Published:Updated:

`பயணத்தை மறைத்த குடும்பம்... கோபப்பட்ட அமைச்சர்..!' - கேரளாவில் மீண்டும் கொரோனா வந்தது எப்படி?!

ஷைலஜா டீச்சர்
ஷைலஜா டீச்சர்

``தற்போது ஐந்து பேருக்கு கொரோனா அறிகுறி பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இந்த முறை வைரஸ் பரவியதற்கு காரணம் ஒரு குடும்பமே''

கேரளாவில் ஏற்கெனவே மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் அறிவித்துள்ளார். இத்தாலியிலிருந்து திரும்பிய 3 பேர் உட்பட பத்தினம் திட்டாவைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தியாளரின் சந்திப்பின்போது, ஒருகுடும்பத்தின் `பொறுப்பற்ற நடத்தை' காரணமாகத் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா பரவியது என்று கோபத்துடன் கூறினார்.

கொரோனா
கொரோனா
Pixabay

செய்தியாளர் சந்திப்பில், ``தற்போது ஐந்து பேருக்கு கொரோனா அறிகுறி பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இந்த முறை வைரஸ் பரவியதற்குக் காரணம் ஒரு குடும்பமே. பிப்ரவரி 29 அன்று 55 வயது நபர், அவரது 53 வயது மனைவி மற்றும் அவர்களின் 26 வயது மகன் ஆகியோர் இத்தாலியின் வெனிஸிலிருந்து கத்தார், தோஹா வழியாக கொச்சிக்குத் திரும்பியுள்ளனர். இவர்கள் விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடத்தில் உரிய தகவல் சொல்லாமல் நேராக வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டுக்கு வந்த பிறகு, பக்கத்தில் உள்ள தன் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று! - காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்கு தீவிர சிகிச்சை

பின்னர் 6-ம் தேதி அவர்களின் உறவினர்கள் முதியவர்கள் இருவரும் காய்ச்சல் காரணமாக தாலுகா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. உடனே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் சொல்லித்தான் இத்தாலியில் இருந்து அந்தக் குடும்பம் வந்தது அரசுக்குத் தெரிய வந்தது. உடனே மெடிக்கல் டீம் ஒன்று அவர்களது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியது. அதில் அவர்களுக்கும் கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முற்பட்டோம். ஆனால், அவர்கள் மறுத்தனர். ``எங்கள் உடலுக்கு ஒன்றுமில்லை" எனக் கூறி ஒத்துழைக்க மறுத்தனர்.

ஷைலஜா டீச்சர்
ஷைலஜா டீச்சர்

பின்னர் கட்டாயப்படுத்தி அவர்களை மருத்துவமனை அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம். அரசு பலமுறை கூறிவிட்டது. வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும்போது அதுதொடர்பாக அரசுக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும். விமான நிலையத்திலேயே மெடிக்கல் டீம் எப்போதும் இருக்கிறது. அங்கேயே அவர்கள் பரிசோதனை செய்துகொள்ளலாம். அல்லது வீட்டுக்கு வந்த பிறகாவது அருகில் உள்ள மருத்துவர்களை தொடர்புகொண்டு கூற வேண்டும்.

தாஜ்மகாலை மூடச் சொன்னது முதல் பயோமெட்ரிக் சிஸ்டத்துக்கு தற்காலிகத் தடை வரை...  கொரோனா அப்டேட்ஸ்!

அப்படிக் கூறாமல் இருந்தால் குற்றம் ஆகும். இந்தக் குடும்பம் செய்தது குற்றம்தான். சுகாதாரத்துறையைச் சேர்ந்த பலர் வைரஸைக் கட்டுப்படுத்த பல நாள்களாகப் போராடி வருகிறார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இப்படி வேலை செய்வதை எங்களுக்குக் கடினம் என்று நாங்கள் கூறவில்லை. இது எங்கள் கடமை. நாங்கள் இரவும் பகலும் வேலை செய்கிறோம். இவற்றையெல்லாம் மீறி, அவர்கள் இத்தாலியில் இருந்து திரும்பி வந்தார்கள் என்ற உண்மையை மறைத்து சமூகத்தில் உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நான் ஒருபோதும் இதுபோன்ற கடுமையாகப் பேசியதில்லை. ஆனால், தற்போது இதைச் சொல்வதில் எனக்கு வேதனை இருக்கிறது.

ஷைலஜா டீச்சர்
ஷைலஜா டீச்சர்

இந்தக் குடும்பம் தங்களது பயண விவரங்களைத் தெரிவிக்காததால் இப்போது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அதிக வேலைப்பளு ஏற்பட்டுள்ளதுடன் வைரஸை எதிர்த்து போராட வேண்டும். இந்தக் குடும்பம் முன்பே எங்களிடம் கூறியிருந்தால், நாங்கள் முதலிலேயே அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திருப்போம். நாங்கள் இப்போது மிகவும் சிரமத்தில் இருக்கிறோம். இந்தக் குடும்பத்தினர் சென்ற எல்லா இடங்களுக்கும் சென்று அவர்கள் சந்தித்த அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கோபமாகக் கூறினார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு