Published:Updated:

`அறிகுறிகள் இல்லை.. ட்ராவல் ஹிஸ்டரியும் இல்லை!’ -ஆந்திர எம்.பி குடும்பத்தில் 6 பேருக்குக் கொரோனா

சஞ்சீவ் குமார் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்துகொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம் தினம் வெளியாகும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நம்மை பதற்றப்படுத்தும் விதமாகவே இருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் நிலையான சமூகப் பரவலுக்குச் செல்லவில்லை என மத்திய அரசும், இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சிலும் அழுத்தமாக தெரிவித்து வருகிறது. இதனிடையே, ஆந்திர மாநிலத்தின் கர்னூல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சஞ்சீவ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள தகவல், ஆந்திர மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

கர்னூல் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார், தனது 83 வயதான தந்தை, இரு சகோதரர்களும் அவர்கள் இருவரின் மனைவியும், ஒரு மருமகனும் எனத் தனது குடும்ப உறவினர்கள் ஆறு பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் பேசிய, எம்.பி சஞ்சீவ் குமார், ``கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எவ்விதச் சிக்கலும் இல்லாமல் நலமாக இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சிகிச்சைப் பெற்று வரும் கர்னூல் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்பதற்கான ஆதாரத்தை ஆராய்ந்து வருகிறோம், ஆனால், இதுவரை அதைக் கண்டறியவில்லை.

கொரோனா
கொரோனா

இதனிடையே, எனது இரு சகோதரர்களும் நர்சிங்காரோபேட்டாவில் வசித்து வருகின்றனர். எனது தந்தை அவரது சகோதரருடன் வசித்து வருகிறார். எனது இரு சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவியென அனைவருமே மருத்துவர்கள். சமூக இடைவெளியை அனைவருமே மிகக் கண்டிப்புடன் பின்பற்றி வந்துள்ளார்கள். இந்நிலையில் தனியார் கிளீனிக் நடத்தி வரும் எனது இரு சகோதரர்களும் ஒரு மாதத்திற்கு முன்னரே, கிளினிக்கை மூடியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கள் குடும்பத்தினர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருப்பதற்காக, வெளித் தொடர்பு இல்லாமல் இருந்திருக்கின்றனர். மேலும், அன்றாடம் வாங்கி வந்த செய்தித் தாள்களை கூட வாங்காமல் நிறுத்தியுள்ளோம். ஆனால், எவ்விதப் பயண வரலாறும் இல்லாத எனது சகோதரர்கள் மற்றும் அவரது மனைவிகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் எனும் மூன்றாம் நிலையை அடைந்து விட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை” எனத் தெரிவித்தார்.

கொரோனா
கொரோனா

இதனிடையே, எம்.பி சஞ்சீவ்குமாரின் தந்தையின் உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் ஹைதராபாத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன், எம்.பி சஞ்சீவ்குமார் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்துகொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்குக் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு