Published:Updated:

மார்டனா முதல் ஜான்சன் & ஜான்சன் வரை... தனியார் தடுப்பூசிகள்: சந்தைப் பொருளாதாரம் காரணமா?

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவருகிறது. இன்னும் பல்வேறு நிறுவனங்களும் தடுப்பூசிக்கு ஒப்புதல் கேட்டுள்ளன. இது சந்தை வியாபார நோக்கிலா என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்திருப்பதைக் குறித்து ஓர் அலசல்.

கொரோனா பேரிடர் தொடங்கிய காலம் முதலே அதற்கான மருந்தை எதிர்நோக்கி மொத்த உலகமும் காத்திருந்தது. இதையடுத்து உலகில் பல்வேறு நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இறங்கின. பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. இதுவரை 22 தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்புதல் கோரியுள்ளன. பல தடுப்பூசிகளுக்கு ஒப்புதலையும் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதுவரை, உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 84 கோடி நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 32 கோடிக்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். அதேபோல 5.5 கோடிக்கும் அதிகமானோர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். அதாவது மொத்த மக்கள்தொகையில் 4.1% சதவிகித மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

இந்தியாவில் தடுப்பூசி:

இந்தியாவில் இதுவரை அஸ்ட்ராஜெனிக்கா-ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி, இந்தியாவிலுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த `கோவாக்ஸின்' தடுப்பூசி, மாஸ்கோவிலுள்ள கமலேயா நிறுவனம் தயாரித்த `ஸ்புட்னிக்' தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தத் தடுப்பூசிகள் தவிர அமெரிக்காவின் மார்டனா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கும் சமீபத்தில் அனுமதி வழங்கியது. இந்தத் தடுப்பூசிகள் தவிர மேலும் சில தடுப்பூசிகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. `உலகின் மாபெரும் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு’ என்று பிரதமர் கூறினார். இருந்தபோதிலும், சரியான திட்டமிடல் இல்லாததால் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி இல்லாத நிலையே இருந்தது. இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. அதன் பிறகு முன்னெப்போதும் இல்லாத அளவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால், பல்வேறு இடங்களிலும் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்ற நிலை நிலவுகிறது. மாநில அரசுகளும், வெளிநாடுகளில் நேரடியாகதடுப்பூசி இறக்குமதி செய்யவும் மத்திய அரசு அனுமதியும் வழங்கவில்லை.

பல்வேறு முரண்பாடுகள் நிலவிவந்த நிலையில், மத்திய அரசு புதிய தடுப்பூசிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இந்த புதிய கொள்கையின்படி, தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 75 சதவிகித தடுப்பூசிகள் நேரடியாக மத்திய அரசு கொள்முதல் செய்துகொள்ளும்; மீதமுள்ள 25 சதவிகித தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்துகொள்ளலாம். மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுக்கும். இதற்கு முன்பு, நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 50 சதவிகிதத்தை மத்திய அரசும், மீதமுள்ளவற்றை மாநில அரசும், தனியார் மருத்துவமனைகளும் கொள்முதல் செய்துவந்தன.

கொரோனா தடுப்பூசி ஒரு டோஸுக்கான விலை : கோவாக்ஸின்- 1,410 ரூபாய், கோவிஷீல்டு 780 ரூபாய், ஸ்புட்னிக் 1,145 ரூபாய் என்று விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

மத்திய அரசு, ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை, கொரோனா பரவலின் நிலை, தடுப்பூசி செலுத்தும் விகிதம், தடுப்பூசி வீணடித்தல் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தடுப்பூசிகளைப் பிரித்து அனுப்பும். புதிய தடுப்பூசிக் கொள்கைக்கு முன்பு வரை, மத்திய அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட மாநில அரசுகள் அதிக கட்டணம் கொடுத்து தடுப்பூசி வாங்கும் நிலை இருந்துவந்தது. புதிய தடுப்பூசிக் கொள்கைக்கு முந்தைய கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மருந்து சந்தை:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்காக அனுமதி கோரி உலகின் பல்வேறு தடுப்பூசி நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. இந்த கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுமே தனியார் நிறுவனங்கள்தான். இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் எந்த அரசு நிறுவனமும் இதுவரை கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிப்பது கிடையாது. இந்தியா தடுப்பு மருந்துகள் தயாரிப்பில் முன்னோடியாகத் திகழ்ந்தது. மத்திய அரசின் மருந்து உற்பத்தி நிறுவனங்களான குன்னூர் லூயி பாஸ்டியர் ஆய்வு நிறுவனம், கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட், இமாசலப் பிரதேசத்திலுள்ள கசாலி ஆய்வு நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்ற்ன. முன்னொரு காலத்தில், இந்தியாவில் 80 சதவிகித தடுப்பூசி தேவையை இந்த நிறுவனங்கள் மட்டுமே பூர்த்தி செய்துவந்தன.

இந்தியாவில் மட்டுமல்லாமல், தெற்கு ஆசியாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசித் தேவையை இந்த நிறுவனங்கள்தான் பூர்த்தி செய்துவந்தன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிறுவனங்களுக்கு சரியான நிதி ஒதுக்கீடு செய்யாததும், நவீன வசதிகள் எதையும் ஏற்படுத்தாததும், ஊழியர்கள் பற்றாக்குறையும் பெரிய இடப்பாடுகள். மற்றபட்டி, இந்த நிறுவனங்களும் உற்பத்தியில் சிறப்பாகவே செயல்பட்டுவந்தன.

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர் “உலக அளவில் உள்ள மருந்துச் சந்தைக்கு இந்தியாவிலிருந்து மட்டும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மருந்துகள், தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஏற்றுமதியில் தனியார் நிறுவனங்களுக்கு மாபெரும் பங்கு உள்ளது. ஆண்டுக்கு 24,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவு விற்பனை நடைபெறுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தி குறைந்ததற்குப் பின்னல் சர்வதேசச் சந்தை வர்த்தகம் அடங்கியுள்ளது. அவர்கள் இந்தப் பொதுத்துறை நிறுவனங்களை இயங்கவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதற்குச் சிறந்த உதாரணம் செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம். கட்டிமுடிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் அங்கு இன்னும் மருந்து உற்பத்தி தொடங்கப்படவே இல்லை. காரணம் அது பொதுத்துறை நிறுவனம் என்பதுதான்" என்று அழுத்தமான குரலில் கூறினார்.

தனியார்மயமாவதைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம் இது குறித்துப் பேசினோம். ``நமது அரசு திட்டமிட்ட பொருளாதாரத்தைக் கைவிட்டுவிட்டு, சந்தை பொருளாதாரத்துக்குச் சென்றுவிட்டது. இந்தச் சந்தை பொருளாதாரம் என்பது அனைத்தையும் தனியாருக்குக் கொடுத்துவிடுவது. குறிப்பாக, சுகாதாரத்தைத் தனியாரிடம் கொடுத்துவிடுவது. மத்திய அரசு கூறுவதைத்தான் மாநில அரசுகள் கேட்டாக வேண்டும் என்ற நிலை உள்ளது. மத்திய அரசின் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அனைத்துமே அன்றைய பிரதமர் நேரு காலத்தில் திட்டமிட்ட பொருளாதாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. அந்த நிறுவனங்களை தற்போதைய மோடி அரசு கிட்டத்தட்ட மூடிவிட்டது. அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களைக்கூட விற்பனை செய்ய முடிவு செய்துவிட்டது. இந்தியாவில் மொத்தம் 21 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 18 தனியார் நிறுவனங்களும் மூன்று அரசு நிறுவனங்களும் உள்ளன. இந்த மூன்றையுமே காப்பாற்ற நான் உட்பட பலரும் பெரும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

டி.கே.ரங்கராஜன்
டி.கே.ரங்கராஜன்

தொடர்ந்து பேசியவர், ``சுகாதாரம் என்பதை மொத்தமாகத் தனியாரிடம் கொடுத்துவிட்ட பின்னர், மக்களும் தனியார் நிறுவனங்களை மட்டுமே நம்பி இருக்கும் நிலை உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க சுகாதாரம் வியாபாரமாகிவிட்டது. சுகாதாரம் வர்த்தகம் என்று ஆன பின்னர் வெளிநாடு வியாபாரிகளும் உள்ளே வருவார்கள்; உள்நாட்டு வியாபாரிகளும் வருவார்கள். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மூன்று கொள்கைகளையும் மோடி அரசு செய்துவருகிறது. இதன் மூலம் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. தனியாருக்கு மட்டுமே பயன். சுகாதாரம் என்பது எப்போதுமே அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும்... தனியாரிடம் இருகக் கூடாது" என்று பேசினார்.

இந்தியாவின் மொத்த தேவையில் 80 விழுக்காடு தடுப்பூசி தேவையை மத்திய அரசு நிறுவனங்கள் பூர்த்தி செய்த காலம் போய், தற்போது அரசு, தனியார் நிறுவனங்களை நம்பி உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு