குவதாகக் கூறி உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று உலகளவில் தடுப்பூசி போடப்படும் இதே வேகத்தைத் தொடர்ந்தால், உலக மக்களில் 80 சதவிகித பேருக்குத் தடுப்பூசி போட 57 ஆண்டுகள் ஆகலாம். பணம் இருப்பவர்கள் விரைந்து தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முடியும். பலருக்குத் தாமதமாகலாம். ஆகவே, வாக்சின் பாஸ்போர்ட் என்பது பாகுபாட்டை உண்டாக்கும் என்பதால் உலக நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று கூறினார்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Rafiq Maqbool
Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொள்வதால் குழந்தையின்மை பிரச்னை வரும் என்பது உண்மையா?

தடுப்பூசிகள் தொடர்பான பல்வேறு குழப்பங்கள் மக்கள் மத்தியில் எழுந்து வருகின்றன. உலகளவில் இதுவரை 17 கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதில், கோவாக்சின் உட்பட சில தடுப்பூசிகள் அவசரகால அடிப்படையில் மூன்றாம்கட்ட பரிசோதனையின்போது மக்களிடையே பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வரவில்லை. ஆகையால், அவற்றுக்கு முழு ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை. அதனால்தான், உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டத்தில் இடம் பெறவுமில்லை.

அதோடு, வெளிநாடுகள் செல்வதற்கு இந்தத் தடுப்பூசிகளைப் போட்டால் அனுமதிக்க மாட்டோம் என்று இதுவரை சொல்லவில்லை என்றார் த.வி.வெங்கடேஸ்வரன். இதுபோன்ற பெருந்தொற்றுப் பேரிடரின்போது இத்தகைய குழப்பங்கள் எழுவது இயல்பதுதான். குழப்பங்களைத் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.

அடுத்த கட்டுரைக்கு