Published:Updated:

`கொரோனா பாதித்த குழந்தைகளைக் கையாள்வது எப்படி?' - ஜிப்மர் மருத்துவமனையின் வழிகாட்டல்கள்

Child -  Representational Image
Child - Representational Image

``தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். பிரசவத்தின்போது தாய்க்குக் கொரோனா தொற்று இருந்தாலும், தாயும் சேயும் ஒன்றாகவே இருக்க வேண்டும். கொரோனா கிருமி தாய்ப்பால் மூலம் குழந்தைக்குச் செல்லாது.”

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறையத் தொடங்கியிருக்கும் சூழலில், மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை விடுத்து வருகின்றனர் மருத்துவர்கள். மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்குவதற்கான வாய்ப்புகளை மருத்துவர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், போதிய மருந்துகளுடன் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப்பிரிவு புதுவையில் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் துணைநிலை ஆளுநர் தமிழிசை.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த தகவல்களை பகிர்ந்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் நலத்துறை தலைவர் ஆதிசிவம், ``பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பின் தன்மை குறைவாகவே இருப்பதால் தேவையற்ற அச்சம் வேண்டாம்.

Girl wearing mask
Girl wearing mask
AP / Mahesh Kumar A

முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பெரியவர்கள் கடைப்பிடித்தாலே வீட்டிலுள்ள குழந்தைகளைத் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பிரசவத்தின்போது தாய்க்குக் கொரோனா தொற்று இருந்தாலும், தாயும் சேயும் ஒன்றாகவே இருக்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

கொரோனா கிருமி தாய்ப்பால் மூலம் குழந்தைக்குச் செல்லாது. அதேசமயம் கொரோனா நோய்க்கான எதிர்ப்பு சக்திகள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்குக் கிடைக்கும். தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் தாய்மார்கள் தாய்ப்பாலூட்டும்போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் தங்களது கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினியைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி குறித்த காலத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
கொரோனா: `விருதுகள், பரிசுத்தொகைகள்!’ - தடுப்பூசி விவகாரத்தில் அசத்தும் புதுச்சேரி சுகாதாரத்துறை

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் அதன் அறிகுறி இல்லாமலும் இருக்கலாம். சில குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்றவை இருக்கலாம். கொரோனா தொற்றுடைய குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இல்லையென்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவேளை குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருந்தால் அவசியம் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட குழந்தைகள் சோர்ந்து போகாமலும், அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அரிசிக் கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றுடன், சத்துள்ள உணவையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். வயிற்றுப்போக்கு இருப்பின் உப்பு சர்க்கரை கரைசல் அல்லது ஓ.ஆர்.எஸ் கொடுக்கலாம். காய்ச்சல் இருப்பின் அதற்கு பாராசிட்டமால் மருந்து போதுமானது. குழந்தைகளுக்கு தேவையற்ற மருந்துகளை மருத்துவ ஆலோசனையின்றி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா தவிர்த்து குழந்தைக்கு ஆஸ்துமா, சர்க்கரை நோய் போன்ற நீண்டகால நோய்கள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா பிரச்னையாலும், வீட்டிலேயே அடைந்து கிடப்பதாலும் குழந்தைகளுக்கு மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

குழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..?
குழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..?
புதுச்சேரி:`கொரோனா நெகட்டிவ்... ஆனா, தப்பு நடந்துபோச்சு’ - அதிர்ச்சி கொடுத்த அரசு மருத்துவமனை

அதனால் குழந்தைகளுக்குக் கூடுமானவரை தொலைக்காட்சி, செல்போன், கணினி போன்றவற்றின் பயன்பாட்டை குறைப்பது நல்லது. பதற்றம் தரும் ஊடகச் செய்திகள் குழந்தைகளுக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகளிடம் அன்பாய் அமர்ந்து பேசவும். அவர்களுக்கு ஏதேனும் அச்சம் இருந்தால் அதைப் போக்க முற்பட வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் மனநலப் பிரச்னைகள் இருந்தால் தக்க மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்திட வீட்டுக்குள்ளேயே விளையாடலாம். குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளைக் கண்டறிந்து அவற்றை ஊக்குவிக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு