Published:Updated:

`நலிவடைந்த பொதுச் சுகாதாரம்; 118 நாடுகளில் 1.2 மில்லியன் குழந்தைகள்' -யுனிசெஃப் அதிர்ச்சித் தகவல்

child
child

இவற்றில் 6,000 இறப்புகள், சர்வதேச அரசுகள் முயற்சி செய்தால் தடுக்கக்கூடியவை.

கொரோனா பாதிப்பு தொடங்கி ஐந்தாவது மாதத்தில் உலக நாடுகள் அடியெடுத்துவைத்துள்ளன. இந்தச்சூழலில், 'கொரோனாவால் ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீர்கேடு, தற்போது குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான அபாயமாக மாறிவருகிறது' என யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

கொரோனா பாதிப்பையொட்டி உலகம் முழுதும் உள்ள பல்வேறு நாடுகளில், கொரோனாவுக்குப் பிறகான பொதுச் சுகாதாரத்தின் நிலைகுறித்து ஜான் ஹாப்கின்ஸ், பொதுச் சுகாதார கல்விக்கழகம் சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அவற்றின் முடிவுகள் வெளிவந்தன. 118 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், கொரோனா காரணமாக நலிவடைந்துவரும் சுகாதாரக் கட்டமைப்பால், அடுத்த ஆறு மாதங்களில் 1.2 மில்லியன் குழந்தைகள் இறக்கக்கூடும் என்ற அதிர்ச்சிகரமான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

யுனிசெப்
யுனிசெப்

இவற்றில் 6,000 இறப்புகள் சர்வதேச அரசுகள் முயற்சி செய்தால் தடுக்கக்கூடியவை என்றும் குறிப்பிட்டுள்ளது. பேறுகால மரணங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதுகுறித்தும் ஜான் ஹாப்கின்ஸ் புள்ளிவிவரம் எச்சரித்துள்ளது.

இதை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெஃப், `கொரோனா பாதிப்பால் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்ட 132 நாடுகளில், 18 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் 77 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். பள்ளிகள் மூடப்பட்டிருப்பது, வீட்டிலேயே முடங்கிக்கிடப்பது, தனிமைப்படுத்தப்படுவது ஆகியன அவர்களை மனதளவில் பாதிக்கும். மற்றொரு பக்கம், பெண் குழந்தைகள் பாலின மற்றும் பாலியல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உள்நாட்டிலேயே புலம்பெயரும் குழந்தைகளுக்கான பாதுகாப்பும் உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக முன்னேறிய நாடுகளில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளைக் கவனித்துவருகிறோம். முன்னேறாத நாடுகளில் இது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதனால் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசுகளின் கடமை' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு