
கோவிட்-19 தீவிரமாகப் பரவிய காலத்தில் கான்டாக்ட் ட்ரேசிங் பணிக்கு சென்னையில் மட்டும் 100 பேர் நியமிக்கப்பட்டனர். தற்போது அந்தப் பணியில் வெறும் நான்கு பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது என அரசு வெளியிடும் புள்ளி விவரங்களில் தொடர்ந்து கூறப்படுகிறது. நேற்று வெளியிடப்பட்ட தமிழக சுகாதாரத்துறை பட்டியலில் ஆயிரத்துக்கும் குறைவாக 957 பேருக்கு மட்டும் நோய் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம், தனிமனித இடைவெளி, கை கழுவும் பழக்கம் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இருப்பினும் இந்த விஷயங்களில் அதிகம் அலட்சியம் தென்படத் தொடங்கியிருக்கிறது என்பதே நிதர்சனம். தமிழகத்தின் சென்னை உள்பட பிற மாவட்டங்களில் முகக்கவசம் அணியும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் முற்றிலும் அருகிவிட்டது. இந்த நிலையில்தான் பிரிட்டனில் அதி வேகமாகப் பரவும் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வந்த பயணிகளிடமும் தென்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு உரு மாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பிரிட்டனிலிருந்து வந்த பயணிகளிடம் யாரெல்லாம் நெருக்கமாகப் பழகினார்கள் என்பதைக் கண்டறிந்து (கான்டாக்ட் ட்ரேசிங்) அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் அந்தப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத் துறையில் பணியாற்றும் சில முன்களப் பணியாளர்கள் நம்மிடம் கூறும்போது, ``கோவிட்-19 தீவிரமாகப் பரவிய காலத்தில் கான்டாக்ட் ட்ரேசிங் பணிக்கு சென்னையில் மட்டும் 100 பேர் நியமிக்கப்பட்டனர். தற்போது அந்தப் பணியில் வெறும் நான்கு பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லாக்டௌன் நேரத்தில் அனைவரும் வீட்டிலிருந்தார்கள். அப்போது நோயாளிகளின் தொடர்புகளைக் கண்டறிவது சுலபம். லாக்டௌன் தளர்வு அளிக்கப்பட்டதால் எல்லாரும் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள். அதனால் கான்டாக்ட் ட்ரேசிங் திறம்பட நடக்காது. அதனால் அந்தப் பணிக்கு ஆட்கள் தேவையில்லை என்று குறைத்துவிட்டார்கள்.
தற்போது பிரிட்டனிலிருந்து வந்தவர்களையோ அவர்கள் உறவினர்களையோ பரிசோதனை செய்வதற்காகத் தொடர்பு கொள்ளும்போது, ``வெளியில் செல்ல வேண்டிய வேலை இருக்கிறது. நாங்கள் வீட்டிலிருக்கும்போது வேண்டுமானால் வந்து டெஸ்ட் செய்யுங்கள்" என்று சொல்கிறார்கள். நோயின் தீவிரம் குறித்த எந்த பயமும் அவர்களிடம் இல்லை. மிகவும் அலட்சியமாக இந்த விஷயத்தைக் கையாள்கிறார்கள். தமிழகத்திலும் தற்போது உருமாறிய வைரஸ் பரவத் தொடங்கியிருக்கலாம்" என்றும் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் லாக்டௌன்?
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. இதுபற்றி அண்மையில் பேட்டியளித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ``அரசு கூறும் பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றினால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் மருத்துவர்கள் குழுவினருடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மக்களிடம் விழிப்புணர்வு குறைந்து வரும் நிலையில், புதிய வைரஸும் பரவுவதால் தமிழகத்தில் லாக்டௌன் அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என்று தமிழக சுகாதாரத் துறையினரிடம் விசாரித்தோம். ``நோய்ப் பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் நேரத்தில் 15 நாள்களுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை என இரவு நேர லாக்டௌன் அமல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.