Published:Updated:

கொடிவேரி அணை, பவானிசாகர் அணைப் பூங்கா மூடல்! - சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை #Corona

கொடிவேரி அணை
கொடிவேரி அணை

கொடிவேரி அணை, பவானிசாகர் அணைப் பூங்கா ஆகிய இரண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை திறக்கப்படாது எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கொடிவேரி அணை, பவானிசாகர் அணைப் பூங்கா ஆகிய சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன.

கொடிவேரி அணை
கொடிவேரி அணை

பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில் தடுக்கப்பட்டு அருவிபோல கொட்டுகிறது. பெரிய சுற்றுலாத் தலங்கள் ஏதும் இல்லாத ஈரோட்டில் இந்தக் கொடிவேரி அணைதான் மக்களின் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. சில்லென்று அருவிபோல கொட்டும் தண்ணீரில் குளித்துவிட்டு, அங்கு கிடைக்கும் பொரித்த மீன்களை ருசிப்பதற்கென ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. அணைக்குள் செல்ல வெறும் 5 ரூபாய் மட்டுமே கட்டணம் என ஏழைகளுக்கேற்ற சுற்றுலாத் தலமான இதில், வார இறுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள். அப்படியிருக்க, நேற்று மதியம் 1 மணிக்கு மேல் கொடிவேரி அணையில் இருந்த பொதுமக்கள் அனைவருமே வெளியேற்றப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஈரோடு மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இதேபோல, தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் அணை ஈரோட்டில் இருக்கிறது. இந்த அணையையொட்டி 15 ஏக்கரில் பிரமாண்டமான பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. விடுமுறை மற்றும் விசேஷ நாள்களில் இந்தப் பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுவர். இந்தப் பூங்காவில் நேற்று மதியம் 2 மணிக்கு மேல் இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அணை மூடப்பட்டது. கொடிவேரி அணை மற்றும் பவானிசாகர் அணை பூங்கா ஆகிய இரண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும் வரை திறக்கப்படாது எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

பவானிசாகர் அணை பூங்கா
பவானிசாகர் அணை பூங்கா

அதேபோல, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி பகுதிகளில் உள்ள 4 சினிமா தியேட்டர்கள் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன. ஈரோடு மாவட்டமானது கர்நாட மாநில எல்லையில் இருப்பதால், மாவட்ட எல்லைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே வாகனங்களை மாவட்டத்தினுள் அனுமதிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு