Published:Updated:

லாக்டௌனால் மிச்சமான திருமணச் செலவு; ₹37 லட்சத்தை கொரோனா நிதிக்குக் கொடுத்த அருள்செல்வம்!

கொரோனா நிதி வழங்கும் மணமக்கள் அருள் பிரனேஷ் - அனு
கொரோனா நிதி வழங்கும் மணமக்கள் அருள் பிரனேஷ் - அனு

``எந்த எதிர்பார்ப்பும் இல்லாம செய்யப்படுற உதவி, பல மடங்கா மறுபடியும் எனக்குத் திரும்பக் கிடைப்பதைப் பல தருணங்கள்ல உணர்ந்திருக்கேன். இல்லாதவங்களுக்கு உதவுறதை விட மனசுக்கு திருப்தி கொடுக்கக்கூடிய விஷயம் வேறெதுவுமில்ல.''

``என் மகனோட கல்யாணத்துக்காக ரூ.50 லட்சம் ஒதுக்கி வச்சிருந்தேன். கொரோனா சூழல்ல ஆடம்பரமா கல்யாணம் செய்ய எனக்கு விருப்பமில்ல. லாக்டௌன்ல அதுகான வாய்ப்பும் இல்ல. அதனால, கல்யாணத்துக்கு ஒதுக்கி வச்சிருந்த காசை எடுத்து கொரோனா நிவாரண நிதிக்காகக் கொடுத்துட்டேன்’' எனச் சொல்லும் அருள்செல்வத்தின் வார்த்தைகளில் நிறைந்திருக்கிறது மனிதம்.

திருப்பூர் கருவம்பாளையம் கதர்காலனியைச் சேர்ந்தவர்கள் அருள்செல்வம் - மஞ்சுளா தம்பதி. இவர்களின் இரண்டாவது மகன் அருள் பிரணேஷ்க்கும், திருப்பூர் `விகாஸ் வித்யாலயா வித்யாசாகர்’ குழுமத்தைச் சேர்ந்த கௌரிசங்கர் - கவிதா தம்பதியின் மகள் அனுவுக்கும் ஜூன் 14-ம் தேதி காங்கேயம் வட்டமலை அங்காளம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

கொரோனாவுக்கு நிதி வழங்கிய புதுமணத் தம்பதியர்
கொரோனாவுக்கு நிதி வழங்கிய புதுமணத் தம்பதியர்
விழுப்புரம்:ரூ.51,000 கொரோனா நிவாரண நிதி!-மணக்கோலத்தில் அமைச்சரைச் சந்தித்து வழங்கிய புதுமணத் தம்பதி

கொரோனா ஊரடங்குக் காலகட்டம் என்பதால் உறவினர்கள் சிலரை மட்டுமே வைத்து எளிமையாகத் திருமணத்தை நடத்தியிருக்கின்றனர். எளிய முறையில் திருமணத்தைச் செய்ததால், திருமணத்துக்கு என ஒதுக்கி வைக்கப்பட்டதில் மிச்சம் ஆன ரூ37.66 லட்சம் பணத்தை, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் நலனுக்காக நன்கொடையாக வழங்கி அசத்தியிருக்கிறார் அருள்செல்வம்.

அந்த வகையில், திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு ரூ.5 லட்சம், பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்துக்கு ரூ.11 லட்சம், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் முதியோர் இல்லத்துக்கு ரூ.2 லட்சம் ரூபாய், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்துக்கு ஐ.சி.யு யூனிட் அமைக்க ரூ.7.66 லட்சம் மற்றும் மருத்துவச் செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்த சுமார் 8 குடும்பங்களுக்கு ரூ. 7 லட்சம் என மொத்தம் ரூ.37.66 லட்சம் ரூபாயை சேவை நிதியாக வழங்கியிருக்கின்றனர் அருள்செல்வம் குடும்பத்தினர்.

கொரோனா நிதி வழங்கும் மணமக்கள் அருள் பிரனேஷ் - அனு
கொரோனா நிதி வழங்கும் மணமக்கள் அருள் பிரனேஷ் - அனு

இதுகுறித்து அருள்செல்வத்திடம் பேசினோம்.

`` `சக்கரவர்த்தி பிளாஸ்டிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற பெயர்ல வாட்டர் டேங், சொட்டுநீர் பைப், பிவிசி பைப் போன்றவற்றை தயாரிக்கிற நிறுவனத்தை நான் நடத்தி வர்றேன். திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப்ல கெளரவத் தலைவராவும் இருக்கேன்.

2019-ல் என் முதல் மகன் அருள் பரத்துக்கு விமரிசையா திருமணம் செய்தேன். அதுல ரூ. 8.90 லட்சம் மொய்ப் பணம் கிடைச்சது. அதோட, என் பங்கா ரூ. 1.10 லட்ச ரூபாயைப் போட்டு மொத்தம் ரூ. 10 லட்சத்தை போலியோ ஒழிப்பு நிதிக்காக அரசுக்குக் கொடுத்தேன்.

பொதுவா, திருமணம் போன்ற நிகழ்வுகளின் போது மிச்சமாகும் உணவைத்தான் ஏழை, எளியோர்க்கு கொடுப்பாங்க. ஆனா, நான் கருவலூரில் உள்ள குழந்தைகள் இல்லத்துல இருந்து 50 குழந்தைகளைத் திருமணத்துக்கு அழைத்து வந்து, அவங்களை முதல்ல சாப்பிடவெச்சு, அவங்களுக்கு சில விளையாட்டுகளையும் ஏற்பாடு செஞ்சிருந்தேன். இப்படி, ஆரம்பத்திலிருந்தே என்னால முடிஞ்ச உதவிகளை இல்லாதவர்களுக்குச் செஞ்சுட்டு வர்றேன்.

Marriage
Marriage
Pixabay
விழுப்புரம்:ரூ.51,000 கொரோனா நிவாரண நிதி!-மணக்கோலத்தில் அமைச்சரைச் சந்தித்து வழங்கிய புதுமணத் தம்பதி

இந்த நிலையில, என் ரெண்டாவது மகன் அருள் பிரணேஷ் திருமணத்துக்குச் செலவு செய்றதுக்காக ரூ.50 லட்சம் ஒதுக்கி வெச்சிருந்தேன். கொரோனா காலகட்டத்துல என் மகனுக்கு விமரிசையா திருமணம் செய்ய வேண்டாம்னு நினைச்சேன். கொரோனா லாக்டௌனால அதுக்கான வாய்ப்பும் இல்ல. அதனால, எங்க உறவினர்கள் 40 பேர் மட்டும் கலந்துக்கிட்டு, எங்க குலதெய்வக் கோயிலான வட்டமலை அங்காளம்மன் கோயில்ல சிம்பிளா தமிழ் முறைப்படி தேவாரம் - திருவாசகம் பாடி திருமணம் செய்துவெச்சோம்.

திருமணத்துக்குனு ஒதுக்கி வெச்சதில் மிச்சம் ஆன பணத்துல, முதற்கட்டமாக ரூ. 37.66 லட்சம் பணத்தை கொரோனா நிதியாக மருத்துவமனைகளுக்கும், உதவி தேவைப்பட்ட குடும்பங்களுக்கும் கொடுத்திருக்கோம். இன்னும் ரூ.14 லட்சத்தை பெருந்துறையிலுள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடுக்க இருக்கோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம செய்யப்படுற உதவி, பல மடங்கா மறுபடியும் எனக்குத் திரும்பக் கிடைப்பதை பல தருணங்கள்ல நான் உணர்ந்திருக்கேன். இல்லாதவங்களுக்கு உதவுவதைவிட, மனசுக்கு திருப்தி கொடுக்கக்கூடிய விஷயம் வேறெதுவுமில்ல” என்றார்.

மனிதம் மீதான நம்பிக்கையை அருள்செல்வம் போன்ற மனிதர்களின் செயல்பாடுகள் வளர்க்கின்றன!

அடுத்த கட்டுரைக்கு