Published:Updated:

கொரோனா கேள்விக்குட்படுத்திய அரசின் கொள்கை நிலைப்பாடுகள்... இனியாவது விழிப்போமா?

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

தற்போது நடைமுறையில் இருக்கும் தொற்றுநோய்ச் சட்டம் 1897, சுமார் 123 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பிளேக் நோய் வந்தபோது கொண்டு வரப்பட்ட சட்டம். இந்தச் சட்டத்தில், நோய்த் தடுப்புக்காக, அரசு எந்தவிதமான கட்டுப்பாடுகளை வேண்டுமானாலும் கொண்டுவரலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது. அதேவேளை...

கொரோனா நோய்ப்பரவல் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறிவருகின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரையில் நோய்ப்பரவல் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அரசு இதுநாள் வரை கடைப்பிடித்து வந்த கொள்கை நிலைப்பாடுகளில் இருக்கும் பல ஓட்டைகள் வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றன. டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, வல்லரசு இந்தியா போன்ற சொற்றொடர்களுக்கு அருகில் மிகப்பெரிய கேள்விக்குறியையும் இட்டு நிறுத்தியிருக்கிறது கொரோனா. அப்படி, கோரோனா என்னும் கொள்ளை நோய் வெளிச்சம் போட்டுக்காட்டிய விஷயங்கள் என்னென்ன, பல் துறை ஆளுமைகளின் கருத்துகள் இங்கே...

‘’பலவீனமான பொது சுகாதாரக் கட்டமைப்பு, கல்வியறிவின்மை மற்றும் சரியான தகவல் பரிமாற்றமின்மை ஆகிய அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது கொரோனா’’ என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி.

‘’ஒட்டுமொத்த ஜி.டி.பியில் வெறும் 1.5 சதவிகிதம் மட்டுமே பொது சுகாதாரத்துறைக்கு நம் நாட்டில் நிதியாக ஒதுக்கப்படுகிறது. இது உலக நாடுகளை ஒப்பிடும் போது மிகக்குறைவு. அதனால், நம் பொது சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் பலவீனமாக இருக்கிறது. திடீரென, இதுபோன்று தேவைப்படும் நேரத்தில் பணம் ஒதுக்கினால் அந்தக் கட்டமைப்பை மேம்படுத்திவிட முடியாது. சுகாதாரத்துறை சார்ந்த முன்னேற்றங்களில் தொலை நோக்குப் பார்வை நம் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

மருத்துவர் சாந்தி
மருத்துவர் சாந்தி

அடுத்ததாக, நம் நாட்டில் மூன்றில் ஒரு சதவிகித மக்களுக்குச் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதனால்தான், ஊரடங்கு அறிவிப்புக்குப் பிறகு மக்கள் சாரை சாரையாக தங்களின் சொந்த ஊர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். மற்ற எந்த நாட்டிலும் இது போன்று அவலம் நடைபெறவில்லை. காரணம் அனைத்து நாடுகளிலும், அவர்கள் வாழும் இடங்களிலே அவர்களின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி அனைத்துப் பகுதிகளுக்கும் சம அளவில் பரவல் ஆகாமல், ஒரு குறிப்பிட்ட இடங்களிலேயே தேங்கிப் போவதால், ஏற்படும் அவல நிலையை இது வெளிச்சம் போட்டுக் காட்டியது. அடுத்ததாக, அனைத்து மக்களுக்குமான, கல்வி இன்னும் நம் நாட்டில் சாத்தியமாகவில்லை. அதனால்தான் நோயின் தாக்கம் குறித்து நாம் எவ்வளவு சொல்லியும் மக்களுக்குப் புரியவில்லை. நாட்டின் பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாக மக்களைக் காண முடிகிறது. இதன்மூலம், அரசின் கல்விக்கொள்கையிலும் பல மாற்றங்கள் தேவை என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது.

அதேபோல, தகவல் பரிமாற்றமும் முறையாக நடைபெறவில்லை. பிரதமரின் கருத்துகள், அரசாங்கம் கொடுக்கிற விழிப்புணர்வு எல்லாம் வீடில்லாத, டி.வி.ரேடியோ, செல்போன் கூட இல்லாத மக்களுக்குப் போய்ச்சேரவில்லை. ஒரு நாட்டில், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சொல்லும் கருத்துகள் கடைசிக் குடிமகனுக்கும் போய்ச் சேர வேண்டும். அதற்கான வசதிகள் இருக்கவேண்டும். நம் நாட்டில் அது இல்லை’’ என்கிறார் மருத்துவர் சாந்தி.

பத்திரிகையாளர் அய்யநாதன்
பத்திரிகையாளர் அய்யநாதன்

‘’சுகாதாரத்துறையில், இந்திய அரசாங்கம் கடைப்பிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கையை, கொரோனா வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது’’ என்கிறார் பத்திரிகையாளர் அய்யநாதன்.

‘’உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் நம் நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது மிகக் குறைவுதான். இந்திய மருத்துவக் கழகம் கூட நம் நாடு மிகப்பெரிய அபாயத்தைச் சந்திக்கும் என்று எச்சரித்தது. ஆனால், அது நடக்கவில்லை. இது ஒரு மகிழ்வான விஷயம்தான். ஒருவேளை, இத்தாலியில், பிரான்ஸில், அமெரிக்காவில், இங்கிலாந்தில் ஏற்பட்டதுபோல சமூகப் பரவல் இங்கு நிகழ்ந்திருந்தால், லட்சக்கணக்கான மக்களை இந்த நாடு இழந்திருக்கும். காரணம், அந்த பாதிப்பைச் சமாளிக்கக் கூடிய அளவில், இங்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மருத்துவச் சுற்றுலாவில் நம் நாடு முன்னணியில் இருக்கிறது என மார்தட்டிக்கொள்கிறோம். அதேவேளை, நாங்கள் இலவசமாகப் பரிசோதனை செய்து தருகிறோம், இலவசமாகச் சிகிச்சை அளிக்கிறோம் என எந்த கார்ப்பரேட் மருத்துவமனை நிர்வாகமும் தற்போது முன்வரவில்லை. கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு எவ்வளவு வரிச் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன, அது எல்லாம் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே கொடுக்கப்படுகிறது. அதற்குப் பிராயச்சித்தமாக எந்த கார்ப்பரேட் மருத்துவமனையும் மக்களுக்கு உதவிசெய்ய முன்வரவில்லையே. அதேவேளை, போதிய மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத போதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்தான் தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் போராடினார்கள், போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அரசு மருத்துவர்கள்
அரசு மருத்துவர்கள்
ஜல்சக்தி துறையோடு  காவிரி மேலாண்மை ஆணையம் இணைப்பு... கைவிட்டுப்போகிறதா தமிழகத்தின் காவிரி உரிமை?

போதிய வசதி இல்லாத போதும், அரசால் உருவாக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்தான் இந்த நேரத்தில் மக்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள்தான், மருத்துவமனை ஊழியர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படவும் செய்திருக்கிறார்கள். எனில், இவ்வளவு காலம் தனியாரை ஊக்குவித்து தனியார் மயத்தைப் பெருக்கியதால் நமக்கு என்ன பலன் கிடைத்தது. ஆபத்துக்காலத்தில்தான் நாம் கடைப்பிடிக்கும் கொள்கை சரியானதா என்பது தெரியவரும்.1991-ம் ஆண்டு மன்மோகன் சிங் கொண்டு வந்த, அந்த தனியார் மயக் கொள்கையைக் கடைப்பிடித்ததன் விளைவு, இந்திய சுகாதாரக் கட்டமைப்பை அது கடுமையாகச் சிதைத்துவிட்டது. இதைப் புரிந்துகொண்டு இனிவரும் காலங்களிலாவது, சுகாதாரத்துறையில், நம் நாடு கடைப்பிடித்து வரும் தனியார்மயக் கொள்கையை கைவிட வேண்டும் என்பதை இந்தக் கொரோனா நமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது" என்கிறார் பத்திரிகையாளர் அய்யநாதன்.

‘’புலம்பெயர் தொழிலாளர்களின் சிக்கல்கள், ’நம் நாடு இதுவரைக் கடைப்பிடித்து வந்த தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் காலாவதித்தன்மை ஆகியவற்றை இந்தக் கொரோனா நமக்கு உணர்த்தியிருக்கிறது‘’ என்கிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு.

‘’மொழியியல், சமூகவியல் அறிஞர் 'நோம் சாம்ஸ்கி' கொரோனாவைக் கடந்ததும் இந்த உலகம் சந்திக்கவிருக்கும் நெருக்கடிகளாக மூன்று விஷயங்களை வரையறுத்துள்ளார். அதில், புலம்பெயர் தொழிலாளர் சிக்கலையும் ஒரு நெருக்கடியாக முன்வைத்துள்ளார். அதை டெல்லி சம்பவம் நமக்கு அப்பட்டமாக உணர்த்தியது.1000, 500 கி.மீட்டர் நடந்து தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்ற அவலத்தை நாம் பார்த்தோம். இது போன்று புலம்பெயர் மக்கள் குறித்து ஆளும் ஆட்சியாளர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை.

தோழர் தியாகு
தோழர் தியாகு

சொந்த மண்ணில், விவசாயம் அழிந்து பிழைக்க வழியில்லாமல் போனதே, இப்படிப் பல கி.மீட்டர் கடந்து மக்கள் வேலைக்குச் சென்றதற்கான காரணம். வேளாண்மை குறித்து, மத்தியில் ஆட்சி செய்த, செய்யும் காங்கிரஸ், பி.ஜே.பி என இரண்டு கட்சிகளுக்குமே போதிய தெளிவில்லை. மன்மோகன் சிங் விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட வேண்டும் என்றார். மோடியும் அதையே கடைப்பிடித்துவருகிறார். வேளாண்மை, தற்சார்பு குறித்த அரசின் பார்வை மாறவேண்டும் என்பதை கொரோனா நமக்கு இன்னும் வலுவாக உணர்த்தியிருக்கிறது.

அதேபோல, மருத்துவம் சார்ந்த பொருள்களின் உற்பத்தி நம் நாட்டில் இல்லாமல் போனது எவ்வளவு பெரிய ஆபத்து என கொரோனா தற்போது புரியவைத்துள்ளது. போர் வந்தால் தற்காத்துக்கொள்வதற்காக, முன்னெச்சரிக்கையாக ஆவடியில் டேங்க் தயாரிக்கும் இந்த அரசாங்கம், அதேபோல, இது போன்ற நோய் வந்தால் தற்காத்துக்கொள்ள மருத்துவம் சார்ந்த கருவிகளையும் உபகரணங்களையும் ஏன் முன்னெச்சரிக்கையாகத் தயாரிக்கக் கூடாது. சுகாதாரத்துறையை மேம்படுத்துவதைவிட இராணுவத்தை மேம்படுத்த நம் அரசுகள் காட்டிய ஆர்வத்தைக் கொரோனா கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. சுகாதாரத்துறையில் அதிக கவனம் செலுத்திய கியூபா இன்று உலக நாடுகளுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் தொற்றுநோய்ச் சட்டம் 1897, சுமார் 123 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பிளேக் நோய் வந்தபோது கொண்டு வரப்பட்ட சட்டம். இந்தச் சட்டத்தில், நோய்த் தடுப்புக்காக, அரசு எந்தவிதமான கட்டுப்பாடுகளை வேண்டுமானாலும் கொண்டுவரலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது. அதேவேளை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு குறித்து இந்தச் சட்டத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. அதேபோல, நோயாளிகளுக்கும் எப்படி சிகிச்சையளிக்க வேண்டும் என்பன போன்ற அவர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் குறித்தும், நோயாளிகள் அல்லாத மக்களின் உரிமைகள் என்ன என்பது குறித்தும் இந்தச் சட்டத்தில் எந்த விஷயமும் சொல்லப்படவில்லை. அதனால், அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக, புதிய தொற்றுநோய்ச் சட்டம் ஒன்றை இந்த அரசாங்கம் கொண்டுவரவேண்டும் என்பதையும் கொரோனா நமக்கு உணர்த்தியிருக்கிறது’’ என்கிறார் தோழர் தியாகு.

மும்பை பாந்த்ராவில் கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள்
மும்பை பாந்த்ராவில் கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள்

‘’மாநில அரசுகளுக்குப் போதிய அதிகாரம் இல்லை. மத்திய அரசு எல்லா மாநிலங்களையும், எல்லா மொழியினங்களையும் சமமாக நடத்தவில்லை. இதன்மூலம், இந்திய அரசு கடைப்பிடித்துவரும் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது கொரோனா'' என்கிறார் பேராசிரியர் ஜெயராமன்.

‘’கொரோனா தடுப்பு நிதியாக, 9,000 கோடி, மருத்துவ உபகரணங்கள் வாங்க 3,000 கோடி, உடனடியாக 1,000 கோடி, ஜி.எஸ்.டி நிலுவை பாக்கி 12,000 கோடி ஆகியவற்றைக் கேட்டு மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியாக சுமார் 500 கோடியை மட்டும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. ஆனால், இது கொரோனா சிறப்பு நிதி அல்ல. கொரோனாவுக்காக இன்னும் மத்திய அரசு ஒரு பைசா கூட தமிழகத்துக்குக் கொடுக்கவில்லை. மாநிலப் பேரிடர் நிதி அறிவிக்கும்போதுகூட, சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை.

உங்கள் மன்னிப்பு அங்கே நடந்துகொண்டிருக்கும் சகோதரர்களுக்கு எட்டியிருக்காது பிரதமர் அவர்களே!

பாதிப்பு அடிப்படையில் பார்த்தால்கூட அப்போது தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், பாதிப்பே இல்லாத மாநிலங்களுக்கு அதிக நிதியும், தமிழகத்துக்குக் குறைவான நிதியும் வழங்கப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தாலும் கூடத் தமிழகத்துக்கு முறையான நிதி அறிவிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. நெருக்கடியான நேரத்திலும் தமிழர்களை, தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் கூட்டாட்சித் தத்துவத்தில் மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்பதை கொரோனா நமக்கு உணர்த்தியிருக்கிறது'' என்கிறார் பேராசிரியர் ஜெயராமன்.

பேராசிரியர் ஜெயராமன்
பேராசிரியர் ஜெயராமன்

தற்போது ஆட்சி செய்கிறவர்கள் சரியில்லை, இல்லை, இவ்வளவு ஆண்டுக்காலம் நாட்டை ஆட்சி செய்தவர்கள் செய்த பிழை என இதையும் அரசியல் ஆக்காமல், தேசத்து மக்களின் நலன் என்கிற புள்ளியில் ஆட்சியாளர்கள் சிந்தித்து பல மாற்றங்களைக் கொண்டுவரவேண்டிய காலகட்டம் இது.

செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு