Election bannerElection banner
Published:Updated:

கட்டாய தடுப்பூசி... கதறும் டாக்டர்கள்... அரசாங்கத்தின் கொரோனா குத்து!

COVID-19 vaccine delivery system in New Delhi
COVID-19 vaccine delivery system in New Delhi ( AP Photo/Altaf Qadri )

ஆரம்ப சுகாதார நிலையங்கள் போதிய சிகிச்சை வசதிகள் கிடையாது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைக் கையாள்வதற்கு போதிய வசதிகள் இருக்காது.

முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி கோவிட்-19 தடுப்பூசி போடும் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்யும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நடிகர் கமல்ஹாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பெற்றோர் என பிரபலங்கள், பிரபலங்களின் உறவினர்கள் பலரும் தடுப்பூசியைப் போட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Govt Hospital
Govt Hospital
Photo: Vikatan

இந்நிலையில், தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு மருத்துவமனை களுக்கு வருவோருக்கு கட்டாயம் கோவிட்-19 தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் சிலர், "மார்ச் 1-ம் தேதி முதல் பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தினமும் குறைந்தபட்சம் 10 பேருக்காவது தடுப்பூசி போட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வது தனிநபர் விருப்பம். யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்பதால், மக்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர்களுக்குத் தெரியாமல் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவர்களைக் கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் 45 வயதுக்கு மேல் தொற்றாநோய் உள்ளவர்களும், 60 வயது நிரம்பியவர்களும் வழக்கமான பரிசோதனைக்கு வந்து மாத்திரைகள் பெற்றுச்செல்வது வழக்கம். அவ்வாறு வருவோருக்கு ஒரு மாதத்துக்கான மருந்துகளை கொடுத்தனுப்புவதும் வழக்கம்.

பொதுமக்களுக்கு மிரட்டல்!

ஆனால், ஒரு மாதத்துக்கு மாத்திரை வழங்காமல், 5 நாள்களுக்கு மட்டும் மாத்திரை கொடுத்துவிட்டு அவர்களிடம் ஆதார் அட்டை நகலை எடுத்து வரச்சொல்லி கட்டாயப்படுத்தச் சொல்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே மாத்திரை மருந்து கொடுக்கப்படும் என்று மிரட்டி வலுக்கட்டாயமாகத் தடுப்பூசி போடப்படுகிறது. சில நோயாளிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி என்று சொல்லாமலேயே போடப்படுகிறது.

COVID-19 patient
COVID-19 patient
AP Photo / Jae C. Hong

இந்த வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்படாத ஆரம்ப சுகாதார மருத்துவர்களை சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் கட்டாயப்படுத்துவதோடு, கோபமாக மிரட்டுகின்றனர். துணை இயக்குநர்களின் நெருக்குதலுக்குப் பயந்து பல மருத்துவர்கள் இதற்கு உடன்படுகின்றனர். நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சில மருத்துவர்கள் உத்தரவுக்குக் கட்டுப்பட மறுக்கின்றனர். இருந்தாலும் துணை இயக்குநர்களின் நெருக்குதலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று தெரிவித்தனர்.

இதுபற்றி மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தியிடம் பேசினோம்:
"இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என எண்ணிக்கையைக் கணக்கு காட்டுவதற்காக இதுபோன்ற வற்புறுத்தல் செய்யப்படுகிறது. தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றிய புரிதல் இன்னும் ஏற்படவில்லை. அப்படி இருக்கும்போது நோயாளிகளுக்கு வற்புறுத்தி தடுப்பூசி போடுவது, நோயாளிகளுக்குத் தெரியாமலேயே தடுப்பூசி போடுவது எல்லாம் மிகவும் ஆபத்தானது. தொற்றா நோய்களுடன் வாழ்பவர்களுக்கு இதுபோன்று அவசர கதியில் தடுப்பூசி போடுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படலாம்.

மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தி
மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தி

ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய சிகிச்சை வசதிகள் கிடையாது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைக் கையாள்வதற்கு போதிய வசதிகள் இருக்காது.

இதுபோன்ற சூழலில் அருகிலிருக்கும் பெரிய மருத்துவமனை களுக்குத்தான் கொண்டு போக வேண்டும். இந்தத் தாமதம் நோயாளியின் உடல்நிலையை மேலும் மோசமாக்கலாம்.
தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு லாபத்தைப் பெற்றுத் தரும் நோக்கில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்" என்கிறார்.

இந்தப் புகார் பற்றி கருத்து தமிழக சுகாதாரச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டோம். மத்திய சுகாதார வல்லுநர் குழுவுடனான ஆய்வுப் பணிகளில் இருப்பதால் இப்போதைக்கு பேச இயலாது என்று தெரிவித்தார். அவரிடம் இருந்து விளக்கம் கிடைக்கும்பட்சத்தில், அதையும் வெளியிட தயாராகவே இருக்கிறோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு