Published:Updated:

மெள்ள மெள்ள அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; - மூன்றாவது அலையைத் தடுக்க தமிழக அரசு தயாரா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொரோனா ஆக்சிஜன் படுக்கைகள்
கொரோனா ஆக்சிஜன் படுக்கைகள்

கொரோனா இரண்டாவது அலை குறைந்துள்ள நிலையில், மூன்றாவது அலையைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பேரிடர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இன்றளவும் கொரோனாவுக்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்படவேயில்லை. முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று தொடர்கதை ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. கொரோனா வைரஸும் ஆல்பா, டெல்டா என்று வீரியம்மிக்க வைரஸாக உருமாறிக்கொண்டே செல்கிறது. இன்றுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.9 கோடிக்கும் அதிகம். 42.41 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், 17.96 கோடிப் பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள்.

கொரோனா
கொரோனா

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, 3.16 கோடிப் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.24 லட்சம் பேர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். 3.08 கோடிப் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பேரிடரில் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தைப் பொறுத்தவரை, 02.08.2021 கணக்கின்படி, 25,61,587 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,102 பேர் உயிரிழந்துள்ளனர். 25,06,961 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை:

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா முதல் அலையின் தாக்கத்தைவிட இரண்டாம் அலையின் தாக்கம் யாருமே யோசித்துப் பார்க்காத அளவுக்கு மிக மோசமாக இருந்தது. பல மாநிலங்களில் படுக்கைகள் கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் சில மாநிலங்களில் இடுகாட்டில் இறந்தவர்களை எரிப்பதற்குக்கூட இடம் கிடைக்காமல் மக்கள் அல்லாடியதைச் செய்திகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்தோம். இரண்டாம் அலையின் பெரும் பாதிப்புக்கு டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல்தான் முக்கியக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

கொரோனா அலர்ட்: மதுரையில் இந்த கோயில்களில் ஆக்.8 வரை பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!
கொரோனா
கொரோனா

இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ் அதிவேகமாகப் பரவக்கூடிய தன்மைகொண்டது. அதுமட்டுமல்லாமல், அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டாம் அலையின் தாக்கம் சற்று தாமதமாகவே தொடங்கியது. நாளொன்றுக்கு 36,000-க்கும் அதிகமாக பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. சென்னையில் மட்டுமே அதிக அளவு பாதிப்பு பதிவாகிவந்த நிலையில் சென்னையைத் தாண்டி கோவையிலும் அதிக அளவு பாதிப்பு பதிவானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் பெருமளவு அதிகரித்திருந்த கொரோனா தொற்று மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. 36,000-க்கும் அதிகமாகச் சென்ற கொரோனா தொற்று 2,000-க்கும் கீழே பதிவானது. சமீபத்தில் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தன. இந்தத் தளர்வுகளில், சில கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் திறக்க அனுமதியில்லை போன்ற சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று முழுமையாகச் சரியாகாத நிலையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது சரியில்லை என்று மருத்துவர்கள் குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில், கேரளா போன்ற சில மாநிலங்களில் குறைந்திருந்த தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் ரஷ்யா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

இந்தியாவைப் பொறுத்தவரை, இரண்டாம் அலையில் பெருமளவு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. ``முதல் அலையின்போது, 3,095 மெட்ரிக் டன்னாக இருந்த ஆக்சிஜன் தேவை, இரண்டாம் அலையின் தாக்கத்தின்போது 9,000 மெட்ரிக் டன் வரை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், 5,700 மெட்ரிக் டன்னாக இருந்த ஒரு நாள் ஆக்சிஜன் உற்பத்தி அளவு 9,690 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது" என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்திருந்தார். ஆக்சிஜன் மட்டுமல்லாமல், ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குழந்தைகளுக்கான ஐ.சி.யூ படுக்கைகளை அதிகரிக்கவும், இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்சிஜன் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கவும் மத்திய அரசு நிதியை ஒதுக்கியுள்ளது.

2.08.2021-ம் தேதி கணக்கின்படி, இந்தியா முழுவதும் 47.22 கோடி பேரும், தமிழகத்தைப் பொறுத்தவரை 2.15 கோடி பேரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினேன். `` தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதினால் மக்கள் கொரோனா இல்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டிருகிறார்கள். அது தவறு. தொடர்ச்சியாக முகக்கவசம் அணிந்தது, சமூக இடைவெளியைப் பின்பற்றியது போன்ற காரணங்களால்தான் தொற்று குறைந்துவந்தது என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது. மக்கள் அனைவரும் கொரோனாவுக்குப் பின்னான புதிய நடைமுறைகளுக்குப் பழக்கப்பட வேண்டும். மூன்றாவது அலை ஏற்படாமலிருக்க அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் முதல்வர் விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க உத்தரவிட்டிருக்கிறார். குறிப்பாக குழந்தைகளுக்கு 25 சதவிகித படுகைகள் ஒதுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யக் கூறியிருக்கிறார். மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``தற்போது ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யும்போது, அவருக்கு எப்படித் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறியும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புப் பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை என்று பல்வேறு துறைகள் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் தடுப்பதில் மக்களின் பங்கு மிக முக்கியமானது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு