கோவிட்-19: `திருவனந்தபுரத்தில் சமூகப் பரவலாக மாறியுள்ளது!' - அறிவித்த பினராயி விஜயன்

புலவிலாவில் பரிசோதிக்கப்பட்ட 97 மாதிரிகளில், 51 பேருக்கு கோவிட்-19 பாசிட்டிவ்.
கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்துக்குட்ட கடலோரப் பகுதிகளான பூனதுரா, புலவிலா உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கேரளத்தைச் சேர்ந்த மாணவருக்கு ஜனவரி 29-ம் தேதி கண்டறியப்பட்டது. அப்போதிருந்து கேரள அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஐ.நா-வின் சுகாதார அமைப்பு கேரள அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டியது. இந்நிலையில் கேரளாவில் சமூகப் பரவல் உறுதியாகியுள்ளது என அம்மாநில முதல்வரே அறிவித்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புலவிலா மற்றும் பூனதுரா கிராமங்களில் கடந்த சில நாள்களாக கோவிட்-19 வேகமாகப் பரவி வருகிறது. புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் இதுவரை காணாத அளவு உயர்ந்துள்ளது. நோயைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பிற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

தலைநகரமான திருவனந்தபுரம், அதற்கு அடுத்தபடியாக வணிக மையமான எர்ணாகுளத்திலும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளான பூனதுரா, புலவிலா உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
கேரளாவின் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 11,066 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புலவிலாவில் பரிசோதிக்கப்பட்ட 97 மாதிரிகளில், 51 பேருக்கு கோவிட்-19 பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பூனதுராவில் பரிசோதிக்கப்பட்ட 50 மாதிரிகளில், 26 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

"திருவனந்தபுரத்தில் நிலைமை தீவிரமாக உள்ளது. கோவிட்-19 மிக வேகமாகப் பரவி வருகிறது. எனவே, திருவனந்தபுரத்தின் கடலோரப் பகுதிகள் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படும். நிலைமையைக் கண்காணிக்க சிறப்பு போலீஸ் மற்றும் சிவில் சர்வீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் பினராயி விஜயன்.