Published:Updated:

`கொரோனா கண்காணிப்பில் கூடுதலாக 418 பேர்!' -கேரள சுகாதாரத்துறை சொல்வது என்ன?#Corona

கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைக்காக நேற்று 1,053 பேர் கண்காணிப்பில் இருந்தநிலையில், இன்று அந்த எண்ணிக்கை 1,471 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவி உலகை அச்சுறுத்தி வருகின்றது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் இந்தியாவில் கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு மாணவிக்குக் கொரோனா வைரஸ் பாதித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவிலிருந்து வந்த அந்த மாணவிக்கு திருச்சூர் மெடிக்கல் காலேஜில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைக்காக நேற்று 1,053 பேர் கண்காணிப்பில் இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 1,471 ஆக அதிகரித்துள்ளது.

கேரள அமைச்சர் கே.கே.சைலஜா
கேரள அமைச்சர் கே.கே.சைலஜா

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில், ``கொரோனா பாதித்த மாணவியின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளது. இந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த 58 பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வைரஸ் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என 1,471 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் மக்கள்கூடும் இடங்களுக்குச் செல்லவும் பேருந்துபோன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சூரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 15 பேர் மருத்துவமனையின் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 24 பேரின் சாம்பிள்கள் ஆய்வுக்கு அனுப்பியதில், 18 சாம்பிள்கள் நெகட்டிவ்வாக வந்துள்ளன. இன்று 15 சாம்பிள்களை ஆய்வுக்கு அனுப்ப உள்ளோம்.

கொரோனா வைரஸ்... உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரபூர்வ விளக்கங்கள்! #VikatanPhotoCards
கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவலைப் பரப்பிய மூன்றுபேர் மீது வழக்கு தொடரப்பட உள்ளது.
அமைச்சர் கே.கே.சைலஜா

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க கூடுதல் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 85 தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திங்கள்கிழமை முதல் பள்ளிகளில் மாணவர்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து கேரளத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் ஹெல்ப் டெஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவலைப் பரப்பிய மூன்றுபேர் மீது வழக்கு தொடரப்பட உள்ளது" என்றார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் கொடுத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சில இடங்களைக் குறிப்பிட்டு, `அங்கு கொரோனா வைரஸ் பரவுகிறது' என ஒருவர் தகவல் பதிந்துள்ளார். அதை மற்ற இரண்டுபேரும் பகிர்ந்துள்ளார்கள். எனவே, பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்தும் வகையில் தகவல் பரப்பியதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட உள்ளது என்கின்றனர் கேரளக் காவல்துறை வட்டாரத்தில்.

பின் செல்ல