Election bannerElection banner
Published:Updated:

`அலட்சியப்படுத்துகிறார்கள்.. ஆபத்து அதிகம்'- செங்கல்பட்டு நிலவரத்தால் கொதிக்கும் மருத்துவர் #corona

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மண்டல அதிகாரி யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். அவரின் தொடர்பு எண்களை பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

செங்கல்பட்டு பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு கொரோனா ஆய்வு மையம் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்ய வேண்டும். மேலும், கொரோனா பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

செங்கல்பட்டு காய்கறிச் சந்தை
செங்கல்பட்டு காய்கறிச் சந்தை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மதுராந்தகத்தில் மட்டும் 5 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள முதல் இடம் மதுராந்தகம்.

இதனால் மதுராந்தகத்தைச் சுற்றி 5 கி.மீ பரப்பளவில் வசிப்பவர்கள் யாரும் வெளியே செல்ல முடியாது. ஊருக்குள் நுழையவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாமண்டூர், மேலவலம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

செங்கல்பட்டு, நத்தம் பகுதியில் ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில சாலைகளில் மட்டும் தடுப்பு அமைத்திருக்கிறார்கள். ஆனால், எவ்வித அறிவிப்புப் பலகையும் வைக்கவில்லை. காவல்துறையினரும் அப்பகுதியில் இல்லாததால் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.

டெல்லி மாநாடு
டெல்லி மாநாடு

கல்பாக்கம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினத்திலும் 6 தெருக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,857 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெல்லி தப்லீக் மாநாட்டிற்குச் சென்றுவந்த 41 பேர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய பாதிப்புகள் மாவட்டத்தில் இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுகிறது.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் வீ.புகழேந்தி, ``சதுரங்கப்பட்டினம் பகுதியில் ஒருவருக்குக் கோரோனா தொற்று பாதிப்பு இருந்த காரணத்தால் 6 தெருக்களை முடக்கி இருக்கிறார்கள். மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறியுடன் நிறைய மக்கள் என்னிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

‘எனக்குக் கொரோனா இருக்கிறதா டாக்டர்?’ எனக் கேட்கிறார்கள். செங்கல்பட்டில் கொரோனா சோதனை மையம் இல்லாததால், அவர்களை சென்னைக்குப் பரிந்துரை செய்கிறேன். 144 தடை உத்தரவால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிட்ட நிலையில் அவர்கள் எப்படி சென்னைக்கு செல்ல முடியும்?

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய பாதிப்பு உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கொரோனா ஆய்வு உபகரணங்கள் எதுவும் இல்லை. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறார்கள். போர்க்கால அடிப்படையில் செங்கல்பட்டில் உடனடியாகக் கொரோனா ஆய்வக மற்றும் சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் மொபைல் ஜி.பி.எஸ் மூலமாகக் கொரோனா தொற்று உள்ளவர்களைக் கண்காணிக்கிறார்கள். அதுபோல் இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களையும் கண்காணிக்க வேண்டும். கொரோனா பாதிப்புள்ள மாவட்டங்களில் மண்டல அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.

மருத்துவர் புகழேந்தி
மருத்துவர் புகழேந்தி

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மண்டல அதிகாரி யார் என்பதை தெரிவிக்க வேண்டும். அவரின் தொடர்பு எண்களைப் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும். அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் வதந்திகள் பரவாது. மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்” என்றார் கொதிப்புடன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு