Published:Updated:

தமிழகத்துக்கே வழிகாட்டும் ஈரோடு!

தமிழகத்துக்கே வழிகாட்டும் ஈரோடு!
பிரீமியம் ஸ்டோரி
தமிழகத்துக்கே வழிகாட்டும் ஈரோடு!

அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்தது.

தமிழகத்துக்கே வழிகாட்டும் ஈரோடு!

அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்தது.

Published:Updated:
தமிழகத்துக்கே வழிகாட்டும் ஈரோடு!
பிரீமியம் ஸ்டோரி
தமிழகத்துக்கே வழிகாட்டும் ஈரோடு!
`நாங்க நாலு பேரு, எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது!’ ‘காக்க காக்க’ படத்தில் ஒரு வசனம் வரும். நேர்மையான, அதிரடியான அதிகாரிகள் நான்கு பேர் கொண்ட அந்த டீம்தான் மாநகரத்தையே கலக்கும் ரவுடிகள் கும்பலை அடியோடு ஒழிக்கும்.

கண்ணுக்குத் தெரிந்த ரவுடிகளைக் கைது செய்வார்கள்; குண்டர் சட்டத்தில் அடைப்பார்கள்; எங்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிக்கப்பார்த்தார்கள் என்று சொல்லி ‘என்கவுன்டர்’கூடச் செய்வார்கள். ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனாத் தொற்றிலிருந்து மக்களை எப்படிக் காப்பாற்றுவது... காக்க காக்க போலவே நான்கு அதிகாரிகள் கொண்ட டீம்தான் களமிறங்கி ஈரோடு மக்களைக் காத்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவிற்குள் கொரோனா நுழைந்ததும், இங்கேயெல்லாம் எப்படி கொரோனா வருமென்றுதான் தமிழகமே சற்று மிதப்பில் இருந்தது. அப்போதுதான் ஈரோடு உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் உள்ள 75 மாவட்டங்களை முடக்கி, கடந்த மார்ச் 22 அன்று மத்திய அரசு உத்தரவிட்டது. மார்ச் 30-ம் தேதி நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அன்றைய தேதியில் சென்னையிலேயே 22 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கோவையில் ஒரே ஒரு பாசிட்டிவ் கேஸ்தான் இருந்தது. 23 மாவட்டங்களில் சுத்தமாக கொரோனா பாதிப்பே இல்லை.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

ஆனால், இன்றைக்குச் சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியும், கோவையில் நூற்றுக்கு மேலும் இருக்கிறது. ஆனால், ஈரோடு மாவட்டமோ 70-க்குள் இந்த எண்ணிக்கையைக் கட்டுப்படுத்திய தோடு, உயிரிழந்த ஒருவரைத் தவிர பாதிக்கப்பட்ட எல்லோரையும் குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, பச்சை மண்டலத்தை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எப்படி வந்தது... எப்படித் துரத்தப் பட்டது? தாய்லாந்து நாட்டினர் மூலம்தான் ஈரோட்டில் கொரோனா பரவ ஆரம்பித்தது. அவர்கள் ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள மசூதிகளுக்குச் சென்று பிரசங்கம் செய்ததும், தங்கி இருந்ததும் தெரியவந்ததும் இஸ்லாமிய மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாயினர். இதனால் அவர்களுக்குள் மட்டுமன்றி, அவர்களுக்கும் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் மனக்கசப்புகள் எழுந்தன. இது பெரிதானால் வேறு விதமான பிரச்னை உருவாகுமோ என்ற பயமும் அதிகாரிகளிடம் எழுந்தது.

கிருமிநாசினி
கிருமிநாசினி

அதன்பின்புதான் அதிகாரிகள் இணைந்து ஆலோசித்துக் களமிறங்க ஆரம்பித்தனர். தாய்லாந்து நாட்டினரை இரவோடு இரவாகத் தனிமைப்படுத்தினர். அவர்கள் சென்ற சுல்தான்பேட்டை மற்றும் கொல்லம்பாளையம் மசூதிகளைச் சுற்றி 200 மீட்டர் பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராக் காட்சிகளை ஆராய ஆரம்பித்தனர். அதில் தாய்லாந்து நாட்டினர் பலருடைய வீடுகளுக்குச் சென்று சாப்பிட்டதும், பலரோடு நெருங்கிப் பழகியதும், சாலைகளில் உலாவியதையும் கண்டு அதிர்ந்துபோயினர்.

கொரோனா
கொரோனா

உடனே சம்பந்தப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். கிட்டத்தட்ட 18 பகுதிகளை சீல் வைத்து 33,330 குடும்பங்களைச் சேர்ந்த 1,66,806 பேரை வீடுகளுக்குள் தனிமைப்படுத்தினர். டெல்லிக்குச் சென்று வந்தவர்களைச் சோதித்ததில் பலருக்கு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. அதன் பின் நடந்த விஷயங்களை நம்மிடம் விளக்கினார் ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

“ஐந்து வயதுக் குழந்தை, கர்ப்பிணிப் பெண் எனக் குடும்பத்திலிருந்தவர்களுக்கும் இந்தத் தொற்று பரவி பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தபோது கலங்கிப்போனோம். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து நம்பிக்கை யூட்டினோம். வீடியோ கால் மூலமாக மருத்துவர்கள் தொடர்பிலேயே இருந்தனர். மருத்துவமனை சாப்பாடு ஒத்துக்கொள்ளாததால் ஹோட்டலில் சாப்பாடு ஏற்பாடு செய்தோம். கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தபோது அதன் நிலைமை என்னவாகுமோ எனப் பதறிப்போனோம். ஆனாலும், தடுமாறாமல் நம்பிக்கையான செயல்பாடுகளை முன்னெடுத்ததால் இன்றைக்கு (ஏப்ரல் 30) ஈரோடு மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை. கடந்த 15 நாள்களாக இந்த நிலை தொடர்வதுதான் பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது” என்றார்.

கொரோனா
கொரோனா

மாநகருக்குள் கொரோனாத் தொற்று வந்ததிலிருந்தே, மாநகர் முழுக்க கிருமிநாசினியைத் தெளிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டது மாநகராட்சி நிர்வாகம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 50 வீட்டுக்கு ஒரு நகர சுகாதாரச் செவிலியரை அனுப்பி தினமும் ஆய்வு செய்தது. அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்தது.

இவை எல்லாவற்றையும்விட, சமூகப்பரவலைத் தடுக்க மூன்று ஏக்கரில் நெரிசலாக இருந்த மார்க்கெட்டை, 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு மாற்றினார் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன். ‘‘இனிமேல் கொரோனாவால் ஈரோட்டில் ஒரு இறப்புகூட நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காகத்தான் மாநகராட்சிப் பணியாளர்கள் 2500 பேர் இன்னும் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகிறோம்” என நம்பிக்கை ததும்பப் பேசுகிறார் இளங்கோவன்.

கதிரவன், இளங்கோவன்
கதிரவன், இளங்கோவன்

ஊரடங்கு தொடங்கிய நாள்களில், சென்னையில் ஊர் சுற்றியவர்களைக் கத்திப்பேசிக் கண்டிக்காமல் லத்தியால் தண்டித்தது போலீஸ். ஆனால் தமிழகத்தின் முதல் ஹாட் ஸ்பாட் ஆன ஈரோட்டில் போலீசார் கையெடுத்துக் கும்பிட்டு, கனிவோடு பேசி, மக்களிடம் கெஞ்சினர். அது நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது.

ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், ‘‘மாவட்டத்திலிருந்த 13 செக்போஸ்டுகளை, 135 ஆக அதிகப்படுத்தி மாவட்டத்தின் பாதுகாப்பை முழுவதுமாக பலப்படுத்தினோம். கிட்டத்தட்ட 15 நாளாக சரியான தூக்கமே இல்லை. கண்ணெல்லாம் எரிச்சலாக இருக்கும். ஆனால் இப்படியான ஒரு சூழலில் மக்களின் பாதுகாப்பிற்காக வேலை பார்த்ததில் பெருமகிழ்ச்சி. அதிகாரிகளான எங்களைவிட களத்தில் முதல் வரிசையில் இருந்த மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், தன்னார்வலர்கள்தான் ரியல் ஹீரோஸ். தற்போதுள்ள நிலையைத் தக்கவைப்போம்” என்றார்.

இவர்களின் பங்களிப்பு இப்படியென்றால் கலெக்டர் கதிரவன், கலக்கியெடுத்தார். பெயருக்கேற்ப அதிகாலை நேரத்திலேயே டி-ஷர்ட், டிராக் சூட் உடன் களமிறங்கிவிடுவார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வது, பாதித்த மனிதர்களுக்குத் தனிப்பட்ட முறையில் உதவுவது என இடையறாது இயங்கிக்கொண்டே இருந்தார். கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் அனைவரையும் வாழ்த்தி பழக்கூடையுடன் அவர்கள் கையில் அவர் கொடுத்தது குர்-ஆன்.

சவுண்டம்மாள், சக்தி கணேசன்
சவுண்டம்மாள், சக்தி கணேசன்

‘‘கொரோனாத் தொற்று உறுதியான பலர் மருத்துவமனைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதிகாரிகள் இந்தத் தகவலை என்கிட்ட சொன்னதும் பாதிக்கப்பட்டவங்க வீட்டுக்கு நானே நேரா போயிட்டேன். ‘எங்க வீட்ல அம்மா, அப்பா, குழந்தைகளை எப்படிப் பார்த்துக்குவேனோ அப்படி உங்களைப் பார்த்துக்குவேன். தைரியமாக வாங்க!’ன்னு பேசி கிட்டத்தட்ட 20 பேரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சேன். ஒரு வீட்ல இருந்த நான்கு பேருக்கும் கொரோனா பாசிட்டிவ், அந்த வீட்ல இருந்த பத்து வயசு மன வளர்ச்சி குன்றிய பையனுக்கு மட்டும் நெகட்டிவ். குழந்தையை விட்டுட்டு எப்படி அந்த அம்மாவை மட்டும் கூட்டிட்டுப் போறதுன்னு சங்கடமாகிடுச்சி. என்ன ஆனாலும் சரின்னு அந்தப் பையனையும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய், அவங்க அம்மா கண்படவே பையனை கவனிச்சிக்கிட்டோம். ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல எல்லோரும் ஒன்று சேர்ந்துதான் இந்த நிலையை எட்டியிருக்கிறோம். இனிமேலும் கொரோனாவை வரவிடமாட்டோம்” கம்பீரமாகச் சொன்னார் கலெக்டர் கதிரவன்.

இவர்கள் மட்டுமல்ல; தன்னார்வலர்கள், அரசியல்கட்சியினர், தொழில் அமைப்பினர் என எல்லோரும் இணைந்து ஏழை, எளியோர், ஆதரவற்றோர், மனநலம் குன்றியவர்கள் என எல்லோருக்கும் உணவு கொடுத்து உதவி வருகின்றனர். எப்படியிருப்பினும்... மரணத்தின் பாதாளத்திலிருந்து மீண்டு புதியபாதையை அமைத்திருக்கிறது ஈரோடு. இதற்காக உழைத்த அதிகாரிகள், ஒத்துழைத்த மக்கள் என எல்லோரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் தமிழகத்துக்கே வழிகாட்டியாய் விளங்குவது ஈரோடு. இப்போது நோய்த்தடுப்புக்கும் வழிகாட்டியாகியிருக்கிறது.