Published:Updated:

கொரோனா பரவுவதைத் தடுக்க `பிரேக் தி செயின்' பூத்! - கேரளாவின் புதிய திட்டம் #Breakthechain

பிரேக் தி செயின் திட்டம்
பிரேக் தி செயின் திட்டம்

``கொரோனா வைரஸ் தொற்று சங்கிலித் தொடர்போல் பரவி வருகிறது. சங்கிலிப் பின்னலை உடைக்க `பிரேக் தி செயின்' என்ற திட்டத்தை ஏற்படுத்தியுள்ளோம்.''

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், நேற்று மூணாறு பகுதியில் தங்கியிருந்த பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கும் வெளிநாட்டில் மருத்துவம் பயின்று ஊர் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கொரோனோ பாதித்த 21 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 14,944 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 259 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.

`ஒருவருக்கு உறுதியான வைரஸ்; 270 பேரை இறக்கிவிட்ட அதிகாரிகள்!’ -  கேரளாவில் தொடரும் கொரோனா போராட்டம்

கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து தினமும் முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,``ரிசாட்டுகள், ஹோட்டல்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் குறித்த தகவலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தி நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால்தான் அவர்கள் தொடர்ந்து பயணப்பட முடியும். கேரளத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் குறித்த விவரங்களைக் காவல்துறையினர் சேகரித்து உடனடியாக அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். சில பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற புகார் வந்துள்ளது. சீரான போக்குவரத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி மற்றும் தனியார் பஸ்களை போக்குவரத்துத்துறை கண்காணிக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இந்த நிலையில், கொரோனா பரவுவதைத் தடுக்க `பிரேக் தி செயின்' என்ற திட்டத்தை கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறுகையில்,``கொரோனா வைரஸ் தொற்று சங்கிலித் தொடர்போல் பரவி வருகிறது. சங்கிலிப் பின்னலை உடைக்க `பிரேக் தி செயின்' என்ற திட்டத்தை ஏற்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்தின்படி அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களிலும் நுழைவுப் பகுதியில் ஒரு பூத் ஏற்படுத்த வேண்டும்.

நிறுவனங்களுக்குள் நுழையும் ஒவ்வொருவரும் அந்தப் பூத்தில் சென்று கைகளைக் கழுவிக்கொண்டோ அல்லது ஹேண்ட் சானிட்டிசர் (hand sanitizer) உபயோகித்துக்கொண்டோதான் உள்ளே நுழைய அறிவுறுத்த வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் பிறருக்குப் பரவுவதை தடுக்க முடியும். `பிரேக் தி செயின்' என்ற பெயரில் அந்தப் பூத்துகள் அமைக்கப்பட வேண்டும். அரசு நிறுவனங்கள், வங்கிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பிளாட்டுகளில் இந்தப் `பிரேக் தி செயின்' பூத்துகள் அமைக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

கேரள மாநிலம் முழுவதும் மாஸ்க் தட்டுப்பாடு நிலவுவதால் சிறைச்சாலைகளில் கைதிகள் மூலம் மாஸ்க் தயாரிக்கும் பணியை கேரள அரசு முடுக்கிவிட்டுள்ளது. சிறைச்சாலைகளில் பிரியாணி தயாரித்து விற்பது, முடிவெட்டுதல் போன்ற பணிகளைச் செய்துவந்த கைதிகள், தற்போது மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு