Published:Updated:

கொரோனா காலத்திலும் பணிக்கு வராத 385 டாக்டர்கள் பணிநீக்கம்! - கேரள அரசு அதிரடி

டாக்டர்
டாக்டர் ( Representational Image )

385 மருத்துவர்கள் மட்டுமல்லாமல், ஐந்து ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள், நான்கு மருந்தாளுநர்கள், 20 ஸ்டாஃப் நர்ஸ் உள்ளிட்டவர்கள் என மொத்தம் 432 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. சீனாவிலிருந்து வந்த மூன்று மாணவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் கண்டறியப்பட்டது. எற்கெனவே நிபா வைரஸ் தொற்று உள்ளிட்டவற்றால் அனுபவம் பெற்றிருந்த கேரளா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. இதனால், ஆரம்பத்திலிருந்தே கொரோனாவைக் கட்டுக்குள்வைக்க முயன்றது. இந்தநிலையில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உடலில் புழுக்கள் ஏற்பட்ட விவகாரம் பிரச்னையை ஏற்படுத்தியது. அது சம்பந்தமாக மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்தால், பிற மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா

இதற்கிடையில் மருத்துவப் படிப்பு முடித்து வெளியேவந்த சுமார் 900 மருத்துவர்கள் கொரோனா நோய்த் தடுப்புப் பணிக்காக தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு 45,000 ரூபாய் மாதச் சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில் 27,000 ரூபாய் மாதச் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுமார் 900 மருத்துவர்களும் தங்கள் தற்காலிகப் பணியை உதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளா: பிரியாணி விற்ற திருநங்கைக்கு நேர்ந்த கொடுமை! - உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளங்கள்

இந்தநிலையில்தான் நீண்டகாலமாக பணிக்குச் செல்லாமல் இருந்த 380 மருத்துவர்களை பணி நீக்கம் செய்து கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``எந்தக் காரணமும் கூறாமல் சில வருடங்களாக பணிக்கு வராமலிருக்கும் சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியும் 385 டாக்டர்கள் உட்பட 432 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. பலமுறை வாய்ப்பளித்தும் பணியில் சேராத ஊழியர்களை நீக்க ஏற்கெனவே அரசு முடிவு செய்திருந்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் சேவை அவசியமாக இருந்தது. அதனால்தான் பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணமே இல்லாமல் பணிக்கு வராமலிருந்த மருத்துவக் கல்வி சார்ந்த மருத்துவர்கள் 36 பேர் ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இப்போது 385 மருத்துவர்கள் மட்டுமல்லாமல் ஐந்து ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள், நான்கு மருந்தாளுநர்கள், 20 ஸ்டாஃப் நர்ஸ் உள்ளிட்டவர்கள் என மொத்தம் 432 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு