Published:Updated:

`இங்க 3 பேருக்குக் கொரோனா தொற்று; கண்டுக்க மாட்டேங்கறாங்க!' -அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்

எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் புகார் சொல்லும் மக்கள்
எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் புகார் சொல்லும் மக்கள்

அய்யம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுக்காகச் சென்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை அந்தப் பகுதி மக்கள் முற்றுகையிட்டுப் புகார்களை அடுக்கியுள்ளனர்.

` இங்க பக்கத்தில் உள்ள பகுதியில் மூன்று பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருக்கு. ஆனால், இங்க உள்ள மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை. மருத்துவர்களும் நோயாளிகளை மோசமா நடத்தறாங்க' என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரை முற்றுகையிட்டு மக்கள் புகார் தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் புகார் சொல்லும் மக்கள்
எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் புகார் சொல்லும் மக்கள்
நா.ராஜமுருகன்
ஊழல் முறைகேட்டை மறைக்க 5,000 மரக்கன்றுகளை கருகவிட்ட அவலம்... கரூர் அய்யம்பாளையத்தில் நடந்தது என்ன?

மருத்துவத் துறையினர்தான் நேரடியாக கொரோனா வைரஸ் தாக்கியவர்களைக் கையாண்டு சிகிச்சையளித்து வருகிறார்கள். இதனால், பல மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு, இறப்பு என்று சோக நிலையும் ஏற்படுகிறது. இப்படி மருத்துவ உலகம், உலக மக்களைக் காக்க கொரோனா வைரஸோடு போராடிக்கொண்டிருந்தாலும், ஒருசில அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.

அய்யம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்
அய்யம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்

அப்படி, கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த வசதியும் சுத்தமும் கவனிப்பும் இல்லை என்று பொதுமக்கள் தொடர் புகார் வாசித்து வந்தார்கள். இந்த அய்யம்பாளையத்துக்கு அருகில் உள்ள புகழூரில் மூன்று நபர்களுக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அந்தப் பகுதியை அடைத்து, சுகாதாரத்துறையினர் தொடர் கண்காணிப்பில் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில், அய்யம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுக்காகச் சென்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, அந்தப் பகுதி மக்கள் அவரை முற்றுகையிட்டு அடுக்கடுக்கான புகார்களை வாசிக்க, அவர் ஆடிப்போனார்.

அவரிடம் பேசிய அங்கிருந்த பெண்கள், 'பக்கத்து ஊரில் மூன்று பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியே தீவிரக் கண்காணிப்பில் உள்ளது. ஆனால், அருகில் உள்ள அய்யம்பாளையத்தில் உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை. சுகாதாரம் என்பது இங்கு அறவே இல்லை. சாதாரண சளி, காய்ச்சலுக்கே இங்கு வைத்தியம் பார்க்கப் போதிய மருந்துகள் இல்லை. இங்குள்ள மருத்துவர்களும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பதில் அசட்டையாக இருக்காங்க. ஒருத்தர் கையில் நாய் கடிச்சுட்டு. ரத்தம் ஒழுக ஒழுக அவர் இங்க சிகிச்சைக்காக வந்தார். ஆனால், மருத்துவர்கள் அவருக்கு உடனேயே சிகிச்சை அளிக்கவில்லை. ரொம்ப நேரம் காக்க வைத்து, அவருக்கு அதிக அளவு ரத்தம் வெளியேறிய பிறகுதான் மருத்துவம் பார்த்தனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் புகார் சொல்லும் மக்கள்
எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் புகார் சொல்லும் மக்கள்

ஒரு வார்டிலும் சுகாதாரம் கிடையாது. நாங்க இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரவே பயப்பட வேண்டி இருக்கு. நீங்கதான் இதைச் சரி செய்யணும்' என்று சொல்ல, அமைச்சருக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே, ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்களை அழைத்து டோஸ் விட்டார்.

'இனியும் இந்த நிலை தொடர்ந்தால், உங்கள் மீது நடவடிக்கை பாயும். கொரோனா வைரஸை விரட்ட நாங்க இரவு பகல் பார்க்காம ஓடிக்கிட்டு இருக்கிறோம். நீங்க சும்மா சம்பளம் வாங்கப் பார்க்கிறீங்களா?' என்று எச்சரிக்கை செய்துவிட்டு, 'இனி இப்படி இருக்காது. அப்படியே இருந்தால், உடனே எனக்குத் தகவல் தெரிவியுங்கள்' என்று மக்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அடுத்த கட்டுரைக்கு