Published:Updated:

இஸ்ரோ மையப் பொறியாளருக்குக் கொரோனா! -காரணம் தெரியாமல் கலங்கும் அதிகாரிகள்

மகேந்திரகிரி இஸ்ரோ வளாகம்
மகேந்திரகிரி இஸ்ரோ வளாகம்

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றிவரும் பொறியாளருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றி நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நெல்லை மாவட்டத்தில் நகரப் பகுதிகள் மட்டும் அல்லாமல் கிராமங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மூலம் நோய்ப்பரவல் அதிகமாக இருப்பதால் வெளியிடங்களிலிருந்து வருவோர் குறித்த அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

`கேரள எல்லை... கூடங்குளம்... மகேந்திரகிரி இஸ்ரோ மையம்!’ - கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டும் நெல்லை

வெளி இடங்களிலிருந்து வருபவர்களில் பலர் சோதனைச் சாவடிகளில் உடல் பரிசோதனை செய்துகொள்ளாமல் மாற்றுப் பாதையில் பயணித்து சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர்களில் சிலருக்கு நோய்த் தொற்று இருப்பதால் அதன்மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா பரவல் ஏற்படுகிறது.

மகேந்திரகிரி இஸ்ரோ சோதனை மையம்
மகேந்திரகிரி இஸ்ரோ சோதனை மையம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோ மையத்தின்கீழ் இயங்கும் விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. ராக்கெட்டுகளுக்குத் தேவையான பாகங்களையும் திரவ இயக்க உந்தும சோதனைகளையும் இந்த மையத்தில் செய்து வருகிறார்கள். இங்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகிறார்கள்.

மகேந்திரகிரி மையத்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் 24 வயது இளைஞர் ஒருவருக்குக் கடந்த 19-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால், மகேந்திரகிரி வளாகத்தின் உள்ளே இருக்கும் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். 

மூடப்பட்ட இஸ்ரோ வளாகம்
மூடப்பட்ட இஸ்ரோ வளாகம்

தொடர்ந்து அவருக்குக் காய்ச்சல் இருந்ததால் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவருடைய பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

`கேரள எல்லை... கூடங்குளம்... மகேந்திரகிரி இஸ்ரோ மையம்!’ - கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டும் நெல்லை

கொரோனா பாதிப்புக்கு உள்ளான பொறியாளர், நாகர்கோவிலில் உள்ள அரசுக் குடியிருப்பில் தங்கியிருந்துள்ளார். அங்கிருந்து தினமும் இஸ்ரோ வாகனத்திலேயே வந்து சென்றுள்ளார். அதனால் அவருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியாமல் சுகாதாரத்துறையினரும் இஸ்ரோ அதிகாரிகளும் தவித்து வருகிறார்கள். 

அறிவிப்பு
அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக மகேந்திரகிரி இஸ்ரோ மையம் இன்று ஒருநாள் முழுமையாக அடைக்கப்பட்டு கிருமி பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிர்வாக அதிகாரியான சுப்பிரமணிய பிள்ளை தெரிவித்துள்ளார். 

மகேந்திரகிரியின் இஸ்ரோ மையத்தில் இன்று அத்தியாவசியப் பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் நாளை (23-ம் தேதி) முதல் வழக்கமான பணிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு