Published:Updated:

`மாத வருவாய் ரூ.2,500 இருந்தால் பணக்காரர்களா?!` - ஜிப்மர் அறிவிப்பால் கொந்தளிக்கும் புதுச்சேரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

மாத வருவாய் 2,499/- ரூபாய்க்கும் கீழே உள்ள சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டிருக்கிறார்கள்,

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரி கோரிமேட்டில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் (Jawaharlal Institute of PostGraduate Medical Education & Research) மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என சுமார் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். 1872-ல் பிரெஞ்சு ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை 1964-ம் ஆண்டு ஜிப்மர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்து நேரத்தில் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை முற்றிலுமாக நிறுத்திவிட்டது இந்த மருத்துவமனை.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

2,500 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அளவுக்கு இட வசதியையும், மருத்துவர்களின் எண்ணிக்கையும் வைத்திருக்கும் இந்த மருத்துவமனை வெறும் 500 கொரோனா நோயாளிகளை மட்டும் அனுமதித்து சிகிச்சை அளித்தது. ஆக்ஸிஜன் படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்த நேரத்திலும் மௌனமாகவே இருந்தது ஜிப்மர். அதன்பிறகு புதுச்சேரி சுகாதாரத்துறை கொரோனாவுடன் போராடி அதனை கட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து கடந்த ஜூன் 21-ம் தேதி மீண்டும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை தொடங்கியது ஜிப்மர். அதிலும் ஒரு நாளைக்கு ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சமாக 25 நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல மருத்துவமனை தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து, மருத்துவருடன் ஆலோசனைக்கு பிறகுதான் அனுமதி வழங்கப்படுகிறது.

``கொரோனா தாக்கத்தின் அலை வெகுவாக குறைந்துவிட்டதால் கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தியிருக்கிறது புதுச்சேரி அரசு. ஆனால் ஜிப்மர் நிர்வாகம் மட்டும் கொரோனா கட்டுப்பாடுகளை இன்னும் அமலில் வைத்துக்கொண்டு எங்களை கடுமையாக வதைத்து வருகிறது” என்று குற்றம் சுமத்துகின்றனர் நோயாளிகள். இந்நிலையில்தான் இலவச சிகிச்சை குறித்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கை புதுச்சேரி மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. செப்டம்பர் 18 தேதியிட்ட அந்த சுற்றறிக்கையில்,

ஜிப்மர் மருத்துவமனை  இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால்.
ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால்.

“புதுச்சேரியில் மாத வருவாய் 2,499 ரூபாய்க்கும் கீழே இருக்கும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சையை அளிக்கிறோம். அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கும் அதேபோல சிகிச்சை அளிக்க இருக்கிறோம். அதனால் இனி சிவப்பு ரேஷன் கார்டுகளை காண்பிப்பவர்களுக்கு மட்டும்தான் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த சுற்றறிக்கையை தனது முகநூலில் பதிவிட்டிருக்கும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், "மாதத்துக்கு 2,499/- ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல புறநோயாளியாக சிகிச்சைபெற வருபவர்கள்கூட தங்களது வருமானத்தை மெய்ப்பிப்பதற்கு பி.பி.எல் (BPL) ரேஷன் கார்டை கையோடு எடுத்துவர வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இனி ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது.

முனைவர் ரவிக்குமார் எம்.பி
முனைவர் ரவிக்குமார் எம்.பி

மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா ? என்ற கேள்வி எழுகிறது. சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கையோடு ரேஷன் கார்டை எடுத்துவர வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமின்றி, சட்டவிரோதமானதும் கூட. இந்த உத்தரவைப் பிறப்பித்த இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

`கொரோனா பாதித்த குழந்தைகளைக் கையாள்வது எப்படி?' - ஜிப்மர் மருத்துவமனையின் வழிகாட்டல்கள்

அதேபோல புதுச்சேரியின் எதிர்க்கட்சித்தலைவர் சிவா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் புதுச்சேரி பல்வேறு வகைகளில் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது ஜிப்மரின் இந்த அறிவிப்பு மூலம் புதுச்சேரி மக்களை வஞ்சித்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் கூட ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதனால் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறச் செல்லும் ஏழை மக்களும் அலைந்துதான் வருகின்றனர்.

ஜிப்மர் முன்பு ஆர்ப்பாட்டம்
ஜிப்மர் முன்பு ஆர்ப்பாட்டம்

இதுபோன்ற நிலையில் ஜிப்மரின் இந்த அறிவிப்பு மேலும் பாதிப்பை உண்டாக்கும் என்பதில் சிறிதும் மாற்றுக் கருத்து இல்லை. எனவே உடனடியாக இந்த அறிவிப்பை ஜிப்மர் நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும். சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் இலவச சிகிச்சை என்ற ஜிப்மரின் அறிவிப்பு புதுச்சேரி மக்களை கோபப்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் புதுச்சேரி திமுக சார்பில் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினரான வைத்திலிங்கம், “ஜிப்மரின் முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை விரைவில் சந்திப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

"சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி இலவச சிகிச்சை தரப்படும் என்ற ஜிப்மரின் உத்தரவு குறித்து விசாரிக்க புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருணுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதேபோல ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலையை தொடர ஜிப்மரிடம் அறிவுறுத்தவும் குறிப்பிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய புதுச்சேரி மக்கள் சிலர், “மாதம் 2,500 ரூபாய் சம்பாதித்தால் பணக்காரர்கள் என்று கூறுகிறாரா ஜிப்மர் இயக்குநர்? புதுச்சேரியைச் சேர்ந்த ஏழை மக்கள் பலரிடம் சிவப்பு ரேஷன் கார்டு இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தபின் வருவாய் அதிகாரிகளிடம் வருமான சான்று வாங்கி தந்து சிகிச்சை பெறுகிறோம். சிவப்பு நிற ரேஷன்கார்டு இருந்தால் மட்டுமே இலவச சிகிச்சை என்றால் பல ஏழைகள் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். புதுச்சேரியில் தற்போதுவரை சிவப்பு, மஞ்சள் ரேஷன் கார்டுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. புதுச்சேரி மக்களுக்கே ஒழுங்காக சிகிச்சையளிக்காமல் அலைக்கழிக்கும் ஜிப்மர், அனைத்து மாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை கொடுக்கப் போவதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது” என்கின்றனர்.

காரைக்கால்: `கொரோனா காலத்திலும் செயல்படாத ஜிப்மர் கிளை!’ - நடவடிக்கை எடுக்குமா அரசு?

இதுதொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஜிப்மர் நிர்வாகம், “ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கு ஜிப்மர் நிர்வாகம் கடமைப்பட்டிருக்கிறது” என்று முடித்துக்கொண்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு