Published:Updated:

கிங் இன்ஸ்டிடியூட் ஊழியர்களுக்கு கொரோனா பாசிட்டிவா? -உண்மை நிலவரம் என்ன?

கிங் இன்ஸ்டிடியூட்
கிங் இன்ஸ்டிடியூட்

கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்தில் மட்டும் கொரோனா டெஸ்ட்டிங் சுமார் ஒரு லட்சத்தை நெருங்கியிருக்கிறது என்றால், அங்கே உள்ள பணியார்களுக்கு மத்திய அரசின் அறிவுரைகளின்படி மருத்துவப் பரிசோதனைகள் அடிக்கடி நடத்தப்பட்டதா?

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா கோவிட்-19 டெஸ்ட் செய்த பெரிய ஆய்வகங்களில் சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகமும் ஒன்று. இந்த ஆண்டு ஜனவரி 30 முதல் கொரோனா டெஸ்டிங் ஆரம்பித்து, ஜூன் 19 வரையில் சுமார் ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது அந்த ஆய்வகத்தின் பரிசோதனை எண்ணிக்கை. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ ஆய்வகங்களுடன் ஒப்பீடு செய்யும்போது நம்பர் ஒன் என்றும் வர்ணிக்கப்படுகிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Representational Image

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்!

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், 122 வருடம் பழைமையானது. ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 12 லட்சம் தடுப்பு ஊசிகளைத் தயாரித்து நோய் தடுப்பில் முன்னிலை வகித்ததாம். சின்னம்மை, காலரா, ஸ்பானீஷ் ஃபுளு(1919), டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல் ஆகிய பாக்டீரியா, வைரஸ் நோய் மக்களைத் தாக்கியபோது, இந்த ஆய்வகம் பெரும் பங்கு வகித்தது. 10 வருடம் முன்பு பன்றிக்காய்ச்சல் பரவியபோது, சுமார் 50,000 டெஸ்ட் செய்து நோய் கண்டறிதலில் உதவியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு பாம்புகடிக்கு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

இப்படி பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், லேப் டெக்னீஷியன்கள், இதரப் பணியாளர்கள் என்று 300 பேர்கள் இருக்கிறார்கள். இந்த இன்ஸ்டிடியூட்டின் இயக்குநராக காவேரி (பொறுப்பு) இருக்கிறார். இங்குள்ள வைரலாஜி துறையில் 28 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இதில் ஸ்பெஷலாக கோவிட்-19 டெஸ்ட் செய்ய, தனி ஆய்வகம் இருக்கிறது. சுமார் 14 பணியாளர்கள் இரவு பகலாக டெஸ்டிங் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த சில நாள்களாகவே, பணியாளர்கள் மத்தியில் சிலருக்கு கொரோனா பாஸிட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாகவும், அவர்களை மட்டும் வீட்டில் இருக்கச் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. `அலுவலகத்தில் அவர்களுடன் பழகியவர்களுக்கு தொற்று பரவியிருக்கிறதா’ என்று சரிவர டெஸ்ட் செய்யவில்லை என்று வேதனைப்படுகிறார்கள்.

அறிகுறி தெரியவந்தால்... பிறகு பார்த்துக்கொள்ளலாம்?

சென்னையில் உள்ள நோய்த்தடுப்புப்பிரிவைச் சேர்ந்த பணியாளர் ஒருவரும் சுகாதாரத்துறை பணியாளர் பிரச்னையில் ஆர்வமாக இருக்கும் ஒருவரும் ஜூ.வி அலுவலகத்துக்கு போன் மூலம் தொடர்புகொண்டு சில தகவல்களை சொன்னார்கள்.

``பத்து நாள்களுக்கு முன்பு, ஒரு மருத்துவருக்கு முதலில் கொரோனா பாஸிட்டிவ் கண்டறியப்பட்டது. அப்போதே, வைரலாஜி ஆய்வகத்தில் மற்றவர்களுக்கு டெஸ்ட் செய்திருந்தால் இது பரவியிருக்காது. ஆனால், கிரிமிநாசினியைத் தெளித்ததால் போதும் என்று உயர் அதிகாரி சொல்லிவிட்டாராம். கிரிமிநாசினி தெளித்தபிறகும், அடுத்த சில நாள்களில் 6 பேர்களுக்கு அடுத்தடுத்து பாஸிட்டிங் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக, வைரலாஜி துறையில் இரண்டு மருத்துவர்கள் உட்பட ஐந்து பேர்கள், கொரோனா ஆய்வகத்தில் 2 பேர். ஆக, இதுவரை 7 பேர்களுக்கு தொற்று உறுதியாகிவிட்டது.

கொரோனா
கொரோனா

அவர்கள் யாரும் இப்போது பணிக்கு வருவதில்லை. லீவு கொடுத்து வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டார்களாம். ஆனால், பணியில் இருக்கும் மற்றவர்களின் நிலைமை? அங்குள்ள உயர் அதிகாரி ஒருவர், `நோய் அறிகுறி தெரியவந்தால், பிறகு பார்த்துக்கொள்ளலாம். அதுவரை வேலைக்கு வாருங்கள்’ என்று சர்வ சாதாரணமாக சொல்கிறாராம். அவரால்தான் இத்தனை பிரச்னை. பொதுவாக, பாஸிட்டிவ் யாருக்காவது இருந்தால், `அவர்களுடன் தொடர்பில் இருந்தது யார்’ என்று விசாரிக்க வேண்டும். அவர்களுக்கும் டெஸ்ட் செய்ய வேண்டும். கிண்டி ஆய்வகத்தில் கொரோனா பாஸிட்டிவ் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால்தான் நோய் பரவல் அதிகமாகிவருகிறது.

கொரோனா டெஸ்ட் சுமார் ஒரு லட்சத்தை நெருங்கியிருக்கிறது என்றால், அங்கே உள்ள பணியாளர்களுக்கு மத்திய அரசின் அறிவுரைகளின்படி மருத்துவ பரிசோதனைகள் அடிக்கடி நடத்தப்பட்டதா? பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தார்களா? போதிய விடுமுறை கொடுக்கப்பட்டதா? என்பதெல்லாம் தற்போது சுகாதாரத்துறை பணியாளர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. தமிழக அரசு உடனே தலையிட்டு, ஆய்வகத்தில் பணியில் உள்ளவர்களை தனியாக அழைத்து விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும். ஜனவரி 30-க்குப் பிறகு இதுநாள் வரை இங்கு பணியாளர்கள் பாதுகாப்பு விஷயத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும். இங்கு நடக்கும் விஷயங்களை அரசின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு சரியாக சொல்வதில்லை” என்கிறார்கள் அவர்கள்.

கொரோனா
கொரோனா

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்தின் இயக்குநர் (பொறுப்பு) காவேரியின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டோம். நாம் யார் என்று சொன்னதுமே, மறு முனையில் போன் துண்டிக்கும் சத்தம் கேட்டது. மீண்டும் தொடர்புகொண்டோம். ஒருவேளை, அலுவல் பணியில் அவர் பிஸியாக இருக்கலாம் என்று நினைத்து, வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ்-ஸில் அவருக்கு உடனே தகவல் அனுப்பினோம். `உங்கள் துறையில் ஏழு பேர்கள் வரை கொரோனா பாஸிட்டிங் அறிகுறி இருப்பதாக தகவல் கேள்விப்பட்டோம். அது குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தோம். இந்தச் செய்தி பிரசுரம் ஆகும்வரை அவரிடமிருந்து பதில் வரவில்லை. வந்தால், உரிய பரிசீலனைக்குப்பின் அதையும் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.

அதையடுத்து, தமிழக மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாவுவிடம் இதுபற்றி கேட்டோம்.. ``அப்படி ஒரு தகவல் எங்களுக்கு இதுவரை வரவில்லை’’ என்றார்.

`250 பெண்களுக்கு 1 குளியலறை!'
நந்தம்பாக்கம் கொரோனா முகாமிலிருந்து கண்ணீர்க் குரல்

கிட்டதட்ட ஒரு லட்சம் பரிசோதனைகளை செய்து வரும் ஆய்வகப் பணியாளர்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பது அரசின் கடமை. அதை சரிவர செய்ததா? என்பதில்தான் குழப்பம் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு